2021 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுக்கான மாற்று அரசியல் கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை தேர்ந்தெடுத்து வாக்களித்தேன். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் “கமல் கட்சிக்கு ஓட்டு ஏன்? 5 காரணங்கள்” என ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன். வீடியோ முகவரி இதோ – மநீமவுக்கு ஓட்டு போட 5 காரணங்கள்.
தேர்தல் முடிந்து, மநீம தோல்வியுற்று, அதிமுக ஆட்சியை இழந்து, திமுக ஆட்சி அமைத்துவிட்டாலும் அந்த காரணங்களில் மாற்றமில்லை. வருங்காலத்திலும் தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான தேவை இருப்பதை உணர்த்தும் காரணங்கள் அவை. எனவே அவற்றை தொகுத்து ஒரு எழுத்துப் பதிவாக இங்கே.
1. புதிய/முதல் தலைமுறை அரசியல்வாதிகள்
புதிய தலைமுறையாக, முதல் தலைமுறை அரசியல்வாதிகள் பலர் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் களத்தில் இருந்தார்கள். VRSல் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, அப்துல் கலாமிற்கு ஆலோசகராக இருந்தவர், அமெரிக்காவில் வேலை செய்வதை விட்டுவிட்டு இங்கே மக்கள் பணி செய்யலாம் என வந்த இளம் தலைமுறை, கட்டப் பஞ்சாயத்து செய்யாமல் “சட்டப்பஞ்சாயத்து இயக்கம்” நடத்தி மக்களுக்கு அன்றாட பிரச்சினைகளில் சட்ட உதவிகள் செய்தவர்கள், பெரிய படிப்பு படித்தாலும் சமூக சேவையை முழுநேரப் பணியாக எடுத்துக்கொண்டவர்கள், 50 வயதுக்கு கீழ் உள்ள இளம் தலைமுறை அரசியல்வாதிகள் – இப்படி ஒரு புதிய படையே உள்ளே இறங்கியது.
இவர்களிடம் கவனிக்க வேண்டிய முக்கிய ஒற்றுமை – இவர்கள் யாரும் அரசியலை தொழிலாக பார்க்கவில்லை. இவர்களுக்கு வேலை அல்லது தொழில் என பொருள் ஆதாரத்திற்கு தடை இல்லாத வகையில் வேறொரு வருமான வழி இருக்கிறது. அதனால் அரசியலை மக்கள் பணியாகவே அணுகுகிறார்கள்.
2. பொறுப்புணர்வு (Accountability)
மேம்போக்காக “இதை செய்வோம், அதை செய்வோம்” என வாக்குறுதிகள் தராமல், அந்த பணிக்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் தன்மை பெரும்பாலான மநீம வேட்பாளர்களிடம் இருந்தது. அதற்கு இரண்டு உதாரணங்கள் சொல்லலாம் –
- “இந்த தொகுதியில் இன்னின்ன திட்டங்களை இந்த கால அவகாசத்தில் நிறைவேற்றுவோம். செயல்படுத்தாவிட்டால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம்” என்ற உறுதிமொழியை ஸ்டாம்ப் (bond) பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு பல மநீம வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தார்கள். கமல்ஹாசனும் பிரச்சார மேடைகளில் “இவர்கள் உறுதிமொழிக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்” என்றார். இந்த அணுகுமுறையே வித்தியாசமாக, ஆக்கப்பூர்வமாக இருந்தது.
- கல்வி, விவசாய கடன்களில் மநீமவின் அணுகுமுறை ஒரு கட்சியாக அதன் பொறுப்புணர்வை பறைசாற்றியது. “மூன்று வருடங்களில் பொருளாதார மேம்பாட்டை செய்வோம். அந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் வட்டியை தள்ளுபடி செய்வோம். கடன் வசூலிப்பை நிறுத்தி வைப்போம். பொருளாதார மேம்பாட்டின் காரணமாக இளைஞர்களும் விவசாயிகளும் கடன் தொகையை திருப்பி செலுத்தும் நிலையை உருவாக்குவோம்” என்ற மநீம நிலைப்பாடு சமூக அக்கறையும் பொறுப்பும் நிறைந்தது என்றால் மிகையில்லை.
3. “மக்கள் = மனித வளம்” என்ற பார்வை
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை மக்களை ஒட்டு வங்கியாக பார்க்காமல் மனித வளமாக பார்க்கிறது. அதனால்தான் போகிற போக்கில் இலவசங்களாக அறிவிக்காமல், “ஏழைகளை செழுமைக்கோட்டுக்கு உயர்த்துவோம்”, “நல்ல கல்வி தந்து தொழில் முனைவோர்களை உருவாக்குவோம்” என மனிதவள மேம்பாடு சார்ந்த திட்டங்கள் நிறைய முன்வைத்திருக்கிறார்கள். திமுக, அதிமுக மீது நாம் வைக்கும் மிகப்பெரிய விமர்சனமே “தமிழகத்தில் உள்ள மனித வளத்திற்கும், திறமைக்கும் உரிய உயரத்திற்கு தமிழ்நாட்டை எடுத்து செல்லவில்லை” என்பதுதான். அந்த குறையை சரிசெய்ய முனைப்பு காட்டும் வகையில் மநீமவின் அணுகுமுறை இருக்கிறது.
4. தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்கள்
“நீலப்புரட்சி” என்ற நீர்வள மேம்பாடு சார்ந்த திட்டங்கள் (தமிழக நதிகள் இணைப்பு, நீர்வழிச்சாலைகள்), அப்துல் கலாமின் லட்சிய கிராமப்புற தற்சார்பு பொருளாதார திட்டமான PURA திட்டம், அடிப்படையான கல்வியை கொடுக்கும் முறைகளிலும் கற்றல் முறைகளிலும் பெரிய மாற்றங்கள் தந்து அரசுப்பள்ளி கல்வியையே தரமான கல்வியாக உயர்த்துவது, எல்லா துறைகளிலும் நவீன தொழில்நுட்ப (Artificial Intelligence, Block Chain, Robotics) பயன்பாடு – இப்படிப்பட்ட திட்டங்கள் தமிழக வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி செல்லக்கூடியவை.
மநீம தங்கள் வேட்பாளர் விண்ணப்பத்திற்கே Block Chain தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்கள். அதனால் நிச்சயமாக மேலே சொன்ன வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.
5. வேண்டாம் திமுக, வேண்டாம் அதிமுக
ஐந்தாவது காரணமாக சொல்வதால் இந்த காரணத்தை சாதாரணமாக எண்ண வேண்டாம். ஆம், “வேண்டாம் திமுக, வேண்டாம் அதிமுக” என்ற காரணம்தான். 2006 முதல் கடந்த பதினைந்து வருடங்களை எடுத்திக்கொள்ளுங்களேன் – திமுக ஆட்சி 5 வருடங்கள், அதிமுக ஆட்சி 10 வருடங்கள் நடந்திருக்கிறது. ஏதாவது ஒரு பெரிய தொலைநோக்கு வளர்ச்சி திட்டத்தை – தமிழ்நாட்டை வேறு தளத்திற்கு உயர்த்திய வளர்ச்சி திட்டத்தை – நிறைவேற்றியதாக சொல்ல முடியுமா? டிவி கொடுத்தது, மிக்சி கொடுத்தது போன்ற திட்டங்களை பேசவில்லை. நதிகள் இணைப்பு, விவசாயிகள் புரட்சி – இந்த மாதிரி ஏதாவது ஒரு திட்டம் சொல்ல முடியுமா?ஏதுமில்லை. லஞ்சம், ஊழலில் முன்னேறி இருக்கிறோம். மற்றபடி, திமுகவும் அதிமுகவும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை “மாநில சுயாட்சி”, “கச்சத்தீவை மீட்போம்” என அதே வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் தருகின்றன. இப்படிப்பட்ட மோசமான அரசியல் கலாச்சாரம் மாறுவதற்காகவே இங்கே இன்னொரு கட்சி பலம் பெறவேண்டும். அதற்காகவும் மக்கள் நீதி மய்யத்திற்கு என் ஓட்டு.