அலசல்

1991 – 1996: ரஜினியும் தமிழ்நாடு அரசியலும்

யூட்யூபில் ரஜினி அபிமானி பாலாஜி நந்தபாலன் “234Seconds” என்று ஒரு சேனல் நடத்துகிறார். அதில் அவரும் இன்னொரு ரஜினி அபிமானி ஜெய்ஷங்கரும் “1996 – அரசியல் – ரஜினி” என்றொரு உரையாடல் நிகழ்த்தினார்கள். அந்த உரையாடலின் முகவரி இங்கே – https://www.youtube.com/watch?v=VvzVGgBIs8Q.

அந்த காலகட்டத்திற்கே கொண்டு சென்றுவிட்ட அருமையான உரையாடல். இந்த உரையாடலில் ஜெய்ஷங்கர் சொன்னதுபோல், “பாட்ஷா” விழாவிற்குப் பின் 1995-96ல் ஜூனியர் விகடன் அட்டையில் ரஜினி படம் இல்லாத இதழ்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த சமயத்தில்தான் ஆர்.எம்.வீரப்பனிடம் ஒரு பேட்டியில் “ரஜினி அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயமா?” என்று கேட்டதற்கு, அவர் “இது கட்டாயத்தின் காலம்” என்றார்.

“பாட்ஷா” திரைப்பட விழாவில் ஆர்.எம்.வீரப்பன் – ரஜினி

இந்த உரையாடல் எனக்கு நினைவூட்டிய சில விஷயங்களை இங்கே பகிர்கிறேன் –

  • ரஜினியின் “அண்ணாமலை” படத்திற்கு முன் வந்த “மன்னன்” படம் பார்த்துவிட்டு பலர் “இந்த படத்தில் ஜெயலலிதாவிற்கு மறைமுக மெஸேஜ் இருக்கிறது” என்று பேசத் தொடங்கினார்கள். “இந்த ஊரு ராணியென்று உன்னை நினைத்தாய், தட்டி கேட்க ஆளில்லாமல் தத்திக் குதித்தாய்” என்று மன்னன் படத்தில் வந்த “சண்டி ராணியே” பாடலின் வரிகள் மிகப் பிரபலம்.
“மன்னன்” படத்தில் ரஜினி
  • ரஜினியின் கதை, திரைக்கதை, வசனத்தில் வெளிவந்த “வள்ளி” படத்தில், அவர் தன் வசனங்கள் மூலம் தெரிவித்த அரசியல் கருத்துகள் வரவேற்பை பெற்றன.
“வள்ளி” பட விளம்பரம்
  • அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுடனான கருத்து வேறுபாடுகளை சில விழாக்களில் ரஜினி பகிரங்கமாக பேசினார். அவை குறித்து 1996 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் ரஜினி, “அந்த ஐந்து விழாக்கள்” என்று துக்ளக்கில் ஒரு தொடர் எழுதினார்.
  • 1991-96 காலகட்டத்தில், ஆளுங்கட்சியான அதிமுகவின் வன்முறை கலாச்சாரம் பொதுமக்களுக்கு அச்சமும் கவலையும் தருவதாக இருந்தது – வக்கீல் விஜயன் தாக்குதல், சந்திரலேகா ஐஏஎஸ் மீது ஆசிட் வீச்சு என தங்கள் எதிர்ப்பாளர்களை “சம்பவங்கள்” மூலம் அதிமுகவினர் “கவனித்தனர்”. அத்தகைய நிலையில், ரஜினியின் சிறப்பு பேட்டி (ரசிகர்கள் கேள்வி – ரஜினி பதில்) தூர்தர்ஷனில் 1995 டிசம்பர் மாதம் ஒளிபரப்பப்பட்டது. அந்த பேட்டி record செய்யப்பட்ட வீடியோவை தூர்தர்ஷன் அலுவலகத்தில் சரியான சமயத்தில் சேர்ப்பதற்கே நிறைய தடங்கல்களை அன்றைய ஆளுங்கட்சி செய்ததாகவும், ரசிகர்கள் சிலர் அந்த வீடியோ கேசட்டுக்கு பாதுகாப்பு அரணாக சென்றதாகவும் படித்திருக்கிறேன்.
1995 டிசம்பர் தூர்தர்ஷன் பேட்டியில் ரஜினி
  • 1996 தேர்தலுக்கு முன் ஜெ (ஜெயலலிதா) மீது மக்களுக்கு கோபம் இருந்தாலும் அந்த “ஆத்திர வாக்குகள்” அப்படியே திமுகவிற்கு மாறிவிடாது என்பதுதான் நிதர்சன நிலை. அந்த சமயத்தில் திமுகவிலிருந்து விலகி, மதிமுக தொடங்கி இருந்த வைகோ ஆட்சியை பிடிக்கமாட்டார் எனினும், திமுக வாக்குகளை கணிசமாக பிரிப்பார் என்ற கணிப்பு இருந்தது. ஜெ நரசிம்மராவுடன் பேசி அதிமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்தார். அப்படியே தேர்தல் நடந்திருந்தால் வழக்கமான வாக்கு வங்கி அரசியல் காரணமாக வாக்குகள் விழுந்து ஜெ நூலிழையில் (2016 போல்) வென்றிருக்கக் கூடும். அல்லது தொங்கு சட்டசபை வந்திருக்கலாம். பதட்டம் நிறைந்த அச்சூழலில் ஜெ எதிர்ப்பு வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு வர பின்னணி வேலைகள் செய்தவர் பத்திரிக்கையாளர் “துக்ளக்” சோ. அந்த அரசியலின் மூளை சோ என்றால், அதன் இதயம் ரஜினி. பாரம்பரிய காங்கிரஸ்காரரான மூப்பனார், காங்கிரசை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) உருவாக்க காரணம் சோ-ரஜினி கூட்டணி. ரஜினி ஆதரவில் திமுக-தமாகா கூட்டணி என்றதும்தான் ஜெ ஆட்சி போகவேண்டும் என்று எண்ணியவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வழக்கமான “காங்கிரசுக்கு நாடாளுமன்ற தொகுதிகளில் அதிக பங்கீடு” பார்முலாவை புதிய மாநில கட்சியான தமாகாவிற்கும் கலைஞர் மு.கருணாநிதி (மு.க) அமல்படுத்தக் காரணம் – “திமுக-தமாகா-ரஜினி” அமைப்பு இல்லையென்றால் திமுகவிற்கு முழுமையான வெற்றி சந்தேகம் என்ற நிலைதான்.
1996 தேர்தல் காலகட்டத்தில் ரஜினி – சோ – மூப்பனார்
  • 1996 தேர்தலுக்கு டிவியில் ரஜினி ஒரு சில நிமிடங்கள் பேசி பிரச்சாரம் செய்தார். கருப்பு பேண்ட், கருப்பு சட்டை, கண்ணாடி அணிந்து அவர் பேசுவதற்கு உள்ளிருந்து வரும்போது முத்து பட intro பாடலின் பிரமாண்ட இசை பின்னணியில் ஒலிக்கும். Goosebumps நிச்சயம். படு casual ஆக ரஜினி பேசிய அந்த பேச்சை அடிக்கடி ராஜ் டிவியில் விளம்பரம் போல் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அதன் முடிவில் “ஆதரிப்பீர் உதயசூரியன், சைக்கிள்..” என்று சின்னங்களை காட்டுவார்கள். அந்த பேச்சு பற்றி அன்றைய “குமுதம்” வார இதழில் “காமராஜருக்கு பிறகு அலங்காரமில்லாத, எளிய நடையில் பேச ஒருவர் தமிழக அரசியலுக்கு கிடைத்திருக்கிறார்” என்கிற ரீதியில் தலையங்கம் (Editorial) எழுதினார்கள்.
  • திமுகவின் வழக்கமான தேர்தல் கட்டமைப்பு, மு.கவின் உழைப்பு இருந்தாலும், திமுகவிற்கு பிரம்மாண்ட வெற்றி தந்த 1996 தேர்தல் முடிவுகளின் மையப்புள்ளியாக இருந்தது ரஜினி (ரஜினியின் ஜெ எதிர்ப்பு + தமாகா உருவாக காரணம் + திமுக கூட்டணிக்கு ரஜினி ரசிகர்களின் களப்பணி + டிவி வழியே ஆதரவு கேட்டு பிரச்சார வீடியோ). என்றாலும், வெற்றி பெற்றபின் நடந்த மெரினா கடற்கரை நன்றி அறிவிப்பு கூட்டத்தில், ரஜினியின் பங்களிப்பை மற்றுமொரு ஆதரவு என்கிற ரீதியில்தான் மு.க. பேசினார். அந்த பேச்சை “குப்பன், சுப்பன் வரிசையில் பத்தோடு பதினொன்றாக ரஜினியை மு.க சொன்னார்” என்று சோ விமர்சனம் செய்தார்.
ரஜினி – கலைஞர் மு.கருணாநிதி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!