+2 பொதுத்தேர்வு – அது CBSE யாக இருந்தாலும், State Board ஆக இருந்தாலும் – ஒரு மாணவனின் வாழ்வில் முக்கியமான மைல்கல். +2 பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் எந்த ஒரு மாணவனின் மீதும் அவன் படிப்பாற்றலைப் பற்றி வைக்கக்கூடிய மதிப்புக்கு உரைகல் என்றால் அது மிகையல்ல.
எல்லா மாணவர்களும் மருத்துவம், பொறியியல் சேரவேண்டும் என்றோ அல்லது IIT, BITS என உயர்ந்தவற்றுள் உயர்ந்த கல்வி நிறுவனங்களில் சேரவேண்டும் என்றோ படிப்பதில்லை. அதனால் NEET, JEE மற்றும் சில நுழைவு தேர்வுகள் மட்டுமே மாணவர்களின் படிப்புத்திறனை அளவிட உதவாது. கலை, அறிவியல் போன்ற இளநிலை படிப்புகளில் சேரவிரும்பும் பெரும்பான்மையான மாணவர்களுக்கு அவர்களது +2 மதிப்பெண்களே மிக மிக அவசியமானது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, மத்திய அரசு CBSE +2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்ததும் (தமிழ்நாடு) மாநில அரசு State Board +2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்ததும் சற்றும் தொலைநோக்கு இல்லாத செயல் என்பதே நம் கருத்து. அப்படியென்றால் மாணவர்களின் உடல்நலனை சமரசம் செய்துகொள்ள வேண்டுமா என கேட்பவர்களுக்கு – ஆக்கபூர்வமான மாற்று வழிகளை இந்த அரசுகள் சரிவர பரிசீலிக்கவில்லை என்பதே நம் பதில்.
இப்படி யோசிப்போமே – “பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு இடத்திற்கு மாணவர்கள் தேர்வு எழுத வந்தால், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என்பதே அரசுகளின் இந்த முடிவுக்கு முக்கியமான காரணமாக தெரிகிறது. தேர்வு மையங்களை அதிகப்படுத்தி, மாணவர்கள் (அவர்கள் எந்த பள்ளியாக இருந்தாலும்) அவர்கள் பகுதியிலேயே தேர்வை எழுத வைக்கலாமே. உதாரணமாக, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மாணவன் தன் பள்ளி அண்ணாநகரில் இருப்பதற்காக அங்கே பயணிக்காமல், சைதாப்பேட்டையிலேயே ஒரு தேர்வு மையத்தில் எழுதும் வகையில் செய்யலாம். இதற்கான “வசிக்கும் பகுதி” விவரத்தை பள்ளிகள் மூலமாகவும், +2 தேர்வுக்கான விண்ணப்பங்கள் மூலமாகவும் பெற்று அதற்கேற்ற வகையில் தேர்வு மையங்கள் அமைக்கலாம்.
இப்படி ஏதோ ஒரு வகையில், மாற்று வழிகளை தீர ஆராய்ந்து, அவற்றை செயல்படுத்துவதில் ஏற்படும் இடர்களுக்கும் (உதாரணமாக, தேர்வு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது) Plan B அமைத்து செயல்படுத்தி இருக்கலாம். இங்கே யாரும் அரசுகள் உடனடியாக பொதுத்தேர்வு வைக்கவேண்டும் என கோரவில்லை. தேவையான கால அவகாசம் எடுத்தே செயல்படுத்தி இருக்கலாம். சுருக்கமாக சொன்னால் “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு”, ஆனால் மத்திய மாநில அரசுகள் மனம் வைக்கவில்லை. [குறிப்பு: தமிழ்நாட்டை பொறுத்தவரை, முந்தைய அதிமுக அரசுக்கும் இந்த விஷயத்தில் பொறுப்பு இருந்தது, அந்த அரசும் தன் பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டது என்பதை இங்கே பதிவு செய்கிறோம்].
இந்த விவகாரம் குறித்து, கல்வியாளர் துளசிதாசன் சமீபத்தில் (இந்து தமிழ் தினசரி 4.6.21 பேட்டி) சொன்னது – “கிட்டத்தட்ட 10 லட்சம் மாணவர்கள் (குடும்பங்கள்) சம்பந்தப்பட்ட விஷயம் இது. 6 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதியுள்ளவர்களில் கீழ் நடுத்தர வர்க்க மாணவர்களும் என்ன ஆவார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பதே அச்சம் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த கரோனா காலகட்டத்தில் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் கடந்த ஓராண்டில் பட்டிருக்கும் தொல்லைகளுக்கு அளவே கிடையாது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருப்பவர்களை அரசு, காலத்துக்குமான பாதிப்பில் தள்ளிவிடக் கூடாது.”. இது போல, அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் “தற்போதைய சூழலை மட்டும் மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவு மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றைச் சிதைத்துவிடக்கூடாது” என தெளிவான, ஆக்கபூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு எளிதான முடிவை நோக்கி போன வேளையில், இவர்களது தொலைநோக்கு பார்வை கொண்ட கருத்துகள் நமக்கு ஆறுதல் தருகின்றன.
இறுதியாக
+2 பொதுத்தேர்வுக்கான கேள்விக்குறியான சூழல் திடீரென வந்துவிடவில்லை. குறைந்தது மூன்று மாதங்கள் முன்பே இப்படிப்பட்ட சூழல் வரும் என தெரிந்தும், மாற்று ஏற்பாடுகளை யோசிக்காமல், மத்திய மாநில அரசுகள் தங்கள் நிர்வாக தோல்வியை “மாணவர்களின் உடல் நலன்” என்ற முகமூடியில் மறைத்துவிட்டார்கள். மாணவர்களின் கல்வியில் செய்யப்பட்ட இந்த சமரசம், தேசத்தின் வளர்ச்சியில் ஒரு கரும்புள்ளி என்பதில் சற்றும் சந்தேகமில்லை. கொரோனாவால் ஏற்படும் உயிர்பலிகளுக்கு நிகரானது இந்த கல்விப் பலியும். இதற்கான பெரும் விலையை வருங்காலத்தில் தேசம் கொடுக்கவேண்டி இருக்கும் என்பதே நம் வலி.
குறிப்பு: இது TN2.0 facebook பக்கத்தில் ஜூன் 7, 2021 அன்று எழுதிய பதிவு – https://www.facebook.com/TN2point0/posts/513631283404466