மதிப்பிற்குரிய திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,
மக்கள் நீதி மய்யத்திற்கு 2021 தேர்தலில் ஓட்டு போட்ட 10+ லட்சம் வாக்காளர்களில் ஒருவனது கடிதம் இது. நீங்கள் “இதை செய்யவில்லை”, “அதை செய்யவில்லை”, “இப்படி செய்திருக்கணும்” என்று ஏதும் பேசப்போவதில்லை. அவற்றை நீங்களே அலசி ஆராய்ந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த மடல் “இனி என்ன செய்யலாம்” என்பது பற்றிய விரிவான பதிவு. திறந்த மனதுடன் படிக்க வேண்டுகிறேன்.
உள்ளடக்கம்
மூன்று அதிமுக்கிய கொள்கைகளை முன்னிலைப்படுத்துங்கள்
இங்கே பெரும்பாலானவர்களுக்கு மாற்று அரசியல் என்பது நுனிப்புல் வரையறையாக இருக்கிறது. “திமுக, அதிமுகவுக்கு மாற்றாக இன்னொரு கட்சி ஏன் வரவேண்டும்?” என்பதில் பிடிப்பு இல்லை. இந்த நிலையை மாற்ற, மக்கள் நீதி மய்யம் முக்கியமான மூன்று கொள்கைகளை தெளிவாக முன்வைத்து, மக்கள் மனதில் ஆழமாக வேரூன்ற செய்ய வேண்டும். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சி இங்கே வலுப்பெற வேண்டும் என்ற ஆர்வம் உள்ள வாக்காளனாக என் பார்வையில், மநீம கீழே சொல்லும் மூன்று கொள்கைகளை முன்னிறுத்தலாம்.
- நெறிபிறழாத மையவாதம் (Centrism)
- தமிழ்நாட்டின் மனிதவளத்திற்கேற்ற உயரிய வளர்ச்சி
- அனைவரையும் அரவணைக்கும் முழுமையான சமூகநீதி
- நெறிபிறழாத மையவாதம்: மையவாதம் என்பது அதீத இடதுசாரி சிந்தனைகளிலோ அதீத வலதுசாரி சிந்தனைகளிலோ ஆழ்ந்துவிடாமல், இரண்டு பக்கமும் உள்ள நல்லவைகளை எடுத்துக்கொண்டு, அல்லவைகளை வெளிச்சமிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சித்தாந்தம் என்பது என் புரிதல். இந்த மையவாதத்தை மக்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் மநீமவின் நிலைப்பாடுகளும் செயல்பாடுகளும் இருப்பது மாற்றத்திற்கு முக்கிய பங்களிக்கும். நீங்கள் அதிகமான இடதுசாரி சிந்தனையில் இருப்பதாக உள்ள விமர்சனத்தை முறியடிக்கும் வகையில் உங்கள் நிலைப்பாடுகளில் சிற்சில மாற்றங்கள் நிகழ்வது நல்லது.
- தமிழ்நாட்டின் மனிதவளத்திற்கேற்ற உயரிய வளர்ச்சி: பொதுவாக திமுக, அதிமுகவுக்கு மாற்று என பேசினால் “அப்போ திமுகவும் அதிமுகவும் ஏதும் செய்யலேன்னு சொல்றீங்களா?” என கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதற்கு சரியான பதில் தராததால் மாற்று கட்சிகளை திறந்த மனதுடன் வரவேற்கும் மனநிலை மக்களிடத்தில் இல்லை. “திமுகவும் அதிமுகவும் செய்திருக்கிறார்கள், ஆனால் இங்கே உள்ள மனிதவளத்திற்கும் திறமைக்கும் உரிய உயர்வை ஏற்படுத்தவில்லை” என்பதை தரவுகளுடன் மக்களிடம் மநீம பதிய வைப்பது அவசியம். எவரெஸ்ட் உயரத்தில் இருக்க வேண்டிய தமிழ்நாட்டின் வளர்ச்சியை தொட்டபெட்டா அளவிலேயே நிறுத்திவிட்டு, அதுவே சாதனை என்று திமுகவும் அதிமுகவும் தங்களை தாங்களே புகழ்ந்து கொள்கிறார்கள். அப்படி இல்லாமல், தமிழகத்திற்கு உரிய உயரிய வளர்ச்சியை எப்படி மநீம கொண்டுவரும் என்பதை இடைவிடாது மக்களிடம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
- அனைவரையும் அரவணைக்கும் முழுமையான சமூகநீதி: சமூகநீதியை “பிராமணர், பிராமணல்லாதார்” பிரிவினையிலேயே இன்னமும் மையப்படுத்தி வைத்திருப்பதும், குறிப்பிட்ட சில இடைநிலை சாதிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதுமே திமுக அதிமுகவின் “சாதனை” என்றால் மிகையில்லை. அப்படி இல்லாமல், வாய்ப்புகள் பல்வேறு சமூகங்களுக்கு பரவலாக்கப்படுவதிலும், சாதிய வட்டங்களை உடைக்கும் திறன் மேம்பாட்டிலும்தான் முழுமையான சமூகநீதி இருக்கிறது. சமூகநீதி “காவலர்களாக” காட்டிக்கொள்ளும் திமுக அதிமுகவை இந்த விஷயத்தில் வீரியத்துடன் மநீம எதிர்கொள்வது மிக மிக அவசியமானது. இல்லையேல் அரைகுறை “சமூகநீதி” லேபிளை வைத்தே அவர்கள் காலத்தை ஓட்டுவார்கள்.
கொள்கைகளை உள்வாங்கிய அரசியல் படையை உருவாக்குங்கள்
விவேகானந்தர் “நூறு துடிப்பான இளைஞர்களை கொடுங்கள், இந்தியாவையே மாற்றி காட்டுகிறேன்” என்றார். அது போலத்தான், மநீமவுக்கு தேவை துடிப்பான செயற்பாட்டாளர்கள் மட்டுமே. அவர்கள் லட்சக்கணக்கில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. “மாற்று அரசியலை பயிரிட்டு அறுவடை செய்வோம்” என்ற பிடிப்பும் துடிப்பும் மிக்கவர்களாக ஆயிரக்கணக்கில் இருந்தாலே போதும். அப்படிப்பட்டவர்களை உள்ளடக்கிய இயக்கமாக மநீமவை மாற்றுங்கள்.
நீங்கள் எந்த கொள்கைகளை முக்கியமானவையாக முன்வைக்கிறீர்களோ, அந்த கொள்கைகளை உங்கள் கட்சியின் நிர்வாகிகள், பேச்சாளர்கள் என அனைவரும் உள்வாங்குதல் (internalize செய்தல்) அதிமுக்கியமானது. “ஏன் மநீமவுக்கு ஓட்டு போட வேண்டும்?” என்ற கேள்வியை கேட்கும்பொழுது, தென்பகுதியில் ராமநாதபுரம் மநீம நிர்வாகியின் பதிலும் வடபகுதியில் கிருஷ்ணகிரி மநீம நிர்வாகியின் பதிலும் ஒரே தளத்தில் இருக்குமானால், கட்சியின் கொள்கைகள் அடிமட்டம் வரை ஆழமாக இறங்கி இருக்கிறது என்றாகும்.
எப்படி உடம்பின் அத்தனை செல்களும் ஒருங்கிணையும்போது ஆகச்சிறந்த பலம் கிடைக்கிறதோ, அப்படி கட்சியின் தலைமையிலிருந்து அடிமட்ட உறுப்பினர்கள் வரை ஒரே சீராக பேசும்போது மநீமவின் ஒலி மாநிலமெங்கும் பலமாகப் பரவும்.
இப்போது உங்கள் கட்சியிலிருந்து விலகிப்போகிறவர்களுக்கு “உடனடி வெற்றி”யில் மட்டுமே பிடிப்பு இருப்பதாக தெரிகிறது. அப்படிப்பட்டவர்களை ஒதுக்கிவிட்டு, உங்கள் மீதோ, உங்கள் கட்சியின் கொள்கைகள் மீதோ பிடிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் பொறுப்பும் பதவியும் தந்து அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்குங்கள். பழ.கருப்பையா போன்ற மூத்த, அனுபவம் வாய்ந்த பேச்சாளர் தலைமையில் ஒரு பேச்சாளர் அணி அமைத்து திறமையான பேச்சாளர்களை உருவாக்குங்கள்.
இப்படி உருவாகும் அடுத்த கட்ட தலைவர்கள், பேச்சாளர்களை வைத்து ஊருக்கு ஊர் கூட்டங்கள் நடத்தி தமிழக அரசியலில் மநீமவின் தேவையை பறைசாற்றுங்கள். பெருமளவில் பொதுமக்களையும் பங்கேற்க செய்யும் கருத்தரங்குகளை நடத்தி மாற்று அரசியலுக்கான கருத்துருவாக்கத்தை வலுப்படுத்துங்கள்.
மூன்று முக்கிய பிரச்சினைகளின் தீர்வுக்கு தொடர் குரல் கொடுங்கள்
அரசியல் விமர்சனங்கள் தாண்டி, பாமக நிறுவனர் ராமதாஸ் என்றால் “மதுவிலக்குக்காக அயராது குரல் கொடுப்பவர்” என மக்கள் மனதில் நல்ல அபிப்ராயம் இருக்கிறது. அதுபோல, கமல்ஹாசன் என்றாலோ, மக்கள் நீதி மய்யம் என்றாலோ மக்கள் மனதில் நிலைத்து நிற்கக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை விடாது குரல் கொடுங்கள். குரல் கொடுப்பதோடு, அந்த தீர்வை செயல்படுத்த கட்சி ரீதியில் முன்னெடுப்புகளை செய்யுங்கள்.
உதாரணமாக, “மணல் கொள்ளை” என்ற பிரச்சினையை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் எங்கு மணல் கொள்ளை நடந்தாலும் அதை மக்களிடம் வெளிச்சமிட்டு, அரசாங்கத்தின் கவனம் ஈர்த்து, தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து, மணல் கொள்ளையை தடுக்கும் பணியில் மநீம தொடர்ந்து ஈடுபட்டால் நிச்சயம் மண்வளம் காக்கும் கட்சியாக மக்கள் மனதில் நிலைபெறும்.
பெருவாரியான மக்களின் தலைவராக முன்னேறுங்கள்
பெருவாரியான வாக்காளர்கள் மனதில் நீங்கள் முதல்வர் வேட்பாளராக அமரும் தருணம்தான் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் வளர்ச்சியின் முக்கிய கட்டம். அதை நோக்கிய பயணத்திற்கு இன்று உங்களுக்கு தடைக்கற்களாக இருப்பவற்றை பட்டியலிடுகிறேன். திறந்த மனதோடு அலசி தீர்வு காணுங்கள்.
- “கமல் கடவுள் மறுப்பாளர், அதனால் அவர் கட்சி நாத்திக கட்சி” என்ற பிம்பம் – என் பார்வையில், நீங்கள் கடவுள் மறுப்பாளர் என்றாலும் அந்த தனிப்பட்ட கொள்கையை உங்கள் கட்சியில் திணிக்கவில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை, மதங்கள் கடந்து அனைவரையும் அரவணைக்கும் தன்மை உடையவர் நீங்கள் என்பதை பொதுமக்களிடம் அழுத்தம் திருத்தமாக பதியவைக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கும் மநீமவுக்கும் இருக்கிறது.
- “அகண்ட திராவிடம் பேசும் கமல் ஒரு குட்டி திமுகவை நடத்துகிறார்” என்கிற குற்றச்சாட்டு – திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அரசியல் நடத்துபவர், திராவிடம் என்ற சொல்லை கைவிடவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், திமுகவின் நிலைப்பாடுகளிலிருந்தும் கொள்கைகளிலிருந்தும் நீங்கள் எவ்வளவு வித்தியாசப்படுகிறீர்கள் என்பதை தெள்ளத்தெளிவாக நிறுவவேண்டியது அவசியம்.
- அடித்துப் பேசாத, மென்மையான பேச்சு – திமுக, அதிமுகவை சம அளவில் எதிர்ப்பதோடு, அவர்களுக்கு எதிரான கருத்துகளை அடித்துப் பேசுவதும் ஆணித்தரமாகப் பேசுவதும் மிக முக்கியம். உதாரணமாக, “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட (உள்) ஒதுக்கீடு கொடுப்பது ஏமாற்று வேலை” என்று தேர்தல் அறிக்கையில் அடித்துப் பேசியது போல் தொடர்ந்து பேச வேண்டும். ஏனென்றால் இங்கே எதிர்ப்பை மென்குரலில் பேசினால் அது பலவீனமான குரல் என்று தவறாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.
- குறைவான மக்கள் தொடர்பு – ஆரம்ப காலத்தில் வைகோவின் கட்சி வளர்வதற்கு அவரது நடை பயணம் பெரும் பங்கு வகித்தது. பின்னர் விஜயகாந்த் கட்சி வளர்வதற்கு அவர் ஊர் ஊராக கிராமங்கள் அளவில் முழுமையான பயணம் மேற்கொண்டது முக்கிய காரணம். அது போல, நீங்களும் எல்லா ஊர்களிலும் – குறைந்தபட்சம் கிராம பஞ்சாயத்து அளவில் – கால் பதிப்பது, உங்கள் கட்சியையும் கொள்கைகளையும் மக்கள் மனதில் பதிய வைக்கும். கோவை தெற்கு தொகுதியில் உங்களுக்கு ஏற்பட்ட மக்கள் தொடர்பு தமிழகம் முழுக்க விரியட்டும்.
நிறைவாக…
இன்று உங்களுக்கு 10+ லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆட்சி அதிகாரத்திற்கு அருகில் செல்ல வேண்டுமென்றாலும் கூட, குறைந்தது 1 கோடி வாக்காளர்களின் ஓட்டுகள் தேவைப்படும். 10 மடங்கு ஆதரவை அடுத்த 5 வருடங்களில் பெறுவது சாதாரண வேலை அல்ல. மேலே சொன்ன யோசனைகள், இந்த கடினமான அரசியல் பயணத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும் என தீர்க்கமாக நம்புகிறேன். இந்த நெடிய பயணத்தை ஒரு சுகமான சுமையாக ஏற்று தொடர்நடை போடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பலர் நீங்கள் வீழவேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், அந்த 10+ லட்சம் வாக்காளர்களின் பிரதிநிதியாக நான் சொல்கிறேன் –
கமல்ஹாசன் என்ற அரசியல்வாதியும், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியும் “நரை கூடிக் கிழப்பருவ மெய்தி, கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே, நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, இடர்களையெல்லாம் உடைத்து வளரவேண்டும் என்பதே உள்ளார்ந்த விருப்பம்.
நம்பிக்கை மற்றும் அன்புடன்,
மாற்று அரசியலை தேடும் வாக்காளன்
Parthasarathy
அவரிடம் நீங்கள் மிகவும் அதிகமாக எதிர் பார்க்கிறீர்கள்.அவர் வேறு ஏதோ காரணத்துக்காக எந்த வித
முன்னேற்பாடும் இல்லாமல் அரசியலுக்கு வந்தலர்.அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக முடித்து விட்டார்.சில்லரைக்கட்சிகளில் ஒன்றாக வருங்காலங்களில் இரு.பார்.
Parthasarathy
அவரிடம் நீங்கள் மிகவும் அதிகமாக எதிர் பார்க்கிறீர்கள்.அவர் வேறு ஏதோ காரணத்துக்காக எந்த வித
முன்னேற்பாடும் இல்லாமல் அரசியலுக்கு வந்தலர்.அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக முடித்து விட்டார்.சில்லரைக்கட்சிகளில் ஒன்றாக வருங்காலங்களில் இருப்பார்.
நதியல்ல, கானல் நீர்!! -
[…] +2 பொதுத்தேர்வு ரத்து: சரியா? “நாளை நமதே” என்ற கனவு மெய்ப்பட… மநீமவுக்கு ஓட்டு போட 5 காரணங்கள் மநீம […]