அலசல்

நெருப்பில் எரியும் செருப்பு

துக்ளக் 50-வது ஆண்டு நிறைவு விழாவில் திரு.ரஜினிகாந்த் “ராமர் – பெரியார்” குறித்துப் பேசிய பேச்சை திராவிட அரசியலார் “திரித்துப் பேசுகிறார்”, “இல்லாத ஒன்றை சொல்கிறார்”, “பெரியாரை அவமதிக்கிறார்” என்று சர்ச்சையாக்கி வருகிறார்கள். அது குறித்த தேடலும், தெளிவும் ஒரு கட்டுரையாக இங்கே.

குறிப்பு – இந்தத் தேடல் தனிப்பட்ட தேடல் அல்ல. சில “ரஜினி அபிமானி”கள் தேடித் தெளிந்தது.

ரஜினி பேச்சு

அவ்விழாவில் ரஜினி “ராமர் – பெரியார் – துக்ளக்” குறித்து பேசியது இதோ (அடைப்புக்குறிக்குள் இருக்கும் சொற்கள் கோர்வையான புரிதலுக்காக சேர்க்கப்பட்டவை) –

“1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள் (தலைமையில்), ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி – சீதை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை (அந்த சம்பவத்தை) வேறு பத்திரிக்கைகள் எதுவும் அச்சடிக்கவில்லை, சொல்லவில்லை. ஆனால் சோ சார் அதனை பத்திரிக்கை அட்டையிலேயே போட்டு, கடுமையாக விமர்சித்தார். அப்பொழுது மிகப்பெரிய கெட்ட பெயர் வந்தது, அப்பொழுது ஆண்டு கொண்டிருந்த திமுக அரசுக்கு. அந்த (துக்ளக்) பத்திரிக்கை யாருக்கும் கிடைக்க கூடாது என (திமுக அரசு) பறிமுதல் செய்தார்கள். அந்த பத்திரிக்கையை மறுபடியும் (சோ) அச்சடித்து வெளியே விட்டார். “ப்ளாக்”கில் (கறுப்பு சந்தையில்) போனது அந்த பத்திரிக்கை. 10 ருபாய்-ங்கற பத்திரிக்கை 50-ருபாய், 60-ருபாய் (என்கிற) மாதிரி போச்சு. டாக்டர் கலைஞர் அவர்கள் துக்ளக் பத்திரிக்கையை மிகப் பெரிதாக பிரச்சாரம் கொடுத்து அதை மிகப் பிரபலம் ஆக்கினார். அதனை (குறிப்பிட்டு) அடுத்த இதழிலேயே “நம்முடைய பப்ளிஸிட்டி மேனேஜர்” என (கலைஞரை சுட்டிக்காட்டி) சோ வெளியிட்டார்”.

திராவிட அரசியலார் “மறுப்பு”

மேற்சொன்ன பேச்சில் உண்மையில்லை என சில திராவிட இயக்க அரசியல்வாதிகள் மற்றும் “திராவிட அரசியல் ஆதரவு” பத்திரிக்கையாளர்கள் எதிர்வாதம் வைக்கிறார்கள். சிலர் ரஜினி மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்கள்.

பெரும்பாலான திக & திமுக ஆதரவாளர்கள் திரு.சுப.வீரபாண்டியன் (சுபவீ) தன் முகநூல் பக்கத்தில் எழுதிய மறுப்பு பதிவை பகிர்ந்து வருகிறார்கள். அந்தப் பதிவில் கவனிக்க வேண்டிய இரு முக்கியமான பகுதிகள் இங்கே –

சுபவீ மறுப்பில் முதல் முக்கிய குறிப்பும் கேள்விகளும்

சுபவீயின் மறுப்பில் முதல் முக்கிய குறிப்பு –

ரஜினி குறிப்பிடும் அந்த ஊர்வலம், 24.01.1971 அன்று சேலத்தில் நடைபெற்றது. அன்று அங்கு நடைபெற்ற இரண்டு நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், இரண்டாவது நாள், ஒன்றரை மைல் நீளத்திற்கு நடைபெற்ற பேரணி அது! அந்த மாநாட்டிற்குத் தடை கோரி, அன்றைய ஜனசங்கம் கட்சியினர் (இன்றைய பா ஜ க) கருப்புக் கொடி காட்டினர். அந்தக் கருப்புக்கொடிப் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்ததும் கலைஞர் அரசுதான்! கறுப்புக்கொடி காட்ட அங்கே கூடிய அந்தச் சிறு கூட்டத்தினரிடமிருந்து ஒருவர், ஐயா பெரியாரை நோக்கிச் செருப்பெடுத்து வீசினார். அது ஐயாவின் பின்வந்த ஒரு வண்டியில் போய் விழுந்தது. அந்த வண்டியில்தான் ராமர்,சீதை படங்கள் இருந்தன.

தானாய் வந்த செருப்பு, வீணாய்ப் போக வேண்டாம் என்று கருதிய ஒரு தொண்டர் அந்தச் செருப்பையே எடுத்து, ராமர் படத்தை அடித்தார். இதுதான் நடந்தது. முன்னால் சென்றுவிட்ட பெரியாருக்குக் கூட இந்த நிகழ்வு பிறகுதான் தெரியவந்தது.

செருப்பை எடுத்து வீசியவர்கள் பற்றி ரஜினி எதுவும் பேசவில்லை. அந்தக் கயமைத்தனத்தைக் கண்டிக்க அவருக்குத் துணிவில்லை. ஆனால் பிறகு நடந்த நிகழ்வைத் திரித்துக் கூறுகின்றார். ரஜினியைப் போலவேதான் அவருடைய”சோ சாரும்” செய்தியைத் திரித்து அட்டையில் வெளியிட்டார். பெரியார் ராமரைச் செருப்பால் அடிப்பதைப் போலவும், அதனைக் கலைஞர் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பதைப் போலவும் அட்டைப்படம் போட்டார். அதனால்தான் அது தடை செய்யப்பட்டது.

மேற்சொன்ன குறிப்பை படித்ததும் நமக்கு எழும் கேள்விகள் –

சுபவீ மறுப்பு விளக்கத்தின் படி, 1971ல் சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் ராமர், சீதை படங்கள் செருப்பால் அடிக்கப்பட்டது உண்மை. அப்படியெனில், ரஜினி எதை திரித்துவிட்டதாக சுபவீ சொல்கிறார்?

  1. (சுபவீயின் வாதத்தின்படி) பெரியாருக்கு தெரியாமல் நடந்தது என்பதால், அந்த ஊர்வலமே பெரியார் தலைமையில் நடக்கவில்லை என்கிறாரா?
  2. “செருப்பால் அடித்தோம், ஆனால் செருப்பு மாலை போடவில்லை” என்கிறாரா?
  3. ராமர், சீதை படங்கள் (அல்லது உருவ பொம்மைகள்??) உடையில்லாமல் (நிர்வாணமாக) வைக்கப்படவில்லை என்கிறாரா?
  4. சுபவீயின் வாதத்தின்படி, ராமர் படத்தை செருப்பால் அடித்தது எதேச்சையாக நடந்தது என்று எடுத்துக் கொண்டாலும் – ராமர் படத்தையோ/சிலையையோ அந்த ஊர்வலத்தில் எடுத்து சென்ற காரணம் என்ன? பல ஆண்டுகளாக ராமாயணத்தை திட்டியவர்கள் ராமரை கௌரவிக்கும் வகையிலா எடுத்து சென்றார்கள்? 

இப்படி இயல்பாக எழக்கூடிய கேள்விகளுக்கு பதில்/வலுவான வாதம் இல்லாத பதிவில், “ரஜினி பொய் பேசுகிறார்” என்கிற குற்றச்சாட்டு அபத்தமாக இருக்கிறது.

ஒரு வழக்கும் சில கேள்விகளும்

மேற்சொன்ன கேள்விகள் போக, ட்விட்டரில் நண்பர் Tamizhan_234 சில ஆழமான தரவுகளை முன்வைத்துள்ளார்.

1971 பிப்ரவரி மாதம் சின்ன அண்ணாமலை என்பவர் கலைஞருக்கு எதிராக “ராமனையும் முருகனையும் செருப்பால் அடித்தவனின் சிலைகளை திறந்த சீடருக்கா உங்கள் ஓட்டு” என்று சில சுவரொட்டிகள் தயார் செய்தார். சட்டப்பிரிவு 99-A CRPC பயன்படுத்தி அவற்றை கலைஞரின் திமுக அரசு பறிமுதல் செய்தது.  அரசின் இந்த செயலை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்குப் பிறகு,  அதில் வெற்றியும் பெற்றார்.

அந்த வழக்கில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் “ராமன் மற்றும் முருகனின் படங்களை அடித்ததை கண்டிப்பது மட்டுமே மனுதாரரின் உண்மையான நோக்கம் எனில், ‘ராமனையும் முருகனையும் செருப்பால்.அடித்தவனின் சீடருக்கா உங்கள் ஓட்டு’ என்று தலைப்பு அச்சிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்றே வாதிட்டார்கள். “செருப்பை யாரோ எறிந்தார்கள்; விழுந்த செருப்பை எடுத்து அடித்தார்கள்” என்கிற வாதத்தை (கதையை??) அரசு நீதிமன்றத்தில் சொல்லவில்லை.  அது போக, அரசு உள்துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் உரையில், சேலத்தில் நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துவிட்டதாக கூறியிருந்தார் (தீர்ப்பு பாரா 5).  ஆனாலும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் (பாரா 20) “சேலத்தில் அத்தகைய செயல்களை செய்தவர்களின் மேல் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

அந்த தீர்ப்பின் சில பக்கங்கள் இங்கே.

இந்த வழக்கை குறிப்பிட்டு நண்பர் இரு கேள்விகளை முன்வைக்கிறார் –

  1. சுவரொட்டி தயாரித்த நபர் “ராமனையும் முருகனையும் செருப்பால் அடித்தவனின்..” என்று பெரியரைத்தான் சுட்டியுள்ளார். தி.க.வின் வாதப்படி பெரியாருக்கு தெரியாமல் “ராமரை செருப்பால் அடித்த நிகழ்வு” நடந்திருந்தால், தி.க. ஏன் அந்த நபருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை?
  2. மேலும், உயர்நீதிமன்றத்தில் அரசு உள்துறை செயலாளர் சொன்னபடி, கலைஞர் அரசு இந்த விவகாரத்தில் யார் மீது தான் நடவடிக்கை எடுத்தது? செருப்பை தூக்கி எறிந்ததாக சொல்லப்படும் ஜனசங்க ஆட்கள் மீது நடவடிக்கை எடுத்ததா?

சுபவீ மறுப்பில் இரண்டாம் முக்கிய குறிப்பும் கேள்விகளும்

சுபவீயின் மறுப்பில் இரண்டாவது முக்கிய குறிப்பு –

துக்ளக் மட்டுமில்லை, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய நாளேடுகளும் செய்தியைத் திரித்து வெளியிட்டன. அம் மாநாட்டுத் தீர்மானங்களைக் கொச்சைப்படுத்தி எழுதின. அந்த ஏடுகள் மீது 1971 பிப். 9 ஆம் நாள் மான நட்ட வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கு 16.03,1971 அன்று நீதிபதிகள் கே. வீராசாமி, ராகவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்து ஏட்டின் சார்பில் நீதிமன்றம் வந்த ரங்கராஜன், ராமமூர்த்தி (அய்யர்) ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். பிறகு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

இந்த குறிப்பு குறித்து ட்விட்டரில் நண்பர் Tamizhan_234 சில எதிர்வாதங்களையும் கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

சுபவீயே குறிப்பிடுவது போல் இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி மீது போடப்பட்ட வழக்கு “அந்த மாநாட்டு தீர்மானத்தை திரித்து செய்தி வெளியிட்டது” பற்றியது; கடவுள் உருவங்களை செருப்பால் அடித்தது பற்றி அல்ல. அதே நேரம், உச்சநீதிமன்றம் வரை சென்ற இவ்வழக்கில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் (பாரா 4) சேலம் விவகாரம் குறித்து நாளேடுகளில் வந்த செய்தி தொடர்பாக “tableau alleged to be obscene and dipicting certain Hindu deities and mythological figures…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, “ஆபாசமான முறையில் இந்துக் கடவுள்களை சித்தரித்ததாக கூறப்படும்…”.  அந்த தீர்ப்பிலிருந்து ஒரு பக்கம் இங்கே –

உண்மையில் ஆபாசமான முறையில் இந்துக் கடவுளர் படங்கள் எடுத்துச் செல்லப்படவில்லை என்றால், அந்த நாளேடுகள் மீது தவறான செய்தியை (“ஆபாசமான முறையில்…” என) வெளியிட்டதாக ஏன் வழக்கு தொடரவில்லை? தீர்மானத்தை திரித்து வெளியிட்டதற்கு மட்டும் வழக்கு தொடுத்தது ஏன்?

இந்த வழக்கு மற்றும் நண்பரின் கேள்வியை வைத்துப் பார்க்கும்போதும், ரஜினி சொன்னதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவரது பேச்சுக்கு வலு சேர்க்கும் விதமாகவே இருக்கிறது.

மற்றும் சில ஆதாரங்கள்

புகைப்படங்கள்

“சேலம் ஊர்வலக் காட்சிப் படங்கள் 1971 தேர்தலில் (காமராஜ்) காங்கிரஸ் கட்சி வெளியிட்ட துண்டறிக்கைகளில் பயன்படுத்தப்பட்டன” என்ற தகவலோடு ட்விட்டரில் பகிரப்பட்ட புகைப்படங்கள் இங்கே –

1971ல், (தமிழ்நாட்டை சாராத) ஒரு ஆங்கில வார இதழ், சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் எடுத்து செல்லப்பட்ட கடவுள் உருவங்கள்/அட்டைகள் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் இந்துக் கடவுளர் படங்கள் ஆபாசமாக, நிர்வாணமாக சித்தரிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.

பெரியார் பேச்சு ஆடியோ – 1

நக்கீரன் டிவி வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ பதிவில் பெரியார் சேலம் மாநாடு பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். அதில் “கடவுள்களை பற்றிய ஆபாச சின்னங்களை வெளியிட்டேன், கடவுள்களை கண்டிக்கிற மாதிரி. … ராமனை கொளுத்துவது என ஏற்பாடு பண்ணி அதற்கு காரணங்களா ‘அவன் அயோக்கியன், இந்த மாதிரி பண்ணினான்; அந்த மாதிரி பண்ணினான்’ன்னு அட்டையில் எழுதி, துணியில் எழுதி ஊர்கோலத்தில் விட்டேன்” என்று தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு சுவாரசியமான விஷயம் – சுபவீ தன் “மறுப்பு” பதிவில் “முன்னால் சென்றுவிட்ட பெரியாருக்குக் கூட இந்த நிகழ்வு பிறகுதான் தெரியவந்தது” என்று சொல்கிறார். ஆனால் பெரியாரோ “நான் பின்னாலே வண்டியிலே வர்றேன். முன்னாலே மேளம், தாளம், அது, இதுன்னு நெடுக இந்த படமெல்லாம் போய்க்கிட்டு இருக்கு” என்கிறார். அப்படியெனில், யார் சொல்வது உண்மை? இது போக, சுபவீ சொல்வதற்கும் பெரியார் சொல்வதற்கும் இன்னும் சில முரண்பாடுகள் உள்ளன. அவை ஒரு சிறு விடியோவாக தொகுத்து இங்கே –

பெரியார் பேச்சு ஆடியோ – 2

“சாமியை செருப்பால் அடித்ததை (பற்றி பத்திரிக்கைக்காரன்) ஆரம்பித்தான். மறுக்கலே நான். பயந்தது உண்டு, எலெக்ஷன் போய்டுமோ என்னமோன்னு. … அதுக்காக என்ன பண்றது, நான் அடிக்கலேன்னு போய் சொல்றதா?” என பெரியார் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

வீரமணி பேச்சு வீடியோ

“ராமனை செருப்பால் அடித்துவிட்டு தேர்தலில் நின்றால் தமிழ்நாட்டில் நிறைய ஓட்டு கிடைக்கும் என்று தெரிகிறது” என தி.க. தலைவர் திரு.வீரமணி பேசிய வீடியோ ஒன்று –

நியூஸ்7 வீடியோ

டிசம்பர் 7, 2017 அன்று நியூஸ்7 வெளியிட்ட “சோ – அரசியலின் ஆயுத எழுத்து…!” வீடியோவில் சேலம் நிகழ்வு குறித்து படங்களுடன் சில குறிப்புகள் உள்ளன.

முடிவாக…

சுருக்கமாக – 1971ல் சேலத்தில், பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய “மூட நம்பிக்கை ஒழிப்பு” மாநாட்டு ஊர்வலத்தில் இந்துமத தெய்வங்களின் (ராமர், சீதை) உருவங்கள் செருப்பை/செருப்புகளை வைத்து அவமதிக்கப்பட்டது உண்மை. அந்த உண்மையை படங்கள் மற்றும் கார்ட்டூன் மூலமாக வெளியிட்ட துக்ளக் பத்திரிக்கையின் பிரதிகளை அன்றைய திமுக அரசு பறிமுதல் செய்ததும் உண்மை. மேலும், கடவுளர் உருவங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டதையும் ஆதாரங்கள்/குறிப்புகள் உணர்த்துகின்றன.  இவையாவும் ரஜினி எதையும் திரித்துப் பேசவில்லை என்பதையே நிரூபிக்கின்றன.

மொத்தத்தில், இந்த ஆண்டு போகி அன்று திரு.ரஜினிகாந்த் கொளுத்திய நெருப்பில் சில திராவிடப் “பெருமைகள்” எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் சாமி படத்தை/சிலையை செருப்பால் அடித்தது பெருமையாகவோ, புரட்சியாகவோ இருக்கலாம். இன்றைய நிலையில், அந்த நிகழ்வு (பல கடவுள் மறுப்பாளர்களுக்குக் கூட) அருவருக்கத்தக்க அநாகரிகமாகத் தெரிகிறது. அந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் “ரஜினி பொய் சொல்கிறார்”, “ரஜினி பெரியாரை அவமதிக்கிறார்” என்று சம்பந்தமில்லாமல் திசை திருப்பி எங்களைப் போன்றவர்களை உண்மையை தேடித் தெளிவடைய வைத்த திராவிட அரசியலாருக்கு நன்றி.

எந்தத் திராவிடப் “பெருமை” காமராஜரைப் புறக்கணிக்க வைத்ததோ, அதே திராவிடப் “பெருமை” ஆன்மிக அரசியலுக்கு உரம் போடுகிறது. கர்மாவில் அல்லது “வரலாறு திரும்புகிறது” (“History Repeats Itself”) என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள் காத்திருந்து பாருங்கள்.

3 comments
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!