அலசல்

ரஜினியால் இல்லேன்னா…

ட்விட்டரில் ஒரு poll (தேர்தல்) வைத்தேன். அந்த pollன் நோக்கம் மற்றும் முடிவுகள் குறித்த சிறிய பதிவு இது.

ட்விட்டரில் நான் பின் தொடர்பவர்கள் மற்றும் என்னை பின் தொடர்பவர்கள் பெரும்பாலும் ரஜினி அபிமானிகள்தான். அதனால் ரஜினி அபிமானிகளிடையே ஒரு poll வைக்கலாம் என்று தோன்றியது. நான் கேட்ட கேள்வி இதுதான் –

தலைவர் கட்சி தேர்தல் களத்தில் இல்லாத இன்றைய நிலையில் தேர்தல் வந்தால், உங்கள் ஓட்டு யாருக்கு?
-திமுக
-அதிமுக
-மக்கள் நீதி மய்யம்
-நாம் தமிழர் கட்சி

அடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் கட்சி களத்தில் இருக்கப் போவது நிச்சயம். அதனால்தான் “இன்றைய நிலையில்” என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்த pollன் நோக்கம் –

  • ரஜினி அபிமானிகளில் எவ்வளவு சதவிகிதம் பேர் “என்ன ஆனாலும் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ ஓட்டு போடமாட்டேன்; ஏதோ ஒரு மாற்று அரசியல் கட்சிக்குதான் ஓட்டு போடுவேன்” என்று இருக்கிறார்கள்?
  • ரஜினி அபிமானிகளில் எவ்வளவு சதவிகிதம் பேர் “வேறு வழியில்லை என்றால் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ ஓட்டு போடுவேன்; ஓட்டு வீணாக விடமாட்டேன்” என்று இருக்கிறார்கள்? அப்படிப்பட்ட நிலையில் திமுக, அதிமுகவிற்கான ஆதரவு எப்படி இருக்கிறது?

சிலர் “ஏன் தேமுதிக, பாமக, பிஜேபி, அமமுக சேர்க்கவில்லை?” என்றார்கள். 2019 தேர்தல் மற்றும் இன்றைய நிலையில் இவர்கள் கூட்டணியில் உள்ளவர்கள். அமமுக கிட்டத்தட்ட அதிமுகவின் வடிவம் – மாற்று அரசியல் கட்சியாக பார்க்க முடியவில்லை.

பலர் “ஏன் நோட்டா சேர்க்கவில்லை?” என்றார்கள். Pollல் நான்கு சாய்ஸ்தான் தர முடியும். என்றாலும், 137 பேர் pollல் நேரடியாக தேர்வு செய்ய முடியாததால், நோட்டா என்றோ வேறு கட்சி பெயர் சொல்லியோ ட்வீட்டுக்கு பதில் சொல்லியிருந்தார்கள். அந்த வாக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டேன்.

நேரடி தேர்வு மற்றும் “ட்வீட் பதில்” ஓட்டுகள் சேர்ந்து மொத்தம் 2452 ஓட்டுகள். Pollன் முடிவுகள் இங்கே –

Twitter Poll Results

2452 ஓட்டுகள் பெரிய சாம்பிள் கிடையாது. ஆனாலும், தோராயமாக எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ளலாம். முடிவுகளைப் பற்றி என் அலசல் –

  • பொதுவாகவே, திமுக அதிமுகவிற்கு வலுவான மாற்று இல்லாத நிலையில் அந்த இரு கட்சிகள் மட்டுமே கிட்டத்தட்ட 80% ஓட்டுகளை அள்ளிவிடும். “இவர்கள் வேண்டாம்” என்று நினைப்பவர்களின் (20%) வாக்குகள் 2-4 கட்சிகளாக பிரியும். இதற்குமுன் அந்த ஓட்டுகளை அதிகபட்சமாக 10% வரை விஜயகாந்தின் தேமுதிக வாங்கியது. இந்த பொதுவான மனநிலைதான் இந்த ட்விட்டர் poll முடிவுகளிலும் தெரிகிறது. 21% மட்டுமே திமுக, அதிமுகவை முழுமையாக ஒதுக்குகிறார்கள்.
  • “ரஜினி கட்சி களத்தில் இல்லாத இன்றைய நிலையில்” என்று குறிப்பிட்டும், மக்கள் நீதி மய்யத்திற்கான ஆதரவு பெரிதாக இல்லை. மாற்று கட்சிகளில் அதிகபட்ச ஆதரவு (12%) என்று சொல்லலாம், மற்றபடி இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவு தளத்தில் சேதம் உருவாக்கும் அளவில் இல்லை. நிச்சயமாக, இது “ரஜினி – கமல்” சினிமா ரசிக சண்டையின் தாக்கமாக இருக்க முடியாது. இருவரின் ரசிகர்களுமே (ஒரு சிலரை தவிர) சினிமா போட்டியை தாண்டி யோசிக்கக்கூடிய பக்குவம் உள்ளவர்கள்தான். ட்விட்டரில் active ஆக இருக்கும் ரஜினி அபிமானிகள் இடையே கூட, கணிசமான ஆதரவை கமல் திரட்ட முடியவில்லை என்பது அவர் அரசியலில் உள்ள பலவீனங்களை காட்டுகிறது.
  • “வேறு வழியில்லையெனில் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ ஓட்டு போடுவேன்” என்பவர்கள் 79% இருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 71% அதிமுகவிற்கு சாதகமாக இருப்பது தெளிவாக சொல்வது என்னவென்றால் – “அதிமுக மீண்டும் வந்தாலும் பரவாயில்லை, திமுக வந்துவிடக் கூடாது”. இது அதிமுகவிற்கான பாசிட்டிவ் ஓட்டு என்பதை விட, திமுகவின் நெகடிவ் ஓட்டு என்றே தெரிகிறது.

இந்த pollன் முடிவுகள் தீர்க்கமாக சொல்வது – ரஜினி என்கிற வலுவான சக்தி வந்தால் மட்டுமே திமுக & அதிமுகவின் வேர்களை அசைக்க முடியும்.

Rajinikanth at Leela Palace Press Meet (March 2020)

மார்ச் 12, 2020 அன்று லீலா பேலஸ் பேச்சில் ரஜினி தான் மற்றுமொருவராக 18%-20% ஓட்டு வாங்க வரவில்லை என்பதையும், இரண்டு ஜாம்பவான்களான திமுக & அதிமுகவை வீழ்த்தும் சக்தியாக வர விரும்புவதையும் கோடிட்டு காட்டினார். “மாற்றம் வேண்டும்” என்ற எழுச்சி மக்களிடம் உருவாக வேண்டும் என்று சொன்னார். அப்பொழுது அவர் சொன்னது – “54 வருடங்களுக்கு பிறகு கிடைத்திருக்கும் வாய்ப்பு. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை”.

இந்த pollஐ (சின்ன சாம்பிளாக இருந்தாலும்) அடிப்படையாக வைத்து நான் சொல்கிறேன் – “அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் ரஜினியால் இல்லேன்னா யாராலும் இல்லை”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!