மாறாத அரசியல்

திமுக: தேர்தல் அறிக்கையா? தேர்வுத்தாளா?

மார்ச் 13, 2021 அன்று நிறைந்த அமாவாசையில் திமுக 2021 தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. வழக்கமான சுயாட்சி, கச்சத்தீவு, இலங்கை தமிழர் குடியுரிமை போன்ற மசாலாக்களுக்கு பஞ்சமில்லை. “இவ்வளவு கொடுப்போம்”, “அவ்வளவு கொடுப்போம்” என ஆங்காங்கே பண உதவி சார்ந்த திட்டங்களுக்கும் குறைவில்லை. எனினும், நான்கு விஷயங்களில் காட்டப்பட்டிருக்கும் முனைப்பு பாராட்டுக்குரியது –

  • வேளாண்மை
  • நீர் மேலாண்மை
  • நூலகங்கள்
  • இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

இதெல்லாம் தாண்டி, அந்த 70+ பக்க தேர்தல் அறிக்கையை படித்த போது ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன. அவற்றை முடிந்த அளவிற்கு சுருக்கி, முக்கியமானவற்றை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்.

மத்திய அரசு மனம் நோகுமோ?

  • மத்திய அரசு சார்ந்த அனைத்து விஷயங்களிலும் “திமுக வலியுறுத்தும்” என்றே சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாக, “முழுமையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பினை நடத்திட திமுக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்” (வாக்குறுதி #271). வெறும் வலியுறுத்தல் மட்டுமே செய்ய முடியும் என்கிற நிலையில், திமுக ஆளுங்கட்சியாக வருவதால் என்ன மாற்றம் ஏற்படும்? இன்று இருக்கும் 23 மக்களவை உறுப்பினர்களை வைத்தே அதை செய்யலாமே?
  • ஆட்சிக்கு வந்தாலும் திமுக மேலே சொன்ன வலியுறுத்தல் மட்டுமே செய்யும் என்றால், இன்று அதிமுகவை “அடிமை அரசு” என்று சொல்வதும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுயமரியாதையை மீட்டெடுப்போம்” என்று பேசுவதும் மேடைக்கான வெறும் “உதார்” பேச்சுதானா? ஆக, திமுக ஆட்சிக்கு வந்தாலும் “அடிமை அரசு”தானா?
  • வாக்குறுதி #160: “நீட் தேர்வு ரத்து”க்கு சட்டம் இயற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – இதனால் நீட் தேர்வு ரத்தாகப் போவதில்லை. உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்ட தேர்வை, இந்தியா முழுக்க நடைபெறும் தேர்வை ஒரு மாநிலம் மட்டும் ரத்து என இயற்றும் சட்டத்தை குடியரசுத்தலைவர் எப்படி (மத்திய அரசு பரிந்துரை இல்லாமல்) ஒப்புக்கொள்வார்? இது நன்றாக தெரிந்தும் “நீட் தேர்வு ரத்து செய்வோம்” என்று பிரச்சாரங்களில் சொல்வது மிகச்சிறந்த ஏமாற்று வேலை அல்லவா?
  • “தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் பட்டப்படிப்பில் 15% இடங்களையும், பட்ட மேற்படிப்பில் 50% இடங்களையும் மத்திய தொகுப்புக்கு வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது” என்று வாக்குறுதி #161ல் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இது நடைமுறைப்படுத்தப்பட காரணம் 1984ல் உச்சநீதிமன்றம் Dr. Pradeep Jain Vs Union of India வழக்கில் போட்ட ஒரு உத்தரவு – மத்திய தொகுப்புக்கு (All India Quota/AIQ) இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்பது. இடைப்பட்ட காலத்தில் திமுக 18 வருடங்கள் மத்திய ஆட்சியில் பங்கு வகித்தும் மாற்ற முயற்சிக்காத ஒன்றை இப்போது புதிய பிரச்சினை போல் கிளப்புவது ஏன்?

ஒப்புதல் வாக்குமூலம்

திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த காலத்திலேயே சில திட்டங்களை நிறைவேற்றவில்லை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறது.

  • வாக்குறுதி #4ல் ஒரு வாக்கியம் – “2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தமது உரையில் மாநிலங்களின் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், இதுவரை மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்குவதற்கான எத்தகைய முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.”. இதை படித்ததும் தோன்றிய கேள்வி – “2004 முதல் 2013 வரை திமுக அங்கம் வகித்த மத்திய அரசும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லைதானே?”
  • வாக்குறுதி #6ல் “கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் 6-12-2006 அன்று தமிழை உயர்நீதிமன்ற மொழி ஆக்கிட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஆளுநர் ஆகியோரின் பரிந்துரையுடன் மத்திய அரசுக்கு 11-2-2007 அன்று அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை பார்த்ததும் “2007-2013 திமுகதான் மத்திய ஆட்சியில் கேபினெட் அந்தஸ்த்து அமைச்சர்களுடன் கம்பீரமாக ஆட்சி செய்ததே, ஏன் முடிவெடுக்கவில்லை?” என்று கேட்டால் நீங்கள் “திமுக மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழன்” என்று அழைக்கப்படுவீர்கள்.
  • வாக்குறுதி #268ல் “2006ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அன்றைய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜுன் சிங் மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார். ஆனால், இன்றளவில் மத்திய அரசுப் பணிகளிலோ, மத்திய கல்வி நிறுவனங்களிலோ இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படாமல் மிகக் குறைவான இடங்களே வழங்கப்பட்டிருப்பது பெரும் அநீதியாகும்”. இது குறித்து சமீபத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டு, திமுக தன் வெற்றியாக காட்டிக்கொண்டது. ஆனால், “2006ல் நடைமுறைப்படுத்தப்பட்டதை 2013 வரை ஏன் செயல்படுத்தவில்லை, அதற்கு ஏன் அன்று மத்திய அரசில் பங்கு வகித்த திமுக முயற்சிகள் எடுக்கவில்லை” என்று கேட்டால் பதில் இருக்காது.

ஊருக்கு உபதேசம்

  • வாக்குறுதி #247: சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு சட்டத்தை விரைந்து நிறைவேற்றிட மத்திய அரசை திமுக வலியுறுத்தும் – இது சட்டம் ஆவது இருக்கட்டும்; திமுக தன் கட்சி வேட்பாளர்களை களம் இறக்குவதில் இன்று வரை பெண்களுக்கு 33% கடைப்பிடித்தது உண்டா?
  • வாக்குறுதி #376: வரும் கழக ஆட்சியில் சட்டமன்றம் குறைந்தது 100 நாட்களுக்கு மேல் முறையாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும் – கடந்த சட்டசபையில் எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு செய்து, ஆளுநரே “தயவு செய்து சபையில் இருந்து உங்கள் வாதங்களை வையுங்கள்” என்று கேட்டுக்கொள்ளும் அளவுக்கு நடந்துகொண்ட திமுக இப்படி ஒரு வாக்குறுதி தருவதெல்லாம் “படிப்பது பெரியாரிசம், குடிப்பது கோவில் தீர்த்தம்” ரகம்.

ஆன்மிக கரிசனம்

  • வாக்குறுதி #418: ராமேஸ்வரம், காசி, கேதார்நாத், திருப்பதி போன்ற இந்துமத திருத்தலங்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு நிதியுதவி – ஒருபுறம் “இந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை, இந்துக் கடவுள்கள் ஆரியக் கடவுள்கள்” என்றெல்லாம் பேசிக்கொண்டு, இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட பயணங்களுக்கு நிதியுதவி தருவதென்றால், இது திமுகவின் இந்துமத எதிர்ப்பு நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமா? அல்லது, தேர்தலுக்காக/ஓட்டுக்காக செய்யப்படும் தாஜா வேலையா?
  • வாக்குறுதி #415ல் இந்துமத ஆலயங்களின் குடமுழுக்குக்காக 1000 கோடி ஒதுக்கப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. வாக்குறுதி #420ல் மசூதிகள், தேவாலயங்களை சீரமைக்க ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 200 கோடி என்றால், இதுவும் (5 ஆண்டுகளில்) 1000 கோடி ஒதுக்கீடுதானே ? பின் ஏன் அதை மட்டும் குறைத்து சொல்வது போல் காட்டவேண்டும் – மறைமுகமாக பெரும்பான்மை மதத்தினரை பெரிய நம்பர் வைத்து பரவசமடைய செய்யும் வணிக தந்திரமா?

இதுதான் நிர்வாக முறையா?

தேர்தல் பிரச்சாரத்தின் போது “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட குறைகளை களைய தனி துறை அமைக்கப்படும் (வாக்குறுதி #377). தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதை கண்காணிக்கவும், வாக்குறுதி #377 செயல்பாட்டை கண்காணிக்கவும் “திட்டங்கள் செயலாக்க அமைச்சகம்” என தனி துறை அமைக்கப்படும் (வாக்குறுதி #491). இப்படி ஒரு துறையை கண்காணிக்க இன்னொரு துறை என அமைச்சகங்களை விரிவாக்கிக்கொண்டே போவது நல்ல நிர்வாக முறையா? துறைவாரியாக வாக்குறுதிகளையும், புகார்களையும் பிரித்து அந்தந்த துறைகளே நிர்வாகிப்பதுதானே சரியான முறை? கண்காணிக்கத்தான் முதலமைச்சர் அலுவலகம் இருக்கிறதே?

இன்னும் சில கேள்விகள்…

  • வாக்குறுதி #170: மூன்றாண்டுகளுக்குள் தமிழ்நாடு 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக்க திட்டங்கள் – 1971ல் 45% அளவில் இருந்த எழுத்தறிவை 40 வருடங்களில் 80% அளவில்தான் இரண்டு ஆட்சிகளும் கொண்டுவந்தீர்கள். இப்பொழுது 3 ஆண்டுகளில் 100% கொண்டுவந்துவிடுவீர்களா?
  • வாக்குறுதி #196: தமிழக தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க சட்டம் – இது மாதிரி சட்டத்தை ஒவ்வொரு இந்திய மாநிலமும் இயற்ற தொடங்கினால் அந்தந்த மாநிலத்தவரும் குண்டு சட்டிக்குள்தான் குதிரை ஓட்ட முடியும். உலகமயமாக்கல், நகரமயமாக்கல் என வேறு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு சட்டம் கொண்டுவந்து வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கு தடை விதிக்க போகிறீர்களா? சீமானுக்கு விழும் ஓட்டுகளை கவர்வதற்காக இப்படி ஒரு பிற்போக்கு திட்டத்தை முன்வைக்கிறீர்களா?
  • வாக்குறுதி #332: அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 2.5% இட ஒதுக்கீடு. சரி, எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி இட ஒதுக்கீடு வைத்தே ஓட்ட திட்டம்? என்றுதான் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை தனியாருக்கு இணையாக கொண்டுவந்து அவர்களை நிஜமாகவே உயர்த்துவீர்கள்?
  • நீர் மேலாண்மை, ஆறுகள் பாதுகாப்பு என என்னன்னவோ பேசினாலும் அடிப்படை பிரச்சினையான “மணல் கொள்ளை” பற்றி ஏதும் வாக்குறுதி இல்லையே?
  • சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வர முயற்சி எதற்கு? அதனால் என்ன பயன்? வீண் நிர்வாக செலவுதானே? 1986ல் கலைக்கப்பட்ட மேலவை இல்லாததால் கடந்த 34 ஆண்டுகளில் நாம் என்ன இழந்துவிட்டோம்?
  • அரசு நிர்வாகத்தில் தகவல் தொழில்நுட்பத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லையே, ஏன்? ஒரு கட்சியாக அரசியல் பயன்பாடுகளுக்கு தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் முதலீடு செய்யும் திமுக, அரசு நிர்வாகத்தில் அதை முழுவீச்சில் கொண்டுவர பெரிய திட்டங்கள் வைக்காதது ஏன்?

முடிவாக…

பொதுவாக மாணவர்களிடையே தேர்வுகளில் அதிக பக்கங்கள் எழுதினால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம் உண்டு. அதனால் கூடுதல் பக்கங்கள் (additional papers) வாங்கி, பெருங்கதைகள் எழுதி தேர்வுத்தாளை சிறிய புத்தகம் அளவிற்கு மாற்றிவிடும் சில மாணவர்கள் உண்டு. கிட்டத்தட்ட அந்த மனப்பான்மையோடுதான் திமுக தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. முழுதாக படிக்க பொறுமை இல்லாமலேயே மக்கள் “மார்க்” போட்டுவிடுவார்கள் என்ற நினைப்பாக இருக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். இருந்தாலும், ஒரு பகுத்தறிவு சார்ந்த இயக்கமாக காட்டிக்கொள்ளும் திமுக, எப்படி “மக்கள் பகுத்து அறிய மாட்டார்கள்” என்ற சிந்தையுடன் ஒரு தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டது என்பதை வருங்கால சந்ததி அறிந்து கொள்ளவே இந்த பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!