திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மத்திய அரசை “ஒன்றிய அரசு” என்றே அழைக்கிறார்கள். கேட்டால் அரசியலமைப்பு சட்டத்தில் “Union of States” (மாநிலங்களின் ஒன்றியம்) என இருக்கிறது என்கிறார்கள். திமுக மத்திய அமைச்சரவையில் பங்குபெற்ற காலத்திலெல்லாம் (18 வருடங்கள், 7 அமைச்சரவைகள்) இப்படி அழைத்ததில்லை. அப்பொழுது இதே அரசியலமைப்பு சட்டம் இல்லையா? எனவே, திடீரென்று இப்பொழுது திமுக இப்படி “ஒன்றிய அரசு” என அழைப்பதன் உள்நோக்கம்தான் கவனிக்க வேண்டிய விஷயம்.
ஒரு யூட்யூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி சொல்கிறார் – ஏன் இத்தனை காலமாக திமுகவுக்கு தெரியலையா, ஏன் ஒன்றிய அரசு என வலியுறுத்தவில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இத்தனை ஆண்டு காலமாக மத்திய – மாநில உறவுகளில் ஏதேனும் பிரச்சினை வந்தபோது, “நாங்கள்தான் மேலோன்” என்ற மனோபாவத்தை மத்திய அரசு காட்டியதில்லை. அதனால் அந்த சொல்லின் அழுத்தம் எங்களுக்கு தேவைப்படவில்லை.
திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தியின் பேச்சிலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால் – “மத்திய அரசின் ஆதிக்க மனப்பான்மையை தட்டி வைக்க, ஒன்றியம் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்” என்ற நிலைப்பாட்டில் திமுக இருக்கிறது. அதாவது, “மத்திய அரசு” என்று சொல்லும்போது இருக்கும் கௌரவமும் மரியாதையும் “ஒன்றிய அரசு” என்று சொல்லும்போது இல்லை என்பதை திமுக தெளிவாக உணர்ந்தே செய்கிறது. அப்படி செய்வதை நடுநிலை மக்கள் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதற்காக பயன்படுத்தும் கவசம்தான் “Union of States என்று அரசியலமைப்பே சொல்கிறதே” என்கிற வாதம்.
நம் கருத்து இதுதான் – திமுக இன்றைய மத்திய பிஜேபி அரசை மட்டம் தட்டும் நோக்கில், இந்திய அரசுக்கு உள்ள கௌரவத்தையும் மரியாதையையும் குலைக்கும் நோக்கில் செயல்படுகிறது. திமுக மத்திய அரசையோ, பிரதமரையோ விமர்சிப்பதில் நமக்கு பிரச்சினை இல்லை. வேண்டுமானால் இன்றைய மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு கூட போடட்டும். ஆனால், இந்திய அரசின் மாண்பை குறைக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். ஏனென்றால், இன்றைய இந்திய அரசின் தலைமையில் பிஜேபி, மோடி என்று இருந்தாலும் நாளை வேறு யாரோ வரலாம்; ஆனால், இன்றைய இந்திய அரசை மட்டம் தட்ட பயன்படுத்தப்படும் சொல், இங்கே மக்கள் – குறிப்பாக இளைய தலைமுறை – மனதில் ஆழமாக ஊன்றிப்போனால், அது வருங்கால தேசிய ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல.
ஏற்கனவே சீமான் போன்றவர்களால் விதைக்கப்படும் பிரிவினைவாதத்திற்கு உரம் போடும் இத்தகைய செயலை திமுகவும் திமுக தலைமையேற்று நடத்தும் மாநில அரசும் கைவிடவேண்டும். இல்லையேல், “திராவிட நாடு” கொள்கையை கைவிட்டாலும், மத்திய அரசுகளில் பங்கு வகித்திருந்தாலும், சித்தாந்த ரீதியில் “இந்திய தேசிய உணர்வை பெரிதாக மதிக்காத கட்சி” என திமுக மீது பொதுவாக உள்ள பிம்பம் மேலும் வலுப்பெறும்.
இந்த பதிவை படிக்கும் சிலர் “நீ என்ன பிஜேபியா?” என கேட்கக்கூடும். ஏனென்றால், இங்கே திமுகவை விமர்சித்தால் பிஜேபியாகத்தான் இருக்க வேண்டும் என்றொரு மாய பிம்பம் சமீப காலத்தில் இந்த இரண்டு கட்சிகளாலும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அப்படி கேட்பவர்களுக்கு பதில் – “நான் பிஜேபியும் இல்லை, காங்கிரசும் இல்லை. தமிழனுக்கு தனித்தன்மை உண்டு என்று பெருமைப்பட்டாலும், இந்தியன் என்பதில் கர்வம் கொள்ளும் தேசியவாதி. நான் பெரியார் stockம் இல்லை, வீர் சாவர்க்கர் stockம் இல்லை; தமிழ்ப்பற்றோடு இந்திய தேசியம் ஊட்டிய பாரதியார் stock”.
குறிப்பு: இது TN2.0 facebook பக்கத்தில் ஜூன் 11, 2021 அன்று எழுதிய பதிவு – https://www.facebook.com/TN2point0/posts/516183676482560