மாற்று அரசியல்

நதியல்ல, கானல் நீர்!!

மதிப்பிற்குரிய திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,

நான் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஓட்டு போட்ட வாக்காளன். இங்கே திமுக, அதிமுகவுக்கு மாற்றான வலுவான அரசியலை நீங்கள் நடத்துவதற்கு 2021 தேர்தலில் மநீமவுக்கு கிடைக்கும் வாக்குகளே உரமாகும் என்ற எண்ணத்தில், உங்கள் கட்சிக்காக கொஞ்சம் டிஜிட்டல் பிரச்சாரமும் செய்த வாக்காளன்.

2021 தேர்தலில் மநீம சொல்லிக்கொள்ளும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அப்பொழுது கிடைத்த 10+ லட்சம் வாக்குகள் ஒரு பெருங்கனவு பயணத்திற்கான நம்பிக்கை முதலீடாகவே தெரிந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் உங்களுக்கு மே 2021ல் ஒரு கடிதம் எழுதி இருந்தேன் [கடிதத்தின் இணைய முகவரி – https://www.tn2point0.com/letter-to-kamal-haasan/]. அந்த சமயத்தில்தான் நீங்களும் உங்கள் கட்சியினரிடம் கருத்து கேட்டு இருந்தீர்கள்.

என் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் இங்கே திமுக, அதிமுகவுக்கு மாற்றான அரசியலைத் தேடும் வாக்காளர்களின் பிரதிநிதித்துவ கடிதம் என்றே இன்றும் கருதுகிறேன். அந்த கருத்துக்களை ஒட்டி மநீமவின் செயல்பாடுகள் அமையும் என்ற நம்பிக்கையுடன் மநீமவின் வெளிப்புற ஆதரவாளனாக சில காலம் டிஜிட்டல் களமாடிக் கொண்டிருந்தேன்.

ட்விட்டர் வந்தால் மட்டுமே உங்கள் அரசியல் நிலைப்பாடுகள் தெரியவரும் என்கிற நிலை மாறாத சமயம், மநீம மீதான பிடிப்பு சற்றே தளர்ந்தது. கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தது போல், மநீம எந்தெந்த அதிமுக்கிய கொள்கைகளை முன்னெடுக்கிறது என்பது பற்றிய புரிதல் ஏற்படும் வகையில் செயல்பாடுகள் இல்லாதது தளர்ச்சியை இன்னும் அதிகமாக்கியது.

போதாதற்கு, மநீமவின் தேர்தல் அறிக்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு ஏமாற்று வேலை என்று சொல்லிவிட்டு அடுத்த சில மாதங்களில் ஏ.கே. ராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை பாராட்டியதும், 10% இட ஒதுக்கீடு வேண்டுமென்று சொன்னதும் முரணாகத் தெரிந்தது. திமுக, அதிமுகவின் அதே குரலை மநீமவும் வெளிப்படுத்துமென்றால், “மாற்றம் எங்கே?” என தோன்றத் தொடங்கியது.

மாநில சுயாட்சிக்கான பாதைகளை முன்னெடுத்தவர் கலைஞர் என உங்கள் அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருந்தீர்கள். இது உண்மைக்கு புறம்பானதாயிற்றே என்ற நெருடல் ஆக்கிரமித்தது. பின்னர், அக்டோபர் 2021ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் சமயம், மநீமவின் ஒரு பட்டியலின வேட்பாளரை திமுகவினர் மிரட்டி வேட்புமனுவை வாபஸ் வாங்க வைத்தார்கள். “இதுவா சமூகநீதி?” என்ற ஒரு பொருமல் ட்வீட் அறிக்கையோடு உங்கள் எதிர்வினை நின்றுவிட்டது. அந்த தேர்தல் பிரச்சாரங்களில் கூட நீங்கள் அந்த விவகாரத்தை மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக்கவில்லை.

இந்த காரணங்களால் மநீம மீது முழுநிலவாய் இருந்த நம்பிக்கை கிட்டத்தட்ட அமாவாசையாக மாறிவிட்டது. மீண்டும் வளர்பிறையாகலாமோ என்ற மிகச்சிறு எண்ணத்தையும் கூட உங்களுடைய சமீபத்திய செயல்பாடு ஒன்று உடைந்துவிட்டது. ஆம், முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன உங்கள் வீடியோதான் அது. அரசியலில் எந்த அணியில் இருந்தாலும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது ஆரோக்கியமான செயல்தான். ஆனால், அந்த வாழ்த்துரையில் நீங்கள் சொன்ன சில குறிப்புகள்தான் சற்றும் ஏற்க இயலாதவையாக இருக்கின்றன.

எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படுகிறார் ஸ்டாலின் என சொல்லியிருக்கிறீர்கள். கிராமசபை நடத்தவேண்டும் என்ற தொடர் குரலை திமுக ஆட்சியும் புறக்கணிக்கிறது என்று மநீமதானே சொல்லிவந்தது? எதிர்ப்போர் கருத்துக்கு இடமளித்திருந்தால் எளிதாக கிராமசபைகள் நடந்திருக்கலாமே…

தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக ஸ்டாலின் உருவெடுக்கிறார் என்கிற பொருள்பட பேசியிருக்கிறீர்கள். எனக்கு எழும் கேள்வி ஒன்றே ஒன்றுதான் – இப்பொழுது சட்டமன்ற தேர்தல் வருவதாக வைத்துக்கொள்வோம். “மக்களே, ஸ்டாலின் தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர்தான். ஆனால், அவரை தமிழ்நாட்டில் தவிர்த்துவிடுங்கள்; மாற்று கட்சி மநீமவின் தலைவரான என்னை முதல்வராக்குங்கள் என்றா ஓட்டு கேட்பீர்கள்??”.

உங்கள் வாதங்களின்படி ஸ்டாலின் அவ்வளவு உயர்ந்த தலைவர் என்றால், அவரது ஆட்சியே தொடரட்டுமே என்ற எண்ணமே மேலிடுகிறது. பிறகேன் மாற்றுக் கட்சிக்கெல்லாம் ஓட்டு போட்டு வாக்கை வீணடிக்கவேண்டும்?! உங்களுக்கு ஓட்டு போட்டாலும் அது ஸ்டாலினையும் திமுகவையும் உயர்த்திப்பிடிக்கத்தான் உதவுமென்றால், அந்த ஓட்டை நேரடியாகவே “குட்டிச் சூரியனின்” திமுகவிற்கு போட்டுவிடலாம்.

சமீப நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்குப்பின் வெளியிட்ட அறிக்கையில், “எங்களைப் போன்ற மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்தவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது” என்று வாக்காளர்களுக்கு நினைவூட்டினீர்கள். “மாற்று சக்தி” என்ற பதத்தில் சக்தியை தொலைத்துவிட்ட நோக்கில் உங்கள் நிலைப்பாடுகள் இருக்குமேயானால், வாக்காளர்கள் தங்கள் ஓட்டு சக்தியை தந்து உங்களை வலுவூட்டப் போவதில்லை. அது நியாயமும் இல்லை.

தமிழ்நாட்டின் சாபமென்பது – மாற்று அரசியல் என்ற மரத்தில் வளரும் கிளைகள் உறுதியாக இருப்பதில்லை; மிக விரைவில் ஒடிந்து விடுகின்றன. அதனாலோ என்னவோ, அந்தக் கிளைகளில் அமரும் பறவைகளுக்கு வேடந்தாங்கல்களுக்கான தேடல் நிற்பதே இல்லை.

இப்படிக்கு,
“நதியல்ல, கானல் நீர்” என்றுணர்ந்த மாற்று அரசியல் வாக்காளன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!