தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்

Home ரஜினி வாய்ஸ் 2.0 பிரச்சினைகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்

உள்ளடக்கம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்த சமயம் (மார்ச் 30, 2018 – ட்விட்டர் பதிவு)

ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது

காணொளி: https://youtu.be/j5maoYx2_F4 (மணித்துளி 7:06 முதல் 8:06 வரை)


ஸ்டெர்லைட் & காவிரி – நடிகர் சங்க போராட்டம் நடந்த சமயம் (ஏப்ரல் 7, 2018 – சென்னையில் பேட்டி)

இயற்கை, இறைவன் இரண்டும் ஒன்றுதான். பஞ்சபூதங்கள் – தண்ணீர், நெருப்பு, மண், காற்று, ஆகாயம் – சேர்ந்ததுதான் இயற்கை. இந்த பூதங்களால்தான் மனித உடலே உருவாகிறது. இந்த பூதங்களில் எது கெட்டுப்போனாலும் உலகமே அழிந்து விடும், மனித குலமே அழிந்து விடும். ஆக மண், தண்ணீர், காற்றை மாசுபடுத்தும் எந்த திட்டத்தையும் அனுமதிக்கவே கூடாது. அத்தகைய திட்டங்களால் அரசுக்கு பல லட்சம் கோடி வருமானம் வருவதாக இருந்தாலும் கூட, பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக இருந்தாலும் கூட அவற்றிற்கு இடம் கொடுக்கக்கூடாது.

அதே சமயம், இப்படி மாசுபடுத்தும் தொழில்களை செய்யும் தொழிலதிபர்கள் பணம் சம்பாதிக்கலாம்; ஆனால், நிம்மதியாக இருக்க முடியாது. அவர்கள் சந்ததியினர் நன்றாக வாழ முடியாது. அதற்காக தொழில் நிறுவனங்களே வேண்டாம் என்று சொல்லவில்லை. மண், நீர், காற்றுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தொழில் செய்யவேண்டும்.”  [காணொளி: https://youtu.be/mWufp-lOW8o (மணித்துளி 2:28 முதல் 3:31 வரை)]

நான் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தெரிவித்திருந்த கருத்துக்கு, ஸ்டெர்லைட் நிறுவனம் பதில் தந்திருந்தார்கள். அதற்கு நன்றி. ஆனால், அவர்கள் சொன்ன விளக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.”  [காணொளி: https://youtu.be/mWufp-lOW8o (மணித்துளி 7:04 முதல் 7:14 வரை)]


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தன்று.. (மே 22, 2018 – ட்விட்டர் பதிவு)

“மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழகஅரசே பொறுப்பு.


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு மறுநாள்… (மே 23, 2018 – ட்விட்டரில் காணொளி பதிவு)

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அலட்சியம், உளவுத்துறை உட்பட மொத்த நிர்வாகத்தின் தோல்வி, காவல்துறையின் வரம்பு மீறின சட்டத்திற்கு புறம்பான மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

காணொளி: https://youtu.be/8B1TFAiNZT0 (மணித்துளி 0:00 முதல் 0:18 வரை)


“ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட” தமிழக அரசு உத்தரவிட்டபோது… (மே 28, 2018 – ட்விட்டர் பதிவு)

“இந்த வெற்றி, போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்களின் ரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்.


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிறகு… (மே 30, 2018 – தூத்துக்குடியில் பேட்டி)

“நான் மருத்துவமனை போய் அடிபட்டவர்களை பார்த்தேன். ஆறு, ஏழு பேரை மட்டுமே பார்க்க முடியவில்லை. அவர்களை பார்க்கும் பொழுது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஒரு சிலர் பிரம்மை பிடித்தவர்கள் போல் இருக்கிறார்கள். சிலர் பயந்து இருக்கிறார்கள். நிறைய பேர் மிக சோகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் உறவினர்களை பார்க்கும்பொழுது மனது பாரமாய் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு சம்பவம் இனி நடக்கவே கூடாது.

ஒரு நல்ல காரணத்திற்காக நூறு நாள் போராட்டம் செய்தார்கள். இந்த விஷயத்தில் கலெக்டர் ஆபீஸ் தாக்குதல் மற்றும் குடியிருப்பு எரிப்பை செய்தவர்கள் கண்டிப்பாக சாமானிய மக்கள் அல்ல. உறுதியாக விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அவர்களுடைய வேலைதான் இது (கலெக்டர் ஆபீஸ் தாக்குதல், குடியிருப்பு எரிப்பு).

நாம் போராட்டம் செய்யும்பொழுது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாகி விட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் கூட அப்படிதான் நடந்தது. இந்த ஒரு புனிதமான போராட்டமும் ரத்தக்கறையோடு முடிந்திருக்கிறது. வெற்றி கிடைத்தாலும் ரத்தக்கறையோடு முடிந்திருக்கிறது.

அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு விஷக்கிருமிகளை, சமூக விரோதிகளை அடக்க வேண்டும். அந்த விதத்தில் மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களை நான் பாராட்டுகிறேன். இந்த சமூக விரோதிகளை, விஷக்கிருமிகளை இரும்புக்கரம் கொண்டு அவர்கள் (ஜெயலலிதா) அடக்கி வைத்திருந்தார்கள். இப்பொழுது உள்ள அரசு இந்த விஷயத்தில் அவர்களை (ஜெயலலிதாவை) பின்பற்றி சமூக விரோதிகளை அடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டிற்கு மிகவும் ஆபத்து.

தற்பொழுது அரசு “மீண்டும் (ஸ்டெர்லைட்) ஆலை திறக்காது. பூட்டு போடப்பட்டுவிட்டது.” என்று உத்திரவாதம் கொடுத்திருக்கிறது. இனி ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிமன்றத்தை நாடினால், அவர்கள் மனிதர்களே அல்ல. நீதிமன்றத்தில் இருப்பவர்களும் மனிதர்களே. அதனால் நீதிமன்றத்திற்கு போனாலும் வழக்கு வெல்லாது, வெல்ல விடமாட்டார்கள். மக்கள் சக்தி முன்பு வேறெந்த சக்தியும் எதுவும் செய்ய முடியாது. இத்தனை உயிர்பலி ஏற்பட்டு இத்தனை பேர் அடிபட்டிருக்கும் நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் உண்மையில் மனிதத்தன்மையோடு இருந்தால் அவர்களுக்கு மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என்ற நினைப்புகூட வரக்கூடாது. அதற்கு எந்த அரசாங்கமாக இருந்தாலும் அனுமதி தரமாட்டார்கள்.

அடிக்கடி போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சில போராட்டங்கள் நல்லவற்றிற்கான போராட்டங்கள். சில போராட்டங்களை சிலர் தூண்டிவிடுகிறார்கள். மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு போராட்ட பூமி என்று ஆகிவிட்டால், இங்கு எந்த தொழிலும் வராது. எந்த வியாபாரிகளும் வரமாட்டார்கள். வேலை வாய்ப்பு கிடைக்காது. இளைஞர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஏற்கனேவே விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. வேலை வாய்ப்பும் இல்லையென்றால் கஷ்டம் அதிகரிக்கும். போராட்டம் செய்யும்பொழுது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அரசும் இது போன்ற ஆலைகளுக்கு அனுமதி தரும்போது, அனைத்து விதிமுறைகளையும் சரிபார்த்து அனுமதி தரவேண்டும். அதனையும் மீறி ஏதும் பிரச்சினை என்றால், நீதிமன்றங்களை அணுகித்தான் தீர்வு காணவேண்டும். அப்படியில்லாமல் “போராட்டம், போராட்டம்” என்று போனால் மிகவும் கஷ்டமாகிவிடும். இதனை அரசியல்வாதிகளும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.”

ஊடக நிருபர்கள் மத்தியில் ரஜினி இவ்வாறு பேசினார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், ரஜினியின் பதில்களும் –

நிருபர்: சமூக விரோதிகள் உள்நுழைந்ததை கணிக்க தவறியது காவல்துறையின் பலவீனமா?
ரஜினி: இது கண்டிப்பாக உளவுத்துறையின் தவறு. நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், இது உளவுத்துறையின் தவறு. பெரும் தவறு. நடந்தது நடந்துவிட்டது. இனி நடப்பதெல்லாம் நல்லதே நடக்கட்டும்.

நிருபர்: ஆலையை மூடிய பிறகும் திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தை நடத்தவிடாமல் செய்கிறார்களே, இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ரஜினி: எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார்கள். மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு எல்லாம் தெரியும். நேரம் வரும்போது (மக்கள்) நியாயத்தை காட்டுவார்கள்.

நிருபர்: அந்த 13 பேரை யார் சுட்டது, தமிழக அரசு சுட்டது என்று வரவில்லை. அதை எப்படி பார்க்கிறீர்கள்?
ரஜினி: முழுக்க குழப்பமாக இருக்கிறது. இப்படி வன்முறை ஆகும் என்று போலீஸோ மக்களோ எதிர்பார்க்கவில்லை. முன்பும் சொல்லியிருக்கிறேன், இப்பொழுதும் சொல்கிறேன் – காவலர்கள் மீது கைவைப்பவர்களை விடக்கூடாது. அப்படி செய்ய தொடங்கிவிட்டால், மக்களை யார் காப்பாற்ற முடியும்? ஏழு கோடி மக்களை காப்பாற்ற அந்த காவலர்கள்தானே இருக்கிறார்கள்? வீடியோக்கள், உளவுத்துறை அறிக்கைகள் உதவியுடன் காவலர்களை அடித்தவர்களையும், பொதுச்சொத்தை நாசம் செய்தவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களது புகைப்படங்களை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிட வேண்டும். அவர்கள் சமூக விரோதிகள் என்று வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

நிருபர்: முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்ற கருத்தை ரஜினி ஏன் முன்வைக்கவில்லை?
ரஜினி: எல்லாவற்றிற்கும் ராஜினாமா என்று சொன்னால் எப்படி? அந்த அரசியலை நான் பேச விரும்பவில்லை. இனிமேல் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நடந்தது பெரிய தவறு.

நிருபர்: தமிழக அரசு சரியாக கையாளவில்லை எனும்போது முதலமைச்சர் ராஜினாமாதானே நியாயமான கோரிக்கையாக இருக்கமுடியும்?
ரஜினி: எல்லாவற்றிற்கும் ராஜினாமா, ராஜினாமா என்று சொன்னால் அதன்பிறகு என்ன நடக்க போகிறது?

நிருபர்கள்: 13 உயிர்கள் பலியாகிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு கெட்டு போயிருக்கிறது.
ரஜினி: ஆமாம், 100 சதவிகிதம். அதற்கு அரசு (ஸ்டெர்லைட்) ஆலையை மூடியிருக்கிறார்கள், இனி திறக்கமாட்டோம் என்று வாக்குறுதியும் தந்திருக்கிறார்கள்.

நிருபர்: ஒரு நபர் கமிஷன் மீது நம்பிக்கை இருக்கிறதா?
ரஜினி: இல்லை, ஒரு நபர் கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. அது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

நிருபர்: 100 நாள் போராட்டம் நடந்தும் அரசு கண்டுகொள்ளாமலே இருந்ததே?
ரஜினி: அதற்கு அலட்சியம்தான் காரணம். அரசு விழிப்போடு செயல்பட்டிருக்க வேண்டும். இது மிகப்பெரிய பாடம்.

நிருபர்: தூத்துக்குடி சம்பவத்திற்கு மோடி ஏதும் கருத்து தெரிவிக்கவில்லையே?
ரஜினி: அது எனக்கு தெரியாது. அது பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.

நிருபர்: இவ்வளவு தூரம் வந்துவிட்டு நீங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவில்லையே?
ரஜினி: இறந்தவர்களின் குடும்பத்தினரும் இங்கே வந்திருந்தார்கள். அவர்களை நான் பார்த்தேன். கூட்டம் காரணமாக அந்த பகுதிகளுக்கு போக முடியவில்லை. தற்போதைய நிலை சற்று சரியான பிறகு நான் பார்க்கிறேன்.

காணொளி:  https://youtu.be/XSNZnLox4cM (மணித்துளி 0:00 முதல் 8:17 வரை)


தூத்துக்குடி சந்திப்பிற்கு பிறகு சென்னை விமானநிலையத்தில் பேட்டி (மே 30, 2018 மாலை)

நிருபர்: தூத்துக்குடி போராட்டத்தை நீங்கள் கொச்சைப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாடியிருக்கின்றன. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்ததாக நீங்கள் சொன்ன கருத்துக்கு பலத்த எதிர்ப்பு வந்திருக்கிறது. யார் சமூக விரோதிகள் என்று கேட்கிறார்கள். சமூக விரோதிகள் என்று நீங்கள் மக்களை சொன்னதாக சொல்கிறார்கள்.
ரஜினி: மக்கள் அல்ல. அந்த போராட்டத்தின் இறுதியில் சமூக விரோதிகள் உள்புகுந்துதான் அதனை கெடுத்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாள் எப்படி கெடுத்தார்களோ அதேபோல் இப்பொழுதும் செய்திருக்கிறார்கள். அங்கே போராட்டத்தில் இருந்தவர்கள் அப்பாவி மக்கள், மீனவர்கள். சமூக விரோதிகள்தான் போராட்டத்தை கெடுத்திருக்கிறார்கள். போலீசை அடித்ததும் அவர்கள்தான் (சமூக விரோதிகள்தான்), கலெக்டர் ஆபீஸை அடித்ததும் அவர்கள்தான், குடியிருப்பை எரித்ததும் அவர்கள்தான்.

நிருபர்: இது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி கேட்கிறார்கள்.
ரஜினி: அது எப்படி தெரியும் என்று கேட்க வேண்டாம். எனக்கு தெரியும்.

நிருபர்: துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகின்றன. ஏன் காவல்துறையோ தமிழக அரசோ அந்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவில்லை?
ரஜினி: சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை (சமூக விரோதிகளை) வெளியுலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும்.

நிருபர்: நீங்கள் போலீசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறீர்களே?
ரஜினி: இந்த பிரச்சினை (துப்பாக்கி சூடு சம்பவம்) ஆரம்பித்ததே அந்த சமூக விரோதிகள் போலீஸை அடித்த பிறகுதான்.
.
நிருபர்: (மீண்டும்) நீங்கள் போலீசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறீர்களே?
ரஜினி: சீருடையில் உள்ள காவல்துறையினரை அடிப்பதை எப்பொழுதும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.

நிருபர்: மக்கள் போராட்டத்தை தமிழக அரசு…? [வெவ்வேறு கேள்விகள் ஒரே நேரத்தில் எழுப்பப்பட்டன]
ரஜினி: மக்கள் “போராட்டம், போராட்டம்” என எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்.

காணொளி: https://youtu.be/SPStwqRGOYM (மணித்துளி 0:08 முதல் 1:40 வரை)


error: Content Copyrights Reserved !!