மாற்று அரசியல்

திமுக 1+ மாத ஆட்சி: கமல் செயல்பாடு

கமல்ஹாசன்

போன வாரம் பல பத்திரிக்கைகளும் சமூக ஊடகவாசிகளும் “முதல்வர் ஸ்டாலினின் 30 நாட்கள்” என பல அலசல் கட்டுரைகள் எழுதினார்கள். நம்மை பொறுத்தவரை இந்த ஆட்சியின் முதல் 100 நாட்களை அலசுவதே தெளிவான பார்வையை தரும் என நம்புகிறோம். அதே நேரம், திமுக அதிமுகவுக்கு மாற்றான ஒரு அரசியலை வரவேற்கும் தளமாக நம் TN2.0 தளம் இருப்பதால், நாம் 2021 தேர்தலில் ஆதரித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் கடந்த 1+ மாத கால அரசியல் செயல்பாடுகளை அலசுவது சரியாக இருக்கும் என தோன்றியதால் இந்த பதிவு. அவரது செயல்பாடுகளில் ப்ளஸ், மைனஸ் இரண்டுமே பேசுவோம்.

உள்ளடக்கம்

ப்ளஸ்

கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில் தவறவிட்ட வெற்றி, கட்சியின் வாக்கு விகித சரிவு – இவற்றால் ஏற்பட்ட பின்னடைவு ஒருபுறம், கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் வெளியேறியது (அதிலும் சிலர் ஊடகங்களின் பசியாற்றும் வகையில் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வெளியேறியது) ஒரு புறம், மற்றும் “கரைகிறதா கமல் கட்சி?”, “கட்சியை கலைப்பாரா கமல்?” என பரபரப்பு விவாதங்களை டிவி ஊடகங்கள் நடத்தியது ஒருபுறம் என பலமுனை தாக்குதல்களை கமல் எதிர்கொண்டார் என்பது உண்மை. இந்த தாக்குதல்களை சமாளித்து அவர் களத்தில் நிற்கிறார் என்பதும் உண்மையே.

உட்கட்சி விவகாரங்களாலும் ஆட்சியை விட்டு இறங்கி சில வாரங்களே ஆனதாலும் அதிமுக அமைதி காத்தது. “திமுக, அதிமுகவை வீழ்த்த தகுதி கொண்ட ஒரே ஆள்” என தன்னைத்தானே பிரகடனப்படுத்திக்கொண்ட சீமான் எங்கே போனார் என்பதே தெரியாத நிலை. அதிமுகவை ஜனநாயக ரீதியில் வென்றெடுப்போம் என சொன்ன தினகரனும் பெருமளவில் அமைதி. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 1+ மாதத்தில், நிறைய சமூக அக்கறை மிகுந்த பிரச்சினைகளுக்கு கமல்ஹாசன் ஆக்கப்பூர்வமாக கருத்துக்களை முன்வைத்தார். அவர் பேசிய பிரச்சினைகளின் பட்டியல் –

  1. பெட்ரோல், டீசல் விலை உயர்வு
  2. கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன்
  3. சில ஆசிரியர்களால் பாலியல் தொல்லைகளை சந்திக்கும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு
  4. லட்சத்தீவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறைகள்
  5. யானைகள் பாதுகாப்பு
  6. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதுகாப்பு
  7. கொரோனா காலத்தில் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நலன் பாதுகாப்பு
  8. கொரோனாவில் இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ்
  9. அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்
  10. +2 பொதுத்தேர்வு நடத்தப்படவேண்டும் என்ற குரல்
  11. டாஸ்மாக் கடைகள் திறப்பு
  12. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடு

இவற்றில் பெரும்பாலானவை பொதுவாக கண்டுகொள்ளப்படாத ஆழமான பிரச்சினைகள் (உதாரணமாக +2 தேர்வு நடத்தப்படாததன் பாதிப்பு, குழந்தை திருமணங்கள் போன்றவை) என்பது கவனிக்கத்தக்கது. இது போன்ற பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதில் கமல்ஹாசன் தொடர்ந்து முனைப்பு காட்டுவதோடு, தீவிரமாக செயல்பட்டு தீர்வை நோக்கி அரசை தள்ளவேண்டும்.

மைனஸ்

  1. மேலே சொன்ன கமல்ஹாசனின் எந்த கருத்தும் பெரும்பாலான மக்களை சென்றடையவில்லை என்பது பெரிய மைனஸ். பத்திரிக்கை ஊடகமும் சரி, டிவி ஊடகமும் சரி – இந்த கருத்துகளை மக்கள் முன் கொண்டு செல்லவில்லை. “மீடியா அப்படித்தான்” என்று விட்டுவிடாமல், இவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்யமும் முயற்சிகள் எடுக்காவிட்டால் “கமல்ஹாசன் இன்னும் அரசியலில் இருக்கிறாரா?” என்ற கேள்வியே மிஞ்சும். ஊரடங்கு காலத்தில் இணைய வழியிலேனும் அடிக்கடி பத்திரிக்கையாளர் சந்திப்பு, மக்கள் தொடர்பு என கமல்ஹாசன் இயங்குவது நல்லது.
  2. புதிய அரசு என்பதாலோ என்னவோ சில அதிமுக்கிய விவகாரங்களிலும் கமல்ஹாசன் மென்மையான விமர்சனங்களையே முன்வைக்கிறார். உதாரணமாக டாஸ்மாக் கடைகள் திறப்பு, +2 பொதுத்தேர்வு ரத்து போன்ற விஷயங்கள். ஆரோக்கியமான அரசியல் என்ற பெயரில் அழுத்தம் திருத்தமான விமர்சனங்களை செய்யாமல் போனால், மாற்று அரசியலை இங்கே வளர்த்தெடுப்பது சிரமம் என்பதை கமல்ஹாசனுக்கு நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.
  3. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான பேரறிவாளன் விடுதலை குறித்த கருத்தில், “அநீதியின் கொடுங்கரங்களில் பேரறிவாளன் சிக்கித் தவிப்பதாக” கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாடில் மட்டுமல்ல, மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட “ஈழம்” தொடர்பான நிலைப்பாடுகளிலும் மறுபரிசீலனை செய்வது நல்லது. இலங்கை தமிழர் விவகாரத்தில் மநீம இன்னொரு மதிமுகவாக மாறிவிடாத கவனம் அவசியம்.
  4. “Union” என்ற ஆங்கில சொல்லை வைத்து மத்திய அரசை “ஒன்றிய அரசு” என மட்டம் தட்டும் வேலையை திமுக செய்கிறது. பிஜேபி தலைமையிலான மத்திய அரசு எதிர்ப்பு வேறு, இந்திய தேசிய உணர்வை மட்டுப்படுத்தும் “இந்திய அரசு எதிர்ப்பு” வேறு என்பதை கடுமையான கண்டனங்கள் மூலம் திமுகவிற்கு தெரிவிக்க வேண்டிய சூழல் இது. இப்போதைக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மட்டுமே இதை தீவிரமாக முன்னெடுத்திருக்கிறார். அகண்ட திராவிடம் பேசும் கமல்ஹாசன் இந்திய தேசியத்தையும் சமரசம் செய்துகொள்ளமாட்டார் என்ற நிலையே சரியான மையவாதமாக இருக்கும்.

இறுதியாக

2021 தேர்தலில் மாற்று அரசியல் என பேசிய இரு முக்கிய கட்சிகள் கிட்டத்தட்ட முடங்கி இருக்கும் நிலையில், மாற்று அரசியல் கட்சியாக மக்கள் மனதில் மையம் கொள்ளும் பெரிய வாய்ப்பு மக்கள் நீதி மய்யம் முன்னே இருக்கிறது. இதனை சரிவர கமல்ஹாசன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!