மாறாத அரசியல்

“நீட்” தேர்வு: வில்லா? முள்ளா?

“நீட் (NEET) தேர்வு ரத்து” விவகாரம் திரும்ப சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. இதுல கல்வியோடு அரசியலும் சேர்ந்திருப்பதால் இடியாப்ப சிக்கலாக இருக்கு. அது பத்தி விரிவா பேசுவோம்.

குட்டிக்கதை

“நீட்” குறித்த பிரச்சினை எளிதாக மனசுல பதிய, ஒரு குட்டிக்கதையுடன் ஆரம்பிப்போம். ஒரு சின்ன குழந்தை அழுதுட்டு இருந்தது. அந்த குழந்தையோட அப்பா, அம்மா மேம்போக்கா சமாதானம் பண்ணாங்க. அப்பப்போ அழுகை குறையும். அந்த நேரத்துல ஊர் பஞ்சாயத்து தலைவர் “எல்லா குழந்தையும் மாஸ்க் போடணும்”ன்னு ஒரு உத்தரவு போட்டாரு. மாஸ்க் போட்டதும் அந்த குழந்தை இன்னும் அதிகமா அழுதது. அப்பா, அம்மா பஞ்சாயத்து தலைவரை திட்ட ஆரம்பிச்சாங்க – மாஸ்க் போட்டதால் மூச்சு சிரமத்தால குழந்தை அழுவுதுன்னு. பஞ்சாயத்து தலைவர் “மத்த வீட்டு புள்ளையெல்லாம் அழுவலையே”ன்னு உத்தரவை மாத்த முடியாதுன்னு சொல்லிட்டாரு. அப்பா, அம்மா குழந்தைக்கு நிறைய சாக்லேட் வாங்கி கொடுத்து அழுகையை கட்டுப்படுத்தி வைக்கிறாங்க. ஒரு கட்டத்துல மாஸ்க் எடுத்திடறாங்க. குடும்ப டாக்டர் “சாக்லேட் இப்படி குடுக்கறது பல்லுக்கு, உடம்புக்கு கெடுதல். அதனால இனி கொடுக்காதீங்க”ன்னு சொல்லிடறாரு. இப்போ மாஸ்க்கும் இல்லை, சாக்லேட்டும் இல்லை. ஆனா, குழந்தை அழுகை மட்டும் நிற்கல. குழந்தைக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கும்போதுதான் தெரியுது அதுக்கு வயித்துல கட்டின்னு. அந்த கட்டியாலதான் வலி பொறுக்க முடியாம அழுதுருக்கு. கட்டியை ஆரம்பத்திலேயே சரி செஞ்சிருந்தா மாஸ்க் போடுறது ஒரு பிரச்சினையாவே இருந்திருக்காது, சமாதானத்துக்கு சாக்லேட்டும் தேவைப்பட்டிருக்காது.

இப்போ, இந்த கதையில் வர்ற கதாபாத்திரங்களை சொல்றேன் –

 • குழந்தை – அரசு பள்ளி மாணவர்கள்
 • அப்பா, அம்மா – திமுக, அதிமுக அரசுகள்
 • பஞ்சாயத்து தலைவர் – மத்திய அரசு
 • மாஸ்க் – “நீட்” தேர்வு
 • சாக்லேட் – 7.5% இட ஒதுக்கீடு
 • குடும்ப டாக்டர் – கோர்ட்
 • வயித்துல கட்டி – அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையான கல்வி இல்லாத சூழல்

புரிஞ்சதுங்களா?

“நீட்” மட்டுமே வில்லனா?

கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளிகளில்தான் படிக்கிறாங்க. அப்படி அரசு பள்ளிகளில் படிக்கிறவங்களுக்கு டாக்டர் படிப்பு சேருறதுங்கறது குதிரைக்கொம்பா இருக்கு. இதுதான் அடிப்படை பிரச்சினை. இப்படி அவங்க டாக்டர் படிப்பு படிக்க முடியாம போறதுக்கு “நீட் தேர்வுதான் வில்லன்”ன்னு தமிழ்நாட்டுல பெரும்பாலான கட்சிகள் சொல்றாங்க. ஆனா, புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்றது என்னன்னா “நீட் தேர்வு மட்டுமே வில்லன் இல்லை“ங்கறதுதான்.

“நீட்” வருவதற்கு முன்

நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு வந்தது 2017ல. அதுக்கு முன்னாடி தமிழ்நாட்டுல 2006 வரை டாக்டர் படிப்பு (MBBS) சேருறதுக்கு ஒரு சிஸ்டம் இருந்தது. அந்த சிஸ்டம்படி +2 பொதுத்தேர்வு மார்க்கும், மாநில அளவுல வச்ச நுழைவுத்தேர்வு (TNPCEE) மார்க்கும் வச்சுதான் டாக்டர் படிப்பு சேர முடியும். அந்த நுழைவுத்தேர்வு மாநில பாடத்திட்டம் வச்சுதான் இருந்தது. அப்படி இருந்தும் நிறைய அரசு பள்ளி மாணவர்களால டாக்டர் படிப்பு சேர முடியல. காரணம், நுழைவுத்தேர்வுல நல்ல மார்க் வாங்குற அளவுக்கு அரசு பள்ளிகளில் பாடம் சொல்லி தரல. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களில் நிறைய பேருக்கு கோச்சிங் க்ளாஸ் போற அளவுக்கு வசதியோ வாய்ப்போ இல்லை.

TNPCEE நுழைவுத்தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்தறதுக்கு பதிலா, 2005ல அதிமுக அரசு “நுழைவுத்தேர்வு மார்க்கை கணக்கில் எடுத்துக்கவேணாம், +2 பொதுத்தேர்வு மார்க் மட்டும் அடிப்படையா வச்சு டாக்டர் படிப்புக்கு சேர்த்துக்கலாம். 2006லேர்ந்து TNPCEE தேர்வு கிடையாது”னு உத்தரவு போட்டுச்சு. இந்த உத்தரவை எதிர்த்து கோர்ட்ல கேஸ் வந்தப்போ, கோர்ட் அந்த உத்தரவு செல்லாதுன்னு தீர்ப்பு கொடுத்திடுச்சு. அதனால 2006ல TNPCEE தேர்வு நடந்துச்சு. அடுத்து திமுக ஆட்சிக்கு வந்து ஒரு கமிஷன் அமைச்சு, அதன் அடிப்படையில் TNPCEE தேர்வை ரத்து செஞ்சது. இந்த முறை சட்டத்துக்கு பாதிப்பு இல்லை. அதனால 2007லேர்ந்து 2017ல “நீட்” தேர்வு வர்றவரைக்கும் இங்கே டாக்டர் படிப்புக்கு +2 மார்க் மட்டுமே போதுங்கற நிலைமைதான்.

இதுவரை இந்த பதிவை படிச்சவங்களுக்கு இயல்பா மனசுல என்ன தோணும்னா – “2007க்கு பிறகு அரசு பள்ளி மாணவர்கள் டாக்டர் படிப்பு சேருறதுக்கு இருந்த பெரிய தடை நீங்கிடுச்சு. அதனால +2 மார்க் வச்சு வருஷா வருஷம் நூத்துக்கணக்குல அரசு பள்ளி மாணவர்கள் டாக்டர் படிப்புல சேர்ந்திருப்பாங்க. இப்போ நீட்ன்னு ஒரு தேர்வு வந்து திரும்ப தடை போடுது. அதனாலதான் எல்லாரும் நீட்டை எதிர்க்கிறாங்க”. இப்படி ஒரு எண்ணம் உங்க மனசுல பதிஞ்சிருந்தா, உங்களுக்கு ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் இருக்கு.

அதாவது, 2007லேர்ந்து 2016 வரை வெறும் +2 மார்க் மட்டுமே வச்சு டாக்டர் படிப்புக்கு சேருற நிலைமை இருந்தப்போ, வருஷத்துக்கு சராசரியா 30-40 அரசு பள்ளி மாணவர்கள்தான் டாக்டர் படிப்புக்கு சேர முடிஞ்சது. கிட்டத்தட்ட 3000 மெடிக்கல் சீட், ஆனால் அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை என்னவோ 30கிட்டதான். 2%க்கும் குறைவான எண்ணிக்கை. இத்தனைக்கும் அரசுப்பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் ஒரே மாநில பாடத்திட்டம்தான் (இந்த ஒப்பீட்டுல, CBSE பள்ளிகளை சேர்க்கல; ஏன்னா, அந்த பள்ளிகள் எண்ணிக்கை குறைவுதான்) .

இப்போ புரியுதுங்களா அரசு பள்ளி மாணவர்கள் பெரிய அளவுல டாக்டர் படிப்பு சேரமுடியாம போனதுக்கு “நீட் மட்டுமே வில்லன் இல்லை”ன்னு. ஆக, முக்கியமா சரி செய்யவேண்டியது அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத்தை சொல்லித்தர்ற விதம்தான். பாடத்திட்டத்தை மாத்துறது கூட ரெண்டாவதுதான், இருக்கற பாடத்திட்டத்தையே நிறைய மாணவர்கள் நல்லா படிச்சு பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜில 90%க்கு மேல எடுக்கற அளவுக்கு சொல்லித்தரணும். பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் (எல்லாரையும் சொல்லல) அப்படி சொல்லித்தர்றதில்லை, அல்லது சொல்லித்தர்ற அளவுக்கு தங்கள் திறனை மேம்படுத்திக்கிறது இல்லை. ஆனா, “நீட்”டை எதிர்க்கிற யாரும் இந்த பிரச்சினையை பேசுறதே இல்லை. காரணம், இங்கே இருக்கற கட்சிகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களும் அவங்க குடும்பமும் பெரிய ஓட்டு வங்கி. அதனாலதான் திமுகவும் அதிமுகவும் தங்கள் ஓட்டு வங்கி பாதிக்கப்படாம (அதாவது சரிவர சொல்லித்தராத அரசு பள்ளி ஆசிரியர்கள் மனசு நோகாம) என்னென்ன சரிக்கட்ட முடியுமோ அதெல்லாம் செய்ய முயற்சிக்கிறாங்க.

அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு இல்லாத 7.5%

அப்படி ஒரு முயற்சிதான், போன அதிமுக அரசு கொண்டுவந்த “அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு”ங்கற சட்டம். இந்த சட்டத்தின்படி, “நீட்” தேர்வு வரையறுக்கும் குறைந்தபட்ச மார்க் வாங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சீட்கள் – கிட்டத்தட்ட 400 சீட்கள் – உத்திரவாதமா உண்டு.

“அருமையான சட்டம்”ன்னு நினைக்கிறவங்களுக்கு ஒரு விஷயம் – இந்த சட்டத்துக்கு அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு இல்லை. நம்ம அரசியலமைப்பு சட்டம் சொல்ற “Socially or Educationally Backward” (சமூகரீதியில் அல்லது கல்விரீதியில் பிற்படுத்தப்பட்ட) வரையறைக்குள் இந்த சட்டம் இல்லை. அதனால நாளைக்கே யாராவது கோர்ட்டுக்கு போனால், இந்த 7.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்படும்ங்கறதுதான் நிலைமை. அதனால “அரசு பள்ளி மாணவர்களுக்கு உத்திரவாதமா 7.5% சீட் உண்டு”ங்கறது நீண்டகால தீர்வோ, நிரந்தர நிலையோ கிடையாது.

“நீட்” – பாதிப்பும் மாயையும்

அப்போ “நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பே இல்லையா?”ன்னு கேட்டால், அதுக்கு பதில் – “ஏற்கனவே 2%க்கு குறைவா டாக்டர் படிப்புக்கு சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, நீட் வந்ததால இன்னும் குறைஞ்சு போச்சு. இந்த 7.5% சலுகை இருக்கறதுனால மட்டுமே இப்போதைக்கு எண்ணிக்கை கொஞ்சம் கூடியிருக்கு. அதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வால பாதிப்பு இருக்கதான் செய்யுது. அதே நேரம், நீட்டை ரத்து செஞ்சுட்டா அவங்க டாக்டர் கனவு நிறைவேறிடும்னு நினைக்கிறது ஒரு மாயைதான்“.

இப்போ, மறுபடியும் பதிவின் ஆரம்பத்துல சொன்ன குட்டிக்கதையை படிச்சா, உங்களுக்கு முழு விவகாரமும் தெளிவா புரிஞ்சிடும்.

தீர்வுகள்

சரிங்க, இப்போ தீர்வுகள் பத்தி பேசுவோம். “நீட்” தேர்வு ஒரே நாளில் வந்துவிடவில்லை. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் (திமுகவும் அங்கம் வகித்தது) 2010ல் செயல்வடிவம் பெற்று, சட்ட போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றமும் ஏற்ற பிறகே, எல்லா மாநிலங்களிலும் “நீட்” நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஒருவேளை “நீட்”டை நீக்கவேண்டும் என்றாலும் கூட, அது உடனடியாக நிகழாது என்ற நிதர்சனத்தை உணரவேண்டும். இந்தப் புரிதலோடு தீர்வுகளை ஆராயலாம்.

 1. நீட் ரத்தாகிறதோ இல்லையோ, பாடத்திட்டத்தை மாற்றாவிட்டாலும் கூட, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கொடுக்கப்படும் முறைகளை மாற்றவேண்டும். அதற்கு ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதோடு, அவர்களது செயல்பாடுகளை ஆக்கப்பூர்வமான மேற்பார்வைக்கும் ஆய்வுக்கும் மாநில கல்வித்துறை உட்படுத்த வேண்டும்.
 2. மாநில பாடத்திட்டத்திற்கும் “நீட்” தேர்வுக்கு அடிப்படையாக இருக்கும் பாடத்திட்டத்திற்கும் உண்மையில் இருக்கும் இடைவெளி என்ன என்பதை திறந்த மனதோடு மாநில கல்வித்துறை அலச வேண்டும் (Gap analysis). ஒருவேளை “நீட்”க்கு அடிப்படையான பாடத்திட்டத்தில் அவசியமற்ற பாடங்கள்/பகுதிகள் இருப்பதாக மாநில கல்வித்துறை முடிவுக்கு வந்தால், உரிய வாதங்களோடு மத்திய கல்வித்துறையிடம் முன்வைத்து அந்த பாடங்கள்/பகுதிகளில் “நீட்” தேர்வு கேள்விகளை தவிர்க்க அழுத்தம் தரலாம். தேவைப்பட்டால் இந்த விஷயத்தில் மாநில அரசு நீதிமன்றத்தையும் அணுகலாம்.
 3. “நீட்” ரத்து பற்றி தெளிவான முடிவு கிடைக்கும்வரை, அரசு பள்ளி மாணவர்களில் மருத்துவம் படிக்க விரும்புவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு/முகாம்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். போன அதிமுக ஆட்சியிலேயே இதற்கான முன்னெடுப்பு வந்துவிட்டது. அதனை இன்னும் மேம்படுத்தி, அடுத்த கட்டமாக, தேவைப்பட்டால் தனியார் கோச்சிங் நிறுவனங்களுடன் அரசு கைகோர்க்கலாம். அல்லது, தனியார் பெருநிறுவனங்களை இத்தகைய பயிற்சிக்கு ஸ்பான்சர் (Sponsor) செய்ய சொல்லலாம்.
 4. மேலே சொன்ன 3 செயல்பாடுகளை முன்னெடுத்தால், “நீட்” தேர்வு ரத்து ஆகவில்லை என்றாலும், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருவேளை “நீட்” தேர்வு ரத்தானாலும், 2006 வரை இருந்த “+2 பொதுத்தேர்வு & மாநில அளவில் நுழைவுத்தேர்வு” என்ற முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். ஏனென்றால், ஒரே பாடத்திட்டமாக இருந்தாலும் வெவ்வேறு ஆசிரியர்களின் விடைத்தாள் திருத்தும் முறைகளில் இருக்கக்கூடிய மாறுபாடுகளை களையவும், மாணவர்களின் படிப்புத் திறனை objective ஆக சோதித்து பார்க்கவும், தனியார் மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை முறைகளை ஒழுங்குபடுத்தவும் ஒரு standardized தேர்வு அவசியம். மேலும்,போட்டி தேர்வுகளைக் கண்டு அஞ்சாத இளைய தலைமுறையை உருவாக்கவும் அத்தகைய நுழைவுத்தேர்வு அவசியமே.

முடிவாக

தமிழ்நாட்டில் 5000+ சீட்கள் இருக்கும் MBBSக்கு கிட்டத்தட்ட 1.20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். அதனால் போட்டி தவிர்க்கமுடியாதது. கிராமப்புற (அரசு பள்ளி) மாணவர்களை அந்த போட்டிக் களத்திற்கு உரிய பயிற்சியுடன் கொண்டுவந்து நிறுத்தவேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. “நீட்”டை வைத்து அரசியல் செய்யாமல், திறந்த மனதுடன் அணுகி, மேலே சொன்ன தீர்வுகளை அரசுகள் பரிசீலித்தால், டாக்டர் கனவுகளோடு படிக்கும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்.


குறிப்பு: இந்த பதிவின் முக்கிய பகுதிகளை தொகுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள “நீட் தேர்வின் தாக்கத்தை ஆராயும் குழு”வுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!