மாற்று அரசியல்

புதிய கட்சிக்கு ஒரு பூங்கொத்து

இமமுக/IMMK

மாற்று அரசியல் என்கிற பிரிவில் நம் முன் வைக்கப்படும் புதிய, நேர்மறையான விஷயங்களை நாம் ஏற்பதும் ஏற்காததும் இரண்டாவது படி; முதல் படியாக, குறைந்தபட்சம் அந்த விஷயங்களை சற்று கவனித்து முதுகில் தட்டி கொடுத்தாலே போதும் – அத்தகைய முன்னெடுப்புகள் இங்கே தொடரும், வளரும். அந்த வகையில் நாம் விரிந்த கண்களுடன் கவனிக்கத்தக்க விதத்தில் “இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி”யின் தேர்தல் அறிக்கை இருக்கிறது.

முன்குறிப்பு: 2021 தேர்தலில் ஒரு “மாற்று அரசியல்” கட்சி அல்லது கூட்டணிக்கே என் ஓட்டு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் யாருக்கு ஓட்டு போடுவது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை என்ற சூழலில், திறந்த மனதுடன் எழுதப்படும் பதிவு இது.

இமமுக

ரஜினி, தான் தொடங்கவிருந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்தவர்தான் அர்ஜுனமூர்த்தி. ரஜினி “நான் அரசியலுக்கு வரமுடியவில்லை” என்று சொன்ன இரண்டு மாதங்களுக்குப் பின் அர்ஜுனமூர்த்தி தொடங்கிய புதிய கட்சிதான் “இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி” (இமமுக). ரஜினியுடன் சில காலம் பயணித்தவர் என்பதால் ரஜினி முன்வைக்க இருந்த ஆன்மிக அரசியலின் சாயலும் தாக்கமும் இமமுகவில் இருக்குமோ என்ற எண்ணத்துடன் கவனிக்க தொடங்கினேன்.

கட்சி அறிவிப்பு அன்று “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (Inclusive Growth)”, “மக்கள் எளிதில் அணுகும் ஆட்சிமுறை” என சில கொள்கைகளை முன்வைத்தார் அர்ஜுனமூர்த்தி. அவர் வெளியிட்ட ஐந்து தொலைநோக்கு செயல்திட்டங்களில் நான்கு என்னை கவர்ந்தது –

  • பணியாளர்கள் பல்கலைக்கழகம் (Labour University)
  • கிராம வளர்ச்சி அதிகாரி நியமனம்
  • பத்தாம் வகுப்பு வரை கட்டாய விவசாய கல்வி
  • அதிகார பகிர்வுக்கு நான்கு துணை முதல்வர்கள் (ஒருவர் பெண், ஒருவர் பட்டியலினம், ஒருவர் சிறுபான்மை சமூகம், ஒருவர் அறிவுசார்த்துறை என பலதரப்பு பிரதிநிதித்துவம்).

தேர்தல் அறிக்கை

இரண்டு நாட்களுக்கு முன் இமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. “அட, இது புதுசா இருக்கே” வகையில் என்னை ஈர்த்த முக்கிய வாக்குறுதிகள் இங்கே –

  • உயர்தர தொழில்நுட்ப உதவியுடன் உற்பத்தியை பெருக்கும் ஸ்மார்ட் விவசாயம்
  • உடல் நலனையும், சமூகத்தின் கூட்டுறவையும் விளையாட்டு மூலம் வலுப்படுத்த மாவட்டம் தோறும் பிரம்மாண்ட விளையாட்டு வளாகங்கள்
  • “மது விலக்கு” என பேருக்கு சொல்வதைவிட, மது சார்ந்த சமூக கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும் வகையில் மதுக்கடைகள் மதியம் 2 மணிக்கு திறப்பு (9 மணிக்கு மூடல்)
  • மாறிவரும் காலத்திற்கேற்ப கூடுதல் வருவாய்க்காக ஒரே நேரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களில் பணி செய்ய வழிவகுக்கும் “இரட்டை வேலை வாய்ப்பு திட்டம்”
  • தமிழர்களின் வணிக கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் செட்டிநாட்டு கலாச்சாரத்தை பாதுகாக்க “செட்டிநாடு மாவட்டம்”
  • வேலை வாய்ப்பு சந்தை (“பணியாளர் பல்கலைக்கழக” திட்டத்துடன் இதையும் இணைத்து பார்த்தால் தொலைநோக்கு பார்வையின் முழு வீச்சு தெளிவாக தெரியும்)

“இதெல்லாம் சாத்தியமா, நிதி எப்படி வரும்?” என்ற கேள்விக்கு அர்ஜுனமூர்த்தியின் பதில் சுவாரசியமானது – “அரசு நிர்வாகத்தில் கிட்டத்தட்ட 62% பலன்தராத (Unproductive) வேலைகளை குறித்து வைத்துள்ளேன். அவற்றை சீர்செய்தாலே இதெல்லாம் சாத்தியம்.”.

தொழில்நுட்பம்

பொதுவாகவே எனக்கு “அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்பட்டால் நிர்வாக சீர்கேடுகளும் குறையும், வளர்ச்சியும் துரிதமாகும், இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்குமான இடைவெளி குறையும்” என்ற கருத்து உண்டு. அந்த நோக்கில், இமமுகவின் திட்டங்கள் பெருமளவுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக இருப்பது “நவீன சிந்தனை மற்றும் செயல்முறையுடன்” புதிதாக களமிறங்கும் கட்சி என்கிற முத்திரையை பதிக்கிறது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது வெறும் பேச்சளவில் இருக்காது என்பதை கட்சியின் சின்னத்தை (எந்திரன்/ரோபோ) அறிமுகப்படுத்தும் விதத்தில் காட்டி நம்பிக்கையூட்டினார் அர்ஜுனமூர்த்தி. திரையில் வரும் எந்திரன், Augmented Reality தொழில்நுட்பம் மூலம் சடாரென்று பார்வையாளர்கள் முன்னே குதித்து பேசிவிட்டு போகும். அந்த காணொளி உங்கள் பார்வைக்கு இதோ – https://twitter.com/immkofficial/status/1369308511289638912

வாழ்த்து

“மற்ற கட்சிக்காரர்களைப் போல் எங்கள் வேட்டிகளில் எந்த வண்ண கரையும் இருக்காது” என உறுதியளிக்கும் இமமுக 2021 தேர்தலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் எனக்கு கணிக்க தெரியவில்லை. ஆனால், “புதுமை + புத்துணர்ச்சி + காலத்துக்கேற்ற நவீனம்” என்று களம் புகுந்திருக்கும் இந்த கட்சி 2021 தேர்தலோடு நின்றுவிடாமல், தொடர்ந்து தொய்வின்றி செயல்பட்டால் வருங்காலத்தில் நேர்மறையான, வலிமையான மாற்று அரசியல் கட்சியாக உயர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வகையில், மாற்று அரசியல் விரும்பும் வாக்காளனாக முகமலர்ச்சியுடன் ஒரு பூங்கொத்து தந்து “இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி”யை வாழ்த்தி வரவேற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!