அறிமுகம்

உங்களுக்கு என் அன்பு கலந்த வணக்கம்.

நான் யார்?

2016 தமிழக சட்டமன்ற தேர்தல் புள்ளிவிவரங்களின் படி, ஓட்டு போட்டவர்களில் 17% வாக்காளர்களின் பிரதிநிதி என்று சொல்லலாம். அதாவது, 4.29 கோடி வாக்காளர்களில் அதிமுக+, திமுக+, நோட்டா – இவற்றிற்கு ஓட்டு போடாத 75.5 லட்சம் வாக்காளர்களின் பிரதிநிதி. அதிமுக, திமுக- வின் அரசியல் தாண்டிய ஒரு மாற்று அரசியலை தமிழ்நாட்டில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்களின் முகமாக பார்க்கலாம்.

தமிழகத்தில் மாற்று அரசியல் என்ற விருப்பமும், ரஜினிகாந்த் அந்த மாற்று அரசியலுக்கான ஆற்றல் சக்தியாக இருப்பார் என்ற நம்பிக்கையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வலைத்தளமே இந்த தமிழ்நாடு 2.0  (www.tn2point0.com). பொதுவாக, 2.0 என்பது அடுத்தகட்ட, மேம்பட்ட நிலையை குறிக்கும். அது போக, 2.0விற்கும் ரஜினிக்கும் நெருங்கிய தொடர்பும் இருக்கிறது. அதனால், ரஜினி அவர்கள் கட்டமைக்கக்கூடிய மேம்பட்ட தமிழ்நாட்டு அரசியலும், தமிழ்நாடும் என்ற எண்ணத்துடன் தமிழ்நாடு 2.0 (tn2point0) என இந்த வலைத்தளத்திற்கு பெயர் வைக்கப்பட்டது. கால சூழ்நிலையால் ரஜினி அரசியலுக்கு வராமல் போனாலும் “ஆரோக்கியமான மாற்று அரசியலுக்கான” தளமாக பயணம் தொடர்கிறது.

நமது சமுதாயத்தில் இருக்கும் அரசியல் இரைச்சல்களைத் தாண்டி, நமது அரசியல் (வரலாற்று மற்றும் நிகழ்கால) அறிவு இருந்தால் அது பெரும் தெளிவு கொடுக்கும். அத்தகைய தெளிவுடன் நாம் எடுக்கும் ஜனநாயக முடிவுகள் நேர்த்தியான உயர்வுக்கு வழிவகுக்கும். இந்த tn2point0 வலைத்தளம், அத்தகைய “அறிவு, தெளிவு, உயர்வு” ஆகியவற்றை மையமாக கொண்ட பதிவுகளின் தொகுப்பாக இருக்கும்.

இந்த வலைத்தளத்தில் உள்ள பதிவுகள், ஒரு அரசியல் மற்றும் சமூக பார்வையாளனின்  கருத்துக்களை, புரிதல்களை, எண்ணங்களை பிரதிபலிக்கும். மாற்று கருத்து உடையவரையும் சிந்திக்க வைக்கும் பொறுப்புணர்வுடன் பதிவுகள் இருக்கும் என உறுதி அளிக்கிறேன்.

tn2point0 குறித்து ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட சிறு காணொளி இங்கே –

வாருங்கள், உரையாடுவோம்…

error: Content Copyrights Reserved !!