திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட அடுத்த நாள் (மார்ச் 14, 2021) அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதிமுக இதற்காக ரொம்ப சிரமப்பட்ட மாதிரி தெரியவில்லை. ஏற்கனவே சில கனமான சலுகைகளை யோசித்து வைத்துவிட்டு, திமுக அறிக்கை வந்ததும் அதில் உள்ள “வளவள” பகுதிகளையெல்லாம் நீக்கிவிட்டு, தங்கள் சலுகைகளை சேர்த்து, பல இடங்களில் “அம்மா” பெயரை இணைத்துவிட்டார்கள். கூடுதலாக சில புதுமையான திட்டங்களை மக்கள் நீதி மய்யத்திடமிருந்தும் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியிடமிருந்தும் காப்பி அடித்திருக்கிறார்கள்.
பக்கங்களை நிரப்பிய திமுகவின் அறிக்கையில் 500+ வாக்குறுதிகள். ஆனால், அதிமுக அறிக்கையில் 163 மட்டுமே. “எப்படியும் மக்கள் முக்கியமான 10 வாக்குறுதிகளைத்தான் படிப்பாங்க, நாமும் கொஞ்சம்தான் நிறைவேத்த போறோம், இதுக்கு ஏன் நிறைய வாக்குறுதி கொடுத்து பேப்பரை வீணடிச்சுக்கிட்டு” என சிக்கனமாக செயல்பட்டிருக்கிறார்கள் போல.
அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் குறித்த கேள்விகளுக்கு முன், நல்ல அம்சங்களை சொல்லிவிடலாம் –
- கிராம பஞ்சாயத்துகளில் கைவினை கலைஞர்களுக்கான வணிக வளாகம் + திறன் மேம்பாட்டு வளாகம்
- வேளாண் விளைபொருள் லாபகரமான விற்பனைக்கு வழிகாட்டும் அமைப்பு
- பொதுவாக முக்கியத்துவம் பெறாத சிறு தொழில்களுக்கு (தென்னை விவசாயம், கைத்தறி) ஊக்கம்
- மாவட்டந்தோறும் தகவல் தொழில்நுட்ப பூங்கா
உள்ளடக்கம்
மூன்று முக்கிய கேள்விகள்
- தேர்தல் அறிக்கை பார்த்ததும் தோன்றிய முதல் கேள்வி – “மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த 163 வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை செயல்படுத்தும் (அல்லது செயல்படுத்த பிள்ளையார் சுழி போடும்) உத்தரவுகளை உங்கள் ஆட்சி முடியும் கடைசி மாசத்தில் (அதாவது பிப்ரவரி 2026ல்) வெளியிடுவீர்கள்? அப்பொழுதுதானே அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்க வசதியாக இருக்கும்!!”
- நீங்கள் சொல்லியிருக்கும் பல திட்டங்களை நீங்கள் ஆட்சி செய்த கடந்த பத்து வருடங்களிலேயே நிறைவேற்றி இருக்கலாமே? குறைந்தபட்சம், பெரும்பாலான திட்டங்களை தொடங்கி பாதி வேலையாவது முடித்திருக்கலாமே?
- மாநிலத்தின் கடன் சுமை ஏறிக்கொண்டே போகிறது. கடனை கட்டுக்குள் கொண்டுவரவும் நிதி நிர்வாகத்தை சீரமைக்கவும் திட்டமே இல்லையா? [“நிதி நிர்வாக சீரமைப்புன்னா என்ன?” என்கிற உங்கள் உள்குரல் சன்னமாக கேட்கிறது]
வாஷிங் மெஷின்
வாக்குறுதி #10 – அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வாஷிங் மெஷின்: எளிதில் பிரச்சினை வராத, தரமான வாஷிங் மெஷின் நிச்சயமாக தரமாட்டீர்கள். மெஷின்ல ஒரு பிரச்சினைன்னா சரிசெய்ய கடைக்கு எளிதா தூக்கிட்டு போக முடியாது. சரி செய்ய வீட்டுக்கே ஆள் வருவார்களா? வாய்ப்பில்லை. அதனால் நீங்க கொடுத்த மூணு நாலு மாசத்துலேயே பேப்பர் கடையில் எடைக்கு போடும் அளவில்தானே வாஷிங் மெஷின் இருக்கும்? “ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்” என்ற எம்ஜிஆர் பாடலின் வரிகள் உங்கள் காதுகளை துளைக்கட்டும் என்று சாபம் விடுவதை விட வேறு என்ன செய்ய முடியும்?!
வீட்டுக்கு ஒரு அரசுப்பணி
வாக்குறுதி #15 – வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி: இதன்படி, குறைந்தது ஒரு கோடி பேருக்கு வேலை தரவேண்டி இருக்கும். ஒரு அரசாங்கத்தில் இத்தனை பேர் வேலை செய்யும் அளவிற்கு என்ன வேலைகள் இருக்கின்றன? ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்தின் சுவர்களிலும் எத்தனை செங்கல்கள் இருக்கின்றன என்பதை எண்ணி கணக்கு கொடுக்க வேண்டிய வெட்டி வேலை ஏதும் தரப்போகிறீர்களா?
சாதிவாரி இட ஒதுக்கீடு
வாக்குறுதி #163 – சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு: இதே அடிப்படையில் தேர்தலில் வேட்பாளர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு, அரசில் அமைச்சர்கள் எண்ணிக்கை என்று அமல்படுத்தும் எண்ணமோ தைரியமோ இருக்கிறதா?
ஏற்கனவே சொன்னவைதானே
- வாக்குறுதி #1 – அம்மா இல்லம் திட்டம்: ஏற்கனவே பல வீட்டு வசதி திட்டங்கள் அமலில் இருக்கிறதே, நீங்களே கூட “பசுமை வீடு” என்றொரு திட்டம் கொண்டுவந்ததாக ஞாபகம். இந்த திட்டம் எப்படி வித்தியாசப்படுகிறது?
- வாக்குறுதி #5 – அம்மாவின் தொலைநோக்கு திட்டம் 2023: இந்த திட்டத்தில் நீங்கள் ஏற்கனவே முடித்தவை எவ்வளவு? உண்மையில் சொன்னபடி செய்திருந்தால் இந்நேரம் 80% முடித்திருக்க வேண்டும். அப்படி முடித்திருந்தால் தமிழ்நாட்டின் வளமும் வளர்ச்சியும் வியக்கத்தக்க உயரத்தில் இருந்திருக்கும். ஆனால் நீங்கள் இன்னமும் தள்ளுபடிகளுக்காக மக்கள் கையேந்தும் நிலையில்தானே வைத்திருக்கிறீர்கள்?
- வாக்குறுதி #77 – மதுபானக்கடைகளை படிப்படியாக மூடுதல்: இதை 2016 தேர்தல் அறிக்கையிலும் தந்தீர்கள், ஆனால் இன்னும் முடிக்கவில்லையே? அதுபோக, அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க வருமானத்திற்கான ஆதாரமாக இந்த மதுபானக்கடைகளைத்தானே நம்பி இருக்கிறீர்கள், பின் எப்படி மூட மனசு வரும்?
- வாக்குறுதி #153 – தமிழகத்தின் அனைத்து ஆறுகளும் இணைக்கப்படும்: இதே வாக்குறுதியை 2016லும் கொடுத்துவிட்டு “காவிரி – குண்டாறு” திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் வேலையையே போன மாதம்தானே (பிப்ரவரி 2021) செய்தீர்கள்? இதென்ன இன்னொரு “கச்சத்தீவை மீட்போம்” வகை வாக்குறுதியா?
மனம் போன போக்கில் சொல்பவை
- வாக்குறுதி #4 – சட்டம் ஒழுங்கில் அமைதிப்பூங்கா: இது ஒரு அரசாங்கத்தின் அடிப்படை கடமை அல்லவா? விட்டால் “ஜெயித்த எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கப்படும்” என்று கூட வாக்குறுதி சேர்ப்பீர்கள் போல.
- வாக்குறுதி #32 – விவசாய மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படும்: விவசாயிகள் காத்திருப்பதை உறுதி செய்கிறீர்கள், இப்போது “உடனடியாக” என உறுதிமொழி தருகிறீர்கள். அப்படியென்றால் இவ்வளவு நாள் இந்த விஷயத்தில் உங்கள் நிர்வாகம் தூங்கிக்கொண்டிருந்தது என்பதை தெளிவாக ஒப்புக்கொள்கிறீர்கள்தானே?
- வாக்குறுதி #75 – 18 வயது நிரம்பியோருக்கு இலவச ஓட்டுநர் உரிமம்: ஓட்டுநர் உரிமத்திற்கு அரசுக்கான பணம் கட்டுவதா இங்கே பிரச்சினை.. ஆர்டிஓ அலுவலகத்தில் அரசு கட்டணத்திற்கு மேலாக பன்மடங்கு லஞ்சம் தருவதுதானே உண்மையான பிரச்சினை. அதை தீர்ப்பது பற்றி என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா?
- வாக்குறுதி #7 – வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள்: போன வருடம் மக்கள் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்தபோது குறைந்தது 2 கேஸ் சிலிண்டர்கள் தந்திருக்கலாமே? உங்கள் இலக்கு மக்கள் வாழ்வாதாரமா, உங்கள் கட்சிக்கான வாக்கா?
- வாக்குறுதி #135 – உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: “உள்ளூர்” என்பது நகராட்சி அளவிலா? மாவட்ட அளவிலா? இப்படி சுருக்கிக்கொண்டே போனால் எல்லோருக்கும் அவரவர் ஊரிலேயே வேலை கிடைத்தால்தான் உண்டு.
- வாக்குறுதி #143 – வெற்றிகரமான 2015 மற்றும் 2019 முதலீட்டாளர்கள் மாநாடு போல் 2022ல் நடத்தப்படும்: மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், அந்த இரண்டும் வெற்றிகரமான மாநாடுகளா? எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உண்மையிலே செயல்பாட்டுக்கு வந்தன?
முடிவாக…
வாக்குறுதிகள் குறித்து இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன, ஆனால் தொடர்ந்து எழுத அயற்சியாக இருக்கிறது. “மக்களை முட்டாள்கள் என்று முடிவு செய்துவிட்டு தயாரிக்கப்பட்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இதற்குமேலும் புத்தியை செலவிட்டு கேள்வி கேட்டு என்ன பயன்?” என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் மூளையை அறைகிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு முன் அலாவுதீனுக்கு கிடைத்த அற்புத விளக்கே தன் தோல்வியை ஒப்புக்கொண்டு மண்டியிடும் என்பதே உண்மை. வாழ்க தமிழ்நாடு!!