ஐயா திரு.கார்த்திகேயே சிவசேனாபதி அவர்களுக்கு,
நீங்கள் எங்கள் தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதம் அனுப்பியிருப்பதைக் கண்டோம். அக்கடிதத்தில் நான்கு கேள்விகளை முன்வைத்திருக்கிறீர்கள். அக்கேள்விகளுக்கு எங்களிடமே பதில்கள் இருப்பதால், இதோ உங்களுக்கான பதில் கடிதம்.
கேள்வி (??) 1: நீங்கள் கேள்வி என்று குறிப்பிட்டிருந்தாலும் இதில் கேள்வி ஏதும் இல்லை. நீங்கள் சொல்ல வருவது “பெரியாரையும் பெரியாரின் சித்தாந்தத்தையும் அறிந்து புரிந்து உணர்ந்து பேசுங்கள்” எனப் புரிகிறது.
பதில்: சமீபத்திய துக்ளக் ஆண்டு விழாவில் எங்கள் தலைவர் பேசியதை வைத்து, இப்படி “அறிந்து புரிந்து உணர்ந்து பேசுங்கள்” என்று நீங்கள் கூறுவதாகத் தெரிகிறது. அந்த விழாவில் பெரியரைப் புரியாதவராக என்ன பேசிவிட்டார் என்பதை நீங்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். 1971 சேலம் “மூட நம்பிக்கை ஒழிப்பு” மாநாடு பெரியார் தலைமையில் நடந்ததும், அந்த மாநாட்டு ஊர்வலத்தில் கடவுளர் படங்கள் (குறிப்பாக ராமர்) செருப்பு கொண்டு அவமானப்படுத்தப்பட்டதும் வரலாற்று நிகழ்வு. இதனை பெரியாரே மறுக்கவில்லை. அப்படிப்பட்ட சம்பவத்தை “துக்ளக்” வெளிக்கொண்டு வந்ததையும், அதனை அன்றைய திமுக அரசு பறிமுதல் செய்ததையும் தலைவர் ரஜினி மேடையில் சொன்னார். இதற்கு மேலும் “அறிந்து புரிந்து உணர்ந்து” என்ன பேசவேண்டும்?
மேற்சொன்ன பேச்சில் எங்கள் தலைவர், பெரியாரது செயல்பாடு குறித்தோ கொள்கைகள் குறித்தோ எந்த விமர்சனமும் வைக்கவில்லை. இந்நிலையில் “அறிந்து புரிந்து உணர்ந்து பேசுங்கள்” என்ற கோரிக்கைக்கு இடமில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கேள்வி 2: பல முறை நீங்கள் செய்தித் தொடர்பாளர்களை உங்கள் வீட்டு வாசலின் சந்தித்துப் பேட்டி அளிப்பதைப் பார்த்து இருக்கிறேன். எதற்காக உங்கள் வீட்டுக் கதவுகள் எங்கள் ஊடக நண்பர்களுக்காகத் திறக்கப்படவில்லை?
பதில்: முதலில், எங்கள் தலைவர் இன்னும் முழுநேர அரசியலில் இறங்கவில்லை. அப்படி இறங்கும் சமயம், கட்சிக்கென்று அலுவலகம் இருக்கும். அந்த அலுவலகத்தில் ஊடகத்தினருக்கென்று தனி இடம் ஒதுக்கி சந்திப்புகள் நடக்கும். தற்சமயம் நிகழும் பேட்டிகள் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களைத் தாண்டாத பேட்டிகள். அவையும் அடிக்கடி நிகழும் பேட்டிகளும் அல்ல. இத்தகைய நிலையில், பேட்டி கொடுக்க ஊடகத்தினருக்கென்று வீட்டில் தனியிடம் ஒதுக்குவது நடைமுறையில் சாத்தியமில்லையே.
மேலும், தான் “அரசியலுக்கு வருவது உறுதி” என்று அறிவித்தபின் பத்திரிக்கையாளர்களுக்கென்று தனி சந்திப்பு நிகழ்த்தினார். பின்னர் ஒருமுறை ராகவேந்திரா மண்டபத்தில் உள்ளே வைத்து நிருபர்களை சந்தித்தார். தன் வீட்டுக்கு வெளியில் நிகழும் பேட்டிகளிலும் நிருபர்களுக்கு உரிய மரியாதையை அவர் தரத் தவறியதில்லை.
இதுவரை சொன்னவை, உங்கள் நேரடிக் கேள்விக்கான பதில். அதே சமயம், உங்கள் கேள்விக்கு நீங்கள் கொடுத்திருக்கும் துணை விளக்கம் உங்கள் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. “நாங்கள் சூத்திரர்கள் தான் பஞ்சமர்கள் தான் உங்கள் அகராதியில்” என்றும், “நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற மனப்போக்கு” என்றும் சொல்வதன் மூலம், எங்கள் தலைவரின் நற்குணத்தை மறைத்து, சாதி மற்றும் வர்க்க பேத சாயம் பூச வன்மத்தோடு இறங்கியிருக்கிறீர்கள் என்பது தெளிவு. அவர், இது போன்ற எந்த பேதத்தையும் பார்க்காதவர் என்பதை அவரோடு பழகிய, வேலை செய்த பலரும் 40+ ஆண்டுகளாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.
இன்றைய முதல்வரும்,எதிர்க்கட்சி தலைவரும், மற்றுமுள்ள அரசியல் தலைவர்களும் எல்லா பேட்டிகளையும் தங்கள் வீட்டினுள் வைத்துதான் தருகிறார்களா? அப்படி செய்யாததால் அவர்களை சாதி பேதம் பார்ப்பவர்களாகவோ, வர்க்க பேதம் பார்ப்பவர்களாகவோ, தமிழர் பண்பாடு இல்லாதவர்களாகவோ சித்தரிப்பீர்களா?
சாதி, மத பேதமற்ற ஆன்மிக அரசியலை முன்னெடுக்க வருகிற ஒருவருக்கு, புகழின் உச்சம் தன் தலைக்கேறாமல் பார்த்துக்கொள்ளும் எளிமையான மனிதர் என்று பலராலும் வியக்கப்படும் ஒருவருக்கு, இப்படி ஒரு களங்கத்தை சுமத்த முற்படுவதன் மூலம் தமிழர் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் இல்லாத ஒரு கீழமையை நீங்கள் கைக்கொண்டிருக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது.
கேள்வி 3: உங்களுக்கு எதிர்வினையாகக் கருத்தைப் பதிவு செய்தால் உங்கள் ரசிகர்கள் அதற்கான பதிலையோ எதிர்வினையோ கொடுக்காமல், ஏன் பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் திரு. H ராஜா , தமிழக செயலாளர் திரு. KT ராகவன் , திரு. இல. கணேசன் திரு அர்ஜுன் சம்பத் (ஹிந்துத்வ ஆதரவாளர்கள்) என அனைவரும் உங்களுக்கு ஆதரவான கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர். அவர்கள் தான் உங்களின் விசிறிகளா? அல்லது நீங்கள் அவர்கள் சார்ந்த சித்தாந்தத்தைச் சேர்ந்தவரா?
பதில்: எங்கள் தலைவருக்கு எதிர்வினையாகக் கருத்தைப் பதிவு செய்துவிட்டு, காவிக் கண்ணாடியை போட்டுக் கொண்டு பதில் தேடினால், ராஜாக்களும் ராகவன்களும் மட்டுமே உங்கள் கண்ணுக்கு தெரிவார்கள். கண்ணாடியை எடுத்துவிட்டுப் பாருங்கள் – ராகவா லாரன்ஸ்களும் ரஜினி பாலுக்களும் பல்லாயிரக் கணக்கில் பதிவிட்டிருப்பதைப் பார்க்க முடியும்.
கேள்வி 4: தமிழர்கள் மற்றும் தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய பலவிதமான விடயங்கள் குறிப்பாக , NEET கதிரமங்கலம், புதிய கல்விக் கொள்கை , ஹைட்ரா கார்பன் திட்டங்கள் , ஐந்து மட்டும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு , NEET தேர்வில் ஏழை எளிய மாணவர்கள் விண்ணப்பம் கூடப் பெற முடியாத சூழ்நிலை எனத் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் என எதற்கும் கேள்வி எழுப்பாமல், சுமார் ஐம்பது ஆண்டுக்கு முன்னர் இறந்து போன பெரியாரை ஏன் பேசுகிறீர்கள்?
பதில்: ஐயா, ஒரு பத்திரிக்கையின் 50ம் ஆண்டு விழாவில் அதன் பயணத்தில் இருந்த முதல் முக்கியமான மைல்கல்லைப் பற்றி எங்கள் தலைவர் பேசினார். அந்த மைல்கல் சம்பவத்தில் பெரியாருக்கு பங்கிருந்தது என்றால் அதற்கு எங்கள் தலைவர் எப்படி பொறுப்பாவார்?
அது போக, அன்றாட அரசியலில் இல்லாவிட்டாலும் அவ்வப்பொழுது தமிழர்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி எங்கள் தலைவர் பேசியிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களில் அவர் கொடுத்த பேட்டிகள் மற்றும் சில மேடை பேச்சுகள் பற்றிய செய்திகளை நீங்கள் படித்தால் தெரிந்து கொள்வீர்கள்.
உங்கள் கேள்வியை படிக்கும் பொழுது வேறொரு எண்ணம் எழுவதை தவிர்க்க இயலவில்லை – உங்கள் வாதப்படி பார்த்தால், இன்றைய முக்கிய பிரச்சினைகளை பேச வேண்டி இருப்பதால், 50 ஆண்டுகளுக்கு முன் இறந்த பெரியாரை மறந்து விடலாம் போல. உங்கள் கூற்றுப்படி, பெரியார் இன்று பேசக்கூடாத மனிதர். உங்கள் முதல் கேள்வியை (??) படித்த பொழுது, நீங்கள் பெரியாரின் தீவிர அபிமானி என்று தோன்றியது. இந்தக் கேள்வி அந்த எண்ணத்தை தரைமட்டமாகி விட்டது. “ரஜினி வெறுப்பு” என்ற முகத்தை மறைக்க, “பெரியார் அபிமானம்” என்ற முகமூடி அணிந்தீர்கள் போல. இப்பொழுது அந்த முகமூடி கிழிந்து தொங்குகிறது. வேறொரு முகமூடியுடன் நீங்கள் வாருங்கள், பதிலளிக்க காத்திருக்கிறோம்.
அன்புடன்,
ரஜினி அபிமானிகள்
AshSifu
ஆகா…நல்லா செருப்படி கொடுத்த நண்பா…அதுவும் சாணியில் முக்கி அவன் மூஞ்சிமேல அடிச்சுட்ட பா…
Udhaya Karthick
அவருக்கு ஸ்டாலின் தவிர வேறு தலைவர் இல்லை… திமுக தவிர தமிழகத்திற்கு வேறு வழியில்லை என்று நம்பக்கூடியவர்.. இவர் மீது நம்பிக்கை திமுகவுக்கு ஆதரவாகப் பேசும்பொழுது குறைகிறது.
வேலன் திருமூர்த்தி
அருமையான பதிவு. ஆனால் அவருக்கு புரிந்தாலும், புரிந்தது போலவே, மீண்டும் இன்னொரு கேள்வியோடு, ரஜினி வெறுப்பாளராக வருவார்.