மாற்று அரசியல்

2021: தொடரும் வாக்காளனின் தேடல்

நண்பர்களுக்கு வணக்கம் –

கடந்த 2+ வருடங்களாக TN2.0 வலைத்தளம், யூட்யூப் சேனல், ட்விட்டர் கணக்கு, முகநூல் பக்கம் அல்லது எனது தனிப்பட்ட முகநூல் வட்டத்தில் என்னுடன் தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்குமான பதிவு இது.

ஒரு வாக்காளனாக எனக்கு சில வருடங்களாகவே திமுக/அதிமுகவிற்கு மாற்றாக இங்கே ஒரு அரசியல் சக்தி எழவேண்டும் என்ற ஆர்வம் உண்டு. அத்தகைய சூழலில், என் அபிமானத்துக்குரிய (சினிமாவில் மட்டுமல்ல, பொதுவாழ்வு மற்றும் கடந்தகால அரசியல் நிலைப்பாடுகளிலும்) ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக சொன்னது மகிழ்ச்சி அளித்தது. நான் விரும்பிய மாற்று அரசியலை ரஜினி முன்வைக்க இருந்த ஆன்மிக அரசியலும் அவரது நிலைப்பாடுகளும் பெருமளவுக்கு திருப்தி செய்தன என்றால் மிகையில்லை. என்னை பொறுத்தவரை ரஜினி முன்வைக்க இருந்த அரசியல்தான் மாற்று அரசியலுக்கான அளவுகோல்.

வெறும் பார்வையாளராக இல்லாமல், ரஜினியின் மாற்று அரசியலுக்கு ஏதாவது பங்களிக்கலாம் என்ற தன்னார்வத்துடன் தொடங்கப்பட்டதுதான் இந்த TN2.0 வலைத்தளம். அதன்பின் படிப்படியாக ட்விட்டர் கணக்கு, முகநூல் பக்கம், யூட்யூப் சேனல் என தொடங்கினேன். புள்ளிவிவர + வரலாற்று தரவுகளை அடிப்படையாக வைத்து திமுக/அதிமுக அரசியலுக்கு எதிராக வலுவான வாதங்களை வைத்த பதிவுகள் TN2.0வின் சின்ன நேயர்/வாசகர் வட்டத்தில் வரவேற்பை பெற்றன.

டிசம்பர் 29, 2020ல் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று சொன்ன பின்பும் கூட, இரண்டு மாதங்களுக்கு அவர் அரசியல் பிரவேசம் இருக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. இன்றைய சூழ்நிலையில் ரஜினி அரசியல் வருகைக்கு வாய்ப்பில்லை என்று முடிவுகட்டிவிட்டேன்.

2021 தேர்தல் களத்தில் ரஜினியின் ஆன்மிக அரசியல் இல்லை என்ற நிலையில், என் சிந்தனை ஓட்டம் இதுதான் – மிகப் பலமான மாற்று இல்லை என்கிற சூழலில், “திமுக வேண்டாம் என அதிமுகவுக்கோ”, “அதிமுக வேண்டாம் என திமுகவுக்கோ” ஓட்டு போடுவது என்பது ஒரு வாக்காளனாக நான் தோற்றுவிட்டேன் என்றே பொருள். வெற்றியோ தோல்வியோ, ஒரு மாற்று அரசியல் கட்சி/அணிக்கே வாக்களிக்க வேண்டும். [நோட்டாவிற்கு ஓட்டு போட்டு என் வாக்கை விரயம் செய்வதில் விருப்பம் இல்லை]. மாற்று அரசியல் வாக்காளனாக என் முயற்சியில் நான் பின்வாங்கப்போவதில்லை.

இந்த சிந்தனையின் அடிப்படையில், என் முன் இருக்கும் ஒரே ஆக்கப்பூர்வமான வாய்ப்பு – மக்கள் நீதி மய்யம் (மநீம)

என்னை பொறுத்தவரை, “இன்னொரு அதிமுக”வான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மாற்றாக பார்க்க இயலவில்லை. அது போல, “தமிழ்த்தேசிய உணர்வை ஊட்டுகிறேன்” என்று இந்திய தேசிய உணர்வை கொன்று புதைக்கும் நாம் தமிழர் கட்சியையும் நான் மாற்றாக அங்கீகரிக்கவில்லை.

அதே நேரம், நான் எதிர்பார்த்த ஆன்மிக அரசியல் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஒரு ஆக்கபூர்வமான, நேர்மறை மாற்று அரசியலையே கமல்ஹாசனின் “மக்கள் நீதி மய்யம்” முன்வைக்கிறது. கமலின் சில அரசியல் நிலைப்பாடுகள்/கருத்துகளில் எனக்கு விமர்சனம் இருந்தது (இருக்கிறது) என்பதைத் தாண்டி, இன்றைய களத்தில் மநீமவை ஒரு நல்ல மாற்று வாய்ப்பாகவே பார்க்கிறேன் [இது குறித்து சில தனிப் பதிவுகள் விரைவில்].

திமுகவின் பட்டத்து இளவரசர் உதயநிதி எளிதாக எம்.எல்.ஏ ஆகி சென்றுவிடக்கூடிய சட்டமன்றத்தில், மநீம வேட்பாளர்களான

 • கமல்ஹாசன்
 • பழ.கருப்பையா
 • பொன்ராஜ்
 • சந்தோஷ் பாபு
 • சரத் பாபு
 • செந்தில் ஆறுமுகம்
 • சிவ இளங்கோ

போன்றவர்கள் எம்.எல்.ஏக்களாக உள்ளே நுழைவதே ஆரோக்கிய அரசியலுக்கு இன்னமும் இடமிருக்கிறது என்பதற்கான அடையாளம் என்பது என் திடமான எண்ணம்.

இந்தக் காரணங்களால், 2021 தேர்தலில் திமுக/அதிமுகவிற்கு மாற்றான சிறந்த வாய்ப்பாக மநீமவை ஏற்று வாக்களிக்க போகிறேன். ஊர்கூடித் தேரிழுத்தால்தான் திமுக/அதிமுகவுக்கு எதிராக ஒரு மாற்று கட்சியை வலுப்படுத்த முடியும் என்பதால், TN2.0 தளங்களின் மூலம் இணையம் வழியே (ஒரு வாக்காளனாக சக வாக்காளர்களிடம்) மநீமவுக்கு வாக்கு சேகரிக்க போகிறேன். இது மாற்று அரசியலுக்கு என்னால் முடிந்த பங்களிப்பு.

இந்த நீண்ட விளக்கத்திற்கு காரணம், இதுவரை என் பதிவுகளை தொடர்ந்து வந்தவர்களுக்கு “என் ஓட்டு யாருக்கு?” என்ற நிலைப்பாட்டின் பின்னணியை தெளிவாக சொல்லவேண்டும் என்பதுதான். இந்த விளக்கம், இனிவரும் பதிவுகளை படிக்கும்போது சரியான கண்ணோட்டத்தில் அணுக உதவும் என்ற எண்ணமும் காரணம்.

இறுதியாக, என் நட்புவட்டத்தில் இருக்கும் நிறைய (தலைவர்) ரஜினி ரசிகர்களுக்கு –
உங்களில் சிலர் “ஒரு ரஜினி அபிமானி கமலுக்கு ஓட்டு போடுவதா?” என்று கேட்கக்கூடும். அந்த கேள்விக்கு என் பதில்கள் இங்கே –

 • ரஜினி vs கமல் என்பது, ரஜினி இல்லாத இந்த அரசியல் களத்தில் பொருந்தாது என்பதே என் கருத்து.
 • திமுக, அதிமுகவை எதிர்த்து நிற்கவே ரஜினி எண்ணினார். இன்று கமலும் இரண்டு கட்சிகளையும் எதிர்த்தே நிற்கிறார். அவ்வகையில் முரண் ஏதும் இல்லை.
 • கமல் அவ்வப்பொழுது ரஜினியை அரசியல் ரீதியாக விமர்சித்திருக்கிறார் என்பதை நான் மறுக்கவில்லை. ரஜினியின் அரசியல் வருகையால் உந்தப்பட்டுதான் கமல் அரசியலுக்கு வந்தார் என்ற கருத்தை மறந்துவிடவும் இல்லை. அவற்றையெல்லாம் மீறி, “மக்கள் நலனுக்காக நானும் கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நிச்சயமாக இணைவோம்” என்று ரஜினியே ஒருமுறை சொன்னார். அதனையொட்டி, இந்த தேர்தலில் திமுகவோ அதிமுகவோ அசுரத்தனமாக வென்றுவிட்டால் பின் மாற்று அரசியலுக்கான குரலையே நசுக்கிவிடுவார்கள் என்ற நோக்கில், “தமிழக நலன்” என்ற விரிந்த பார்வையுடன் கமலை அரசியல் ரீதியாக இப்பொழுது ஆதரிப்பதில் தவறில்லை என்பதே என் நிலைப்பாடு.

தேர்தல்கள் வரலாம், போகலாம். கட்சிகளும் வரலாம், போகலாம். தலைவர்கள் எழலாம், விழலாம். என்ன நடந்தாலும், திமுக அதிமுகவிற்கு மாற்றாக இங்கே ஒரு வலுவான கட்சியைத் தேடும் இந்த வாக்காளனின் பயணம் தொடரும்.

2 comments
 1. Gopinathan

  Excellent decision. குழப்பமான நேரத்தில் தெளிவான முடிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!