மாற்று அரசியல்

மநீம தேர்தல் அறிக்கை: புத்துணர்ச்சி

மக்கள் நீதி மய்யம் 2021 தேர்தல் அறிக்கை

வேட்புமனு தாக்கல் நிறைவு நாளில் (மார்ச் 19, 2021) மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியானது. 100+ பக்கங்களை பார்த்தபோது “திமுக தேர்தல் அறிக்கையை விட பெரிதாக இருக்கிறதே” என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் “இது அடுத்த தேர்தலுக்கும் சேர்த்து பத்து ஆண்டுகளுக்கான தேர்தல் அறிக்கை” என்ற குறிப்பு பார்த்ததும் “அப்போ சரி” என்றே தோன்றியது.

தேர்தல் அறிக்கையை தயாரிக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. பிரச்சினைகளை மேம்போக்காக சொல்லாமல் ஆங்காங்கே புள்ளிவிவரங்களோடு சொல்லி இருக்கிறார்கள். முன் வைக்கும் தீர்வுகளிலும் ஆரோக்கியமான, ஆழமான சிந்தனை வெளிப்படுகிறது.

மூன்று பளிச் திட்டங்கள்

என்னை “அட” போடவைத்த மூன்று சிறப்பான திட்டங்கள் கல்வி, அரசு நிர்வாக சீர்திருத்தம், தொழில்நுட்ப பயன்பாடு சார்ந்தவை. அவை –

 • கல்விக்காக 6% GSDP நிதி ஒதுக்கீடு, மக்கள் அரசுப் பள்ளிகளில் போட்டி போட்டுகொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் அளவில் தரமாக மாற்ற உத்திரவாதம், கற்றல் வழிமுறைகளில் மாற்றம், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி என கல்வித் தரத்தை பற்றிய அரசின் பார்வையை முழுமையாக மாற்றி நவீனப்படுத்தும் வாக்குறுதிகள் மிகவும் வரவேற்புக்குரியவை. மேலும், இளம் கல்வி, இடைநிலைக் கல்வி, மேல் பட்டபடிப்புக்கு தகுதிக்கல்வி என காலத்துக்கேற்ற மாற்றத்தை முன்வைக்கிறார்கள். “ஆங்கிலத்தில் எழுத்து மற்றும் பேச்சு திறனில் சரளமாக இருக்கும் அளவில் எட்டாம் வகுப்பு மாணவர்களே தயார் செய்யப்படுவார்கள்”, “விருப்ப மொழியாக மூன்றாம் மொழி” ஆகிய திட்டங்களும் வரவேற்புக்குரியவை.
 • அரசு அலுவலகங்களில் காகிதமற்ற நிர்வாகம் , அரசு ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் அக்கறை, லஞ்சம் ஊழலில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியிலான உடனடி நடவடிக்கை, அரசு அலுவலர்களின் பணி/செயல்பாடுகளை ஆய்வு செய்யும் Performance Appraisal System என நேர்மையாகவும் நேர்மறையாகவும் அரசு இயந்திரத்தை செயல்பட உந்தித்தள்ளும் நிர்வாக சீர்திருத்த திட்டங்கள் போற்றத்தக்கவை. முக்கியமாக, மக்களை அலைக்கழிக்காமல், அவர்களுக்கு தரமான சேவையை உறுதி செய்யும் வகையில் “தரமான சேவை உரிமை சட்டம்” (Right to Quality of Service) என்ற வாக்குறுதி நாம் இதுவரை கேட்டிராத புதிய அணுகுமுறை.
 • Artificial Intelligence, Robotics போன்ற நவீன தொழில்நுட்பத்தை அரசின் நிர்வாகத்திலும், அரசின் செயல்திட்டங்களிலும் பயன்படுத்த உறுதியளிக்கும் வாக்குறுதிகள் பரவலாக இருக்கின்றன. கழிவுகளை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்தாமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, Smart Agriculture எனப்படும் செயல்திறன் மிகுந்த வேளாண்மை, நீதித்துறையை கணினிமயமாக்குதல், கிராமப்புற தற்சார்பு பொருளாதாரம் என பல திட்டங்களில் நவீன தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது.

கடன்கள்: பொறுப்பான அணுகுமுறை

கண்ணை மூடிக்கொண்டு “கல்வி, விவசாய கடன்களை ரத்து செய்வோம்” என்ற தொலைநோக்கில்லாத வாக்குறுதியை மக்கள் நீதி மய்யம் தரவில்லை. மாறாக, “நாங்கள் மூன்று வருடங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். அதன் மூலம், மாணவர்கள் அனைவருக்கும் அவர்கள் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம். அது போல விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கேற்ற லாபத்தை ஈட்டும் சூழலை ஏற்படுத்துவோம். அதுவரை வட்டி தள்ளுபடி செய்யப்படும். அந்த மூன்று ஆண்டுகளுக்கு கடன் வசூல் நிறுத்திவைக்கப்படும். ஒருவேளை மூன்று ஆண்டுகளில் பொருளாதாரத்தை மேம்படுத்தாவிட்டால், கல்வி மற்றும் விவசாயக் கடன்களை வட்டியோடு தள்ளுபடி செய்கிறோம்” என்ற வாக்குறுதியை தருகிறது.

இப்படி தானும் பொறுப்பு எடுத்துக்கொண்டு, தன் குடிமக்களின் சிரமத்தையும் புரிந்து தற்காலிக சலுகை தந்து, அதே நேரம் அவர்களை அவர்களது பொறுப்பிலிருந்து விலக்கிவிடாமல் தக்கவைப்பதே ஒரு நல்ல, பொறுப்பான அரசின் செயல். மக்கள் நீதி மய்யத்தின் இந்த ஆக்கப்பூர்வமான மாற்று சிந்தனையை மனதார வரவேற்போம்.

மருத்துவ படிப்பிற்கு 7.5% ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பும் தீர்வும்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை தராமல், தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளும் விதமாகவே மருத்துவ படிப்பில் சேர 7.5% இட ஒதுக்கீடு முறையை அதிமுகவும் திமுகவும் ஆதரிக்கின்றன. இதை ஒரு தற்காலிக ஏற்பாடாக வைத்து அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்துவதாக இருந்தாலும் கூட, “பரவாயில்லை” என்று சொல்லலாம். ஆனால், அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகளை பார்த்தால் அவர்கள் இதை ஒரு நிரந்தர தீர்வாக்கி அரசு பள்ளி மாணவர்களை இந்த 7.5% அளவில் முடக்கிவிடுவார்கள் என்றே தெரிகிறது.

நியாயமான தீர்வு என்பது, அரசு பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளில் மாற்றம் கொண்டுவந்து தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களை உயர்த்துவதுதான். அப்பொழுதுதான் – நீட் இருந்தாலும், இல்லாவிட்டாலும் – அதிக கிராமப்புற/அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். இதை செய்வதாக உறுதி அளிக்கிறது மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை – “தரமான கல்வியை அரசு பள்ளியிலும் கல்லூரியிலும் அரசு கொடுத்தால் தனியார் கல்விக்கு ஏன் போட்டி? மக்களுக்கு ஏன் செலவு? இதை உடனடியாக மாற்றுவோம்” (தேர்தல் அறிக்கை பக். 35).

இந்த வாக்குறுதியோடு நிற்காமல், “7.5% என்ற உள்ஒதுக்கீடு ஏமாற்று முறை ஒழிக்கப்பட்டு 85% MBBS ஒதுக்கீட்டில் 100% பெறும் நிலை உருவாக்கப்படும்” (பக். 41) என்றும் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். “ஏமாற்று முறை” என்று அதிமுக, திமுகவின் அணுகுமுறையை வெளிச்சமிட்டு சுட்டியதற்கும், நிரந்தர தீர்வை முன்வைத்ததற்கும் மக்கள் நீதி மய்யத்திற்கு பாராட்டுகள்.

அறநிலையத்துறை

கமல்ஹாசனின் “கடவுள் மறுப்பு” (அவர் வார்த்தைகளில் “பகுத்தறிவு”) பல வருடங்களாகவே நமக்கு தெரிந்த விஷயம்தான். அவருடைய “பெரியார் அபிமானமும்” தெரிந்த விஷயம்தான். ஆனால், அவரது இந்த சொந்த நிலைப்பாட்டை தன் கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் அவர் திணிக்கவில்லை. இதற்கு சான்றாக மநீம தேர்தல் அறிக்கையில் சில வாக்குறுதிகள் இருக்கின்றன.

 • பாழடைந்த கோவில்கள், புராதான கோவில்கள் மறுபுனரமைக்கப்படும். அது வரலாற்றின் தொன்மை மாறாமல், ஆவணப்படுத்தப்பட்டு அப்படியே உயிர்பிக்கப்படும்.
 • கிராம பூசாரிகளின் வழி வழி வந்த உரிமை, அவர்களது குலதெய்வ கோவில்களை நிர்வகிக்கும் உரிமை அவர்களுக்கு கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க அறநிலையத்துறையின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
 • அனைத்து கிராம குலதெய்வ கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யவும், அதன் கட்டமைப்பை மேம்படுத்த நிதி உதவி அளிக்கப்படும்.
 • இந்து கோவில்கள் – சைவம், வைணவ கோவில்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள் புனரமைக்கப்பட்டு சீரமைக்கப்படும்.
 • கோவில் பூசாரிகளின் நிரந்தர வருமானத்திற்கு அரசு வழிவகை செய்யப்படும். அதன் மூலம் அவர்களது தெய்வீக பணி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போக, சிறுபான்மையினரது மதம் சார்ந்த சுற்றுலாக்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்த வாக்குறுதியும் இருக்கிறது. வரவேற்புக்குரிய இந்த வாக்குறுதிகள் நமக்கு சொல்வது – தனிப்பட்ட “நடிகர்” கமல் ஒரு “அரசியல் கட்சி தலைவர்” என மாற்றம் அடையும்போது பல்வேறு நம்பிக்கைகளையும் அரவணைத்து செல்லவேண்டும் என நன்கு உணர்ந்திருக்கிறார். இது ஆரோக்கியமான மாற்றமே.

சில தொலைநோக்கு திட்டங்கள்

 • அப்துல் கலாமின் லட்சிய திட்டமான PURA என்ற கிராம மறுமலர்ச்சி திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கிறார்கள். இது நடைமுறைப்படுத்தப்பட்டால், கிராமங்கள் சார்ந்த வணிகம் பெருகி கிராமங்களின் பொருளாதார தற்சார்பு உறுதிப்படுத்தப்படும்.
 • எல்லோரும் வறுமைக்கோடு பற்றி பேசும்போது, மக்கள் நீதி மய்யம் “செழுமைக்கோடு” பற்றி பேசி இன்றைய ஏழைகளை அந்த “செழுமைக்கோட்டுக்கு உயர்த்துவோம்” என்கிறது. இது நேர்மறையான அணுகுமுறை.
 • “நீலப்புரட்சி” என்ற நீர்வள மேம்பாடு சார்ந்த திட்டங்கள் – தமிழக நதிகள் இணைப்பு, வெள்ள நீராக கடலில் வீணாக கலக்கும் 3000 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் திட்டம், பக்கத்து மாநிலங்களுடன் புரிந்துணர்வுடன் பகிர்ந்து தண்ணீர் பிரச்சினை வராத நிலைக்கு நீர்வரத்தை சரி செய்வது, நீர்வழிச்சாலைகள் அமைத்து அதன் மூலம் போக்குவரத்தையும் வருமானத்தையும் பெருக்குவது என தொலைநோக்கோடு சிந்தித்திருக்கிறார்கள்.
 • சிறு குறு வியாபாரிகள் “கந்து வட்டி” பிரச்சனைகளில் இருந்து மீள, அரசே “கடன் வங்கி” நடத்தி, குறைந்த வட்டியில் கடன் தருவதோடு சரியாக திருப்பி செலுத்துபவர்களுக்கு சலுகைகளும் தருவதாக சொல்கிறார்கள். போக்குவரத்து துறை 1200 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. ஒரு அரசு பேருந்தை பராமரிக்க கிட்டத்தட்ட 7 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதுவே தனியார் பேருந்து ஒன்றை பராமரிக்க 2+ பணியாளர்களே போதும் என்கிற நிலை. ஒரு அரசு பேருந்தை பராமரிக்க 2 பணியாளர்கள் போதும் என்ற நிலையை உருவாக்க மக்கள் நீதி மய்யம் உறுதியளிக்கிறது. நஷ்டத்திற்கு மிக முக்கிய காரணங்கள் – எரிபொருள் செலவும், லஞ்சம் ஊழலும். 33% எரிபொருளுக்கு செலவிடப்படுவதால் மாற்று எரிபொருள் பயன்பாடுகளை ஆராயவும், ஊழலை ஒழிக்க வெளிப்படையான நிர்வாகத்தை தரவும் வாக்குறுதிகள் இருக்கின்றன.

குறைகள்

நிறைய நிறைகள் உள்ள மநீம தேர்தல் அறிக்கையில் நான் கண்ட குறைகள் –

 • ஈழத்தமிழர் பிரச்சினை சார்ந்த நிலைப்பாடுகள் பெருமளவிற்கு மதிமுக, நாம் தமிழர் கட்சி நிலைப்பாடுகளை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. இலங்கை தமிழர்கள் நம் பாசத்துக்குரியவர்கள்தான், ஆனால் இலங்கையின் இறையாண்மையை சமரசம் செய்யக்கூடிய அளவிற்கான தீர்வுகளை தமிழகத்தில் இருந்து பேசுவது சரியாகாது.
 • தமிழுக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் நல்லது என்றாலும், “தமிழை ஆராய்ச்சி மொழியாக்குவோம்”, “தமிழை சட்ட மொழியாக்குவோம்” என தாராளம் காட்டுவது நடைமுறை சிக்கல்களையும் புதிய பிரச்சினைகளையும் உருவாக்கும்.
 • கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள் அருமை. ஆனால், ஆர்வ மிகுதியால் கிராமப்புறங்களின் அழகியல் தன்மை சமரசத்திற்கு உள்ளாகுமோ (உதாரணமாக, ஷாப்பிங் மால்கள் அமைப்பது) என்ற பயத்தையும் கவலையையும் சில வாக்குறுதிகள் தருகின்றன.
 • “நீட் தேர்வை நீக்குவோம்” என்பது மத்திய அரசின் ஒப்புதலின்றி நடைமுறை சாத்தியமில்லாதது.
 • “மணல் கொள்கை” குறித்த வாக்குறுதிகள் இருந்தாலும் “மணல் கொள்ளை”யை தடுப்பது குறித்த திட்டங்கள் ஏதும் சொல்லப்படவில்லை.

வீடியோ பதிவுகள்

இதுவரை சொல்லப்பட்டுள்ள கருத்துகளை தொகுத்து மூன்று வீடியோக்களாக வெளியிட்டுள்ளேன். அந்த வீடியோ பதிவுகளின் முகவரி –

நிறைவாக…

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ள பல நல்ல சிந்தனைகளையும் திட்டங்களையும் அளவுகோலாக வைத்து அரசின் வளர்ச்சி திட்டங்களை (எந்த அரசாக இருந்தாலும்) அணுகலாம். மொத்தத்தில், குறைகள் குறைவாகவும் நிறைகள் மனதுக்கு நிறைவாகவும் உள்ள திட்டங்களை முன்வைக்கும் மநீமவின் தேர்தல் அறிக்கை புத்துணர்ச்சி தருகிறது. வரவேற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!