மாற்று அரசியல்

மதம் – திராவிட அரசியலும், ஆன்மிக அரசியலும்

இங்கே மதத்தை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தாத கட்சிகளே இல்லை. இந்து மதத்தை பாஜக ஒரு முனையில் பயன்படுத்துகிறது. அதற்கு இணையாக, திமுக இந்து மதத்தை மறுமுனையில் பயன்படுத்துகிறது. இது ஆச்சரியமான குற்றச்சாட்டாகக் கூட தெரியலாம். ஆனால், தமிழகத்தில் மாற்று அரசியல் விரும்பும் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய புள்ளி.

இந்து மதமும் திராவிட அரசியலும்

திராவிட அரசியலும் இந்துமதமும் ஒருவருக்கொருவர் கொண்ட தாக்கத்தை கேள்வி-பதில் நடையில் முன்வைக்கிறேன். கேள்வி சாமானியனது, பதில் திராவிட அரசியலாருடையது.

கேள்வி: ஏன் இந்து மதத்தையும் அதன் கடவுள்கள், புராணங்கள், வழிபாட்டு முறைகளை இவ்வளவு பரிகசிக்கிறீர்கள்?

பதில்:

இந்து மதம் என்பது ஆரியர்களின் மதம். ஆரியர்கள் இங்கு வந்து, இங்கிருந்த கலாச்சாரத்தில் தங்கள் பழக்க வழக்கங்களை புகுத்தி அனைத்தையும் ஆரியமயப்படுத்தி இந்துமதத்தை பரப்பிவிட்டார்கள். இந்துமதம் வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களை பிறப்பால் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என பிரிக்கிறது.

இப்படி அடுக்குநிலை சாதி அமைப்பில் சூத்திரர்களும் பஞ்சமர்களும் (ஆதி திராவிடர்கள்) பிறப்பின் அடிப்படையில் மிகவும் கீழான நிலையில் வைக்கப்படுகிறார்கள். பிராமணர்களே உயர்ந்தவர்கள் எனக்கொண்டு, அவர்களுக்கு கல்வி மற்றும் அரசு அதிகாரம்/ஆலோசனைகளில் அளவில்லாத முக்கியத்துவமும் சலுகைகளும் கொடுக்கப்பட்டன. இதனால் சமூகத்தில் சாதிரீதியான ஏற்றத் தாழ்வுகள் பெருகியது. எனவே, பிராமணரல்லாதார் நலனை முன்னிறுத்தி சமூக நீதியை நிலைநாட்டவே திராவிட இயக்கங்கள் அரசியலில் இருக்கின்றன. இதுதான் இந்துமத எதிர்ப்புக்கு அடிப்படை.

கேள்வி: வர்ணாசிரமம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல; குணம் மற்றும் வாழும் வகையை அடிப்படியாகக் கொண்டது என பகவத்கீதை சொல்கிறதே.

பதில்: 

நடைமுறையில் பிறப்பின் அடிப்படையில்தான் வர்ணாசிரமம் இயங்குகிறது.

கேள்வி: நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்திலும், 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த வர்ணாசிரமப் பிடி அப்படியே இருக்கிறதா?

பதில்:

(இதற்கு “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” பதில் வருவதில்லை) – இன்றைக்கும் பிராமணர்கள் ஆதிக்கம் இருக்கிறது. இன்றைக்கும் திராவிட இயக்கங்களுக்கான தேவை வலுவாக இருக்கிறது. சமூக அநீதியை (இந்து) மதம் தாங்கிப் பிடிக்கிறது. (இந்து) மதத்தை கடவுள் தாங்கிப் பிடிக்கிறார். எனவே (இந்து மதக்) கடவுள் வரை நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்து மதத்திற்கு மாற்று கடவுள் மறுப்பா?

பெரும்பாலான (தமிழ்) இந்துக்கள், இந்து மதம் இங்கே ஆதியிலிருந்தே இருந்த மதம் என்ற கருத்தை ஏற்பவர்கள்.  அதையும் மீறி,  ஒரு வாதத்திற்காக, மேலே சொன்ன “திராவிட அரசியலார்” கருத்தின் படியே இந்து மதம் ஆரியர்களால் இங்கிருந்த திராவிட கலாச்சாரத்தின் மேல் திணிக்கப்பட்ட மதம் என்றே எடுத்துக்கொள்வோம். அப்படியென்றால் இந்து மதம் வருவதற்கு முன் இங்கே “திராவிட மதம்” என்று ஏதும் இருந்ததாக திராவிட இயக்கத்தினர் சொல்கிறார்களா?

இது குறித்த தேடல்களில் தெளிவான பதில் இல்லை. ஓட்டைப் பற்றி கவலை கொள்ளாத பெரியாரும், தேர்தல் அரசியலில் வெற்றி வேண்டும் என்று நினைத்த அண்ணாவும், இன்றைய நவீன பெரியாரிஸ்ட்களும் வெவ்வேறு பதில்கள் தருகின்றனர்.

பெரியார் “தமிழர்களுக்கு ஆரியர் வேதம், கடவுள், சமயாதாரம் ஆகியவைகள் தவிர்த்த தனித்தமிழ்க் கொள்கையோ, முறையோ ஏதும் இருந்ததாகச் சொல்ல ஆராச்சியாளர்களுக்கு இடமில்லாமலே நம் இன்றைய தமிழ்ப் பண்டிதர்களும், பழங்காலப் பண்டிதர்களும் இன்றைய அரசர்களும் பழந்தமிழ் அரசர்களும் செய்துவிட்டார்கள்” என்கிறார் (13.11.1943 – ‘குடிஅரசு’வில் வெளிவந்த கட்டுரை).

அண்ணா “திராவிட நாடு” கோரிக்கையை கைவிடும் முன்பு சொன்னது – “தமிழர், தமிழ்நாடு தமிழருக்கே என்று நாம் கூற வந்தபோது, தமிழர் என்றால் தனி இனம், ஆரியத்தின் கலப்புக்கு முன்பு உயர்ந்த பண்புகளுடன் வாழ்ந்த இனம், என்பதை வலியுறுத்தி வந்தோம். வெறும் மொழி மட்டுமல்ல, தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள் என்பதை விளக்கி வந்தோம்” (“இன்பத் திராவிடம்” புத்தகத்தில் – 4ம் பதிப்பு – பக்.21). இப்படி சொன்னாலும், திராவிடர்களுக்கென்று ஒரு மதம் இருந்ததாகவோ கும்பிட கடவுள்கள் இருந்ததாகவோ அண்ணா சொல்லவில்லை. தமது “கடவுள் மறுப்பு” கொள்கை காரணமாக அது பற்றி பேசவில்லையா என தெரியவில்லை.

நவீன பெரியாரிஸ்ட்களோ “நாங்கள் எதிர்ப்பது ஆரியக் கடவுள்களான பிள்ளையாரையும், ராமரையும்தான். இங்கேயே இருக்கும் கருப்பசாமியையோ அய்யனாரையோ மாரியம்மனையோ எதிர்ப்பதில்லை” என்று புது சித்தாந்தம் சொல்கிறார்கள்.

ஒரு சாமானியனாக என் பார்வையும் கேள்வியும் இதுதான் – அம்பேத்கருக்கு இந்துமதத்தின் கோட்பாடுகளில் விருப்பமில்லை. அவர் பௌத்தத்தை தழுவினார். அக்பர் தன் காலத்தில் பல மதங்களிலிருந்து நல்ல கோட்பாடுகளை எடுத்து “தின்-இ-லாஹி” என்றொரு மதத்தை கொண்டுவந்ததாக வரலாறு சொல்கிறது. இந்து மதம் ஆரியக் கலப்பு மதம் என்று சொல்லும் திராவிடவாதிகள், பிராமணர் அல்லாதார் இந்துமதத்தை பின்பற்றக்கூடாது என்றால், அதற்கு ஒரு மாற்று மதத்தை முன்வைத்தார்களா? அல்லது, திராவிடருக்கென்று ஒரு மதம் இருந்தது என்று ஏதேனும் ஆராய்ச்சி செய்து அதை மீட்டெடுக்க முனைந்தார்களா?

மதத்திற்கு இன்னொரு மதம் மாற்றாக இருக்கலாம், கடவுள் மறுப்பு எப்படி மாற்றாக இருக்க முடியும்?

மதத்திற்கு ஆன்மிகம் மாற்றாக இருக்கலாம், கடவுள் மறுப்பு எப்படி மாற்றாக இருக்க முடியும்?

தீர்வு தரக்கூடிய ஆன்மிக அரசியல்

இப்படி மாற்றாக வேறொரு மதத்தையோ, மதம் கடந்த ஆன்மிகத்தையோ முன்வைக்காமல், கடவுள் மறுப்பை மாற்றாக வைத்தால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்துமதத்தின் பாதையில் பயணிக்கவே செய்வார்கள். அந்த மதத்தில் சமஸ்க்ருதம் மந்திர மொழி என்றால் அதை ஏற்கவே செய்வார்கள். இப்படிப்பட்ட நிலையில், திராவிட அரசியலார் இந்துமதத்தை இழித்தும் பழித்தும் என்ன சாதிக்க போகிறார்கள்?

“மூட நம்பிக்கை ஒழிப்புக்காக பழிக்கிறோம்” என்றால், எல்லா மதங்களின் மூட நம்பிக்கைகளையும் ஒரே தராசில் வைத்து விமர்சனம் செய்யுங்கள். உங்கள் நேர்மையை மெச்சி (இந்து மதத்தினர்) அந்த விமர்சனங்களைக் கடந்து போவார்கள். அல்லது, தேவைக்கேற்ப தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்துவார்கள்.

“சமூக நீதிக்காக இந்துமதத்தை பழிக்கிறோம்” என்று சொன்னால், இதோ இந்த மாற்று கருத்தை சிந்தியுங்கள் –
இது சற்றே நவீன காலம். விழிப்புணர்வும் தொழில்நுட்பமும் உலகமயமாக்கலும் பரவி இருக்கும் காலம். மதத்தோடு இணைக்காமலேயே சமூக நீதியை நிலைநாட்டக் கூடிய காலம். வர்ணாசிரமம் பின்பற்றப்பட்டாலும் பின்பற்றப்படாவிட்டாலும், சமூக நீதியை செயல்படுத்தக் கூடிய அறிவார்ந்த காலம்“.

ஆனால், இப்படி மதத்தைக் கடந்து சமூக நீதியை நிலைபெறச் செய்ய வேண்டுமெனில் –
“மூட நம்பிக்கை ஒழிப்பு கால் கிலோ, கடவுள் மறுப்பு கால் கிலோ, ஆரிய எதிர்ப்பு அரை கிலோ” என்ற திராவிட மிக்சர் அரசியல் பயன் தராது.  அதுபோலவே, பெரும்பான்மை மதத்தினரை மட்டுமே குளிர்விக்கும் ஒரு சார்பு இந்துத்வா அரசியலும் பயன் தராது. மாறாக, மதங்களின் சீர்திருத்தங்களை அந்தந்த மதத்தினரிடம் விட்டுவிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் மத பேதமின்றி ஒருங்கிணைக்கும் ஆன்மிகப் பார்வை கொண்ட அரசியலே பயன் தரும். 

மேற்சொன்ன நவீனத்தை உட்கொள்ளாத திராவிட அரசியலுக்கு மாற்றாகவே, ரஜினியின் ஆன்மிக அரசியல் அமையும் என்ற நம்பிக்கை அவரது அபிமானிகளைத் தாண்டி, பொதுமக்களிடமும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது. ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் ரஜினி, “ஜாதி மத சார்பற்ற அறவழியில் நடப்பதே ஆன்மிக அரசியல். ஆன்மிகம் என்று சொன்னால் எல்லா ஜீவன்களும் ஒன்றுதான். எல்லாமே பரமாத்மா என்றிருப்பது ஆன்மிக அரசியல். இறை நம்பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல்.” என்று சொன்ன வாக்கியங்கள் இங்கே நினைவுகூரத் தக்கவை.

காலம், அவ்வப்பொழுது நம்பிக்கை விதைகளை விதைக்கத் தவறுவதில்லை. அந்த விதைகளுக்கு நீரூற்றி பசுமையை அறுவடை செய்வது நம் கைகளில் இருக்கிறது.

One comment
  1. திராவிடம் 2.0

    ஒரளவுக்கு தெளிந்த சிந்தனையுடன் பேசியுள்ள கட்டுரையாளர் ஆன்மீக அரசியலில் அடி சறுக்கியுள்ளார். பஞ்சபூதங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த தொழிற்சாலையும் தேவையில்லை என்று கூறி தூத்துக்குடி புறப்பட்டவரை ஆன்மீக அரசியலில் நேர்மை இருந்தது.

    திரும்பி வீட்டிற்கு வருவதற்குள் அந்தர் பல்டியாக மூணாவது பேட்டியாக சமூக விரோதிகள் நுழைந்த போது ஆன்மீக அரசியல் பார்ப்பனியத்தின் அடிவருடியாகப் போய்விட்டதே. இந்தக் கருத்தை தூத்துக்குடிக்குச் செல்வதற்கு முன்னரே சொல்லியிருந்தால் கொஞ்சம் நம்பிக்கை இருந்திருக்கலாம். இடையில் வந்த நெருக்கடி என்னவோ ஆன்மீக அரசியலுக்கே வெளிச்சம்.

    படையப்பா ஒரு தடவை தான் துண்டை தவறவிட்டார். ஆனால் ஆன்மீக அரசியல் நாயகன் தூத்துக்குடி சென்று வந்ததிலிருந்து ஒரே சறுக்கல் தான். ஆன்மீக அரசியல் பார்ப்பனியத்தின் அடிவருடியாக மாறிப்போனது துரதிர்ஷ்டமே. ஆனால் ஒருவகையில் அதுவும் நன்மைக்கே. தேர்தலுக்கு முன்னரே மக்கள் விழித்துக் கொள்ள வசதியாகி விட்டது.

    மேலும் திராவிட சிந்தனையாளர்களின் எதிர்ப்பு பார்ப்பனியத்திற்கு எதிரானதே தவிர பார்ப்பனர்களுக்கு எதிரானதும் அல்ல. பார்ப்பனியத்தின் கொடுமை பற்றித் தெரிய ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் அல்லாதவர் நிலமையை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களிடம் கொஞ்சம் திராவிடப் பற்று இருப்பதாகவே தெரிகிறது. போய் திராவிட இயக்க வரலாறை முழுசாகப் படிங்க சார். ஆன்மீக அரசியல் எப்படி பார்ப்பனியத்தின் அடிவருடியாகப் போய்விட்டது என்பதை உணர்வீர்கள். உங்கள் தளத்தின் பெயரையே மாற்றத் துணிவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!