முதலில் TN 2.0 பற்றிய அறிமுகம் – இங்கே சொடுக்கவும்.
சரி, ஒரு சிறுகதையோடு துவங்குவோம்.
♦*♦ ♦*♦ ♦*♦
அவர் பெயர் நக்கீரன். 60+ வயதிருக்கும். அந்த பெரிய வீட்டின் காலிங் பெல் அழுத்தினார். வேலைக்காரர் செல்வம் வந்தார். “இது தஞ்சன் வீடுதானே?” என்று நக்கீரன் கேட்டார். வேலைக்காரர் “நீங்க நக்கீரன் சார்தானே, ஐயாவும் அம்மாவும் சொல்லிட்டு போயிருக்காங்க. உள்ளே வாங்க” என்று அழைத்தார்.
உள்ளே நுழைந்ததும் “உங்களுக்கு அந்த ரூம் தயாரா வச்சிருக்கேன். ஓய்வெடுத்துக்கங்க” என்றார் செல்வம். உடை மாற்றிக்கொண்டு வந்த நக்கீரன் “தஞ்சன் எப்போ வருவான்?” என்று செல்வத்திடம் கேட்டு தெரிந்து கொண்டு, வீட்டை சுற்றி பார்க்க போனார்.
இந்த வீட்டின் உரிமையாளர்கள் “அஞ்சார் – துஞ்சாரம்மாள்” தம்பதியினர். கடும் உழைப்பாளிகள். அதே சமயம், தேர்ந்த வியாபாரிகளும் கூட. 10 வருடங்களுக்கு முன்பு 5-வயது தஞ்சனை அவர்கள் தத்தெடுத்தபோது நக்கீரன் இந்த வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அரை கிரௌண்ட் நிலம் மட்டுமே. இந்த பத்து வருடத்தில் பக்கத்து ஒண்ணரை கிரௌண்ட் நிலத்தையும் வாங்கி போட்டு பெரிய வீடாக கட்டியிருக்கிறார்கள். வீட்டின் வளமை அவர்கள் வளர்ச்சியின் அடையாளமாக இருக்கிறது.
மாலையில் ஸ்கூல் விட்டு தஞ்சன் வந்தான். நக்கீரனை அடையாளம் கண்டு “வாங்க தாத்தா” என்றான். வயதுக்கேற்ற உயரம் இருந்தான். சதைப்பிடிப்பு சற்று குறைவு. அரும்பு மீசை வரத் தொடங்கியிருந்தது.
காலாற அந்த வீட்டு தோட்டத்தில் நடந்து கொண்டே பேசினார்கள். “தஞ்சன், என்ன படிக்கிற? எப்படி படிச்சிட்டு இருக்க?” என்றார் நக்கீரன். “பத்தாம் கிளாஸ் படிக்கிறேன் தாத்தா. எல்லா பாடத்திலேயும் 70க்கு மேல மார்க் வாங்குற அளவுக்கு படிக்கிறேன். மேத்ஸ்-ல 95க்கு மேல வாங்குவேன். கிளாஸ்ல முதல் 5 ரேங்க்ல இருப்பேன்”, என்றான் தஞ்சன்.
நக்கீரன் “முதல் 5 ரேங்க் சரி, எல்லா பாடத்திலேயும் 90க்கு மேல வாங்குற அளவுக்கு படிக்கலாமே. மார்க்கை அறிவோட அளவுகோல்னு சொல்லல. அதிகமா படிக்கறது உன் அறிவை விசாலப்படுத்தும். பிற்கால வாழ்க்கைக்கு உதவுமே” என்றார். அதற்கு தஞ்சன் அசால்ட்டாக பதில் சொன்னான் – “அப்பா அம்மாவுக்கு நான் கிளாஸ்ல முதல் 5 ரேங்க்ல இருக்கணும். அதுக்கு என்ன தேவையோ அந்த அளவுக்கு படிக்கிறேன். அதுக்கு மேல அலட்டிக்கிறதில்லை”.
பின்னர் தஞ்சன் நண்பர்களுடன் எங்கோ வெளியே சென்றான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து வந்தான். கையில் ஏதோ பொட்டலம் இருந்தது. “நான் என் ரூமுக்கு போறேன் தாத்தா. அப்படியே தூங்கிடுவேன். காலைல பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டான்.
‘புஸ்தகத்தை எடுத்து வச்சு படிக்கலை. சாப்பிட்ட மாதிரியும் தெரியலை. இவ்வளவு சீக்கிரம் தூங்க போறேன்னு சொல்றானே’ என நக்கீரன் குழப்பமானார். சிறிது நேரத்தில் மாடிக்கு சென்று தஞ்சனின் அறையை எட்டி பார்த்தார். அதிர்ந்து போனார். அங்கே தஞ்சன் டிவி பார்த்துக்கொண்டே பீர் குடித்து கொண்டிருந்தான். பக்கத்தில் வறுவல் பொட்டலம். அவரை அவன் கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் கவலைப்பட்டிருக்க மாட்டான் என்றே தோன்றியது. கீழே வந்து செல்வத்தை விசாரித்தார். அவர் “இது அடிக்கடி நடக்கிறதுதான்” என்று சாதாரணமாக சொன்னார்.
இரவு தாமதமாக அஞ்சாரும் துஞ்சாரம்மாளும் வந்தனர். பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பின் நக்கீரன் அவர்களிடம் “தஞ்சன் சரியா வளர்ற மாதிரி தெரியலையே” என்று நேரடியாக கேட்டே விட்டார்.
அஞ்சார் பதில் சொன்னார் – “அவனுக்கு என்ன குறைச்சல்? நிறைய சொத்து சேர்த்துட்டோம். நல்ல ஸ்கூல்லதான் படிக்கிறான். முதல் 5 ரேங்க்ல ஒன்னு வாங்கிடுவான்”.
“கிளாஸ்ல 5 ரேங்க்-ங்கறது குண்டுச்சட்டி குதிரையா இருக்கே. இப்போ இவன் வயசுல என்னென்னமோ சாதிக்கிற பசங்க இருக்காங்க. உங்களுக்கு இருக்கற வசதி வாய்ப்புக்கு அவனை வேற தளத்துக்கு கொண்டு போகலாமே. இவனுக்கு இந்த வயசுலயே குடிப்பழக்கம் இருக்கே” என்று ஆதங்கமாக வார்த்தைகளை கொட்டினார்.
துஞ்சாரம்மாள் குறுக்கிட்டு “இப்போவெல்லாம் 14-15 வயசு பசங்களே குடிக்கிறாங்க. நாம பெர்மிஷன் கொடுக்கலேன்னா அவனே எடுத்துக்குவான். அதுக்கு நம்ம கண்பார்வைல ஒரு கட்டுப்பாடோட குடிக்கட்டும்னு விட்டுட்டோம். இந்த வயசுலயே குடிக்கிறான்னாலும் அளவா குடிக்கிறான்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான். காலம் மாறுதில்ல” என்றார்.
அதற்கு பின் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. நக்கீரன் படுக்க சென்றார். “பத்து வருஷம் கழிச்சு பார்க்கிறோம். தஞ்சனுக்கு ‘இருக்கு, ஆனா இல்லை’ ன்னு சொல்ற மாதிரி ஒரு வளர்ப்பு. இது எங்கே போய் முடியுமோ?” என்ற கவலையோடு தூங்கி போனார்.
♦*♦ ♦*♦ ♦*♦
கதை அவ்வளவுதானா, அரைகுறையா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? அப்படிதாங்க இருக்கும். இந்த கதைல வர்ற தஞ்சன்தான் தமிழ்நாடு. அஞ்சாரும் துஞ்சாரம்மாளும் தான் திமுகவும் அதிமுகவும். இதை மனசுல வச்சுட்டு திரும்ப ஒரு முறை இந்த கதையை படியுங்கள். உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
இ-மெயிலில் புதிய பதிவுகள்/கட்டுரைகள் பற்றிய குறிப்புகளைப் பெற –