மாற்று அரசியல்

சூரியன் & இலை = சோர்வு

திராவிட அரசியல் தாண்டிய மாற்று எண்ணம்…  

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு ஆட்சி வேண்டும் என்ற குரல் சன்னமாக சில வருடங்களாகவே கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதுவரை சரியான மாற்று அமையவில்லை என்பதே உண்மை. “மாற்று அரசியல்” என்று பேசினாலே சில எதிர்க்கணைகள் முன்வருகின்றன –

  • பெரியாரும் அண்ணாவும் செய்த அரசியல்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் குரல்வளை நெறிபடாமல் தப்பிக்க காரணம்
  • கலைஞர் மட்டும் இல்லேன்னா இன்னைக்கு இடஒதுக்கீடுன்னு பல குடும்பங்கள் முன்னுக்கு வந்திருக்க முடியாது
  • புரட்சி தலைவரும், புரட்சி தலைவியும் கொண்டுவந்த சமூக நலத்திட்டங்கள் இந்திய தேசத்திற்கே முன்னுதாரணங்கள்
  • திராவிட கட்சிகளின் கடந்த 50 ஆண்டு கால ஆட்சிகளில் தமிழகம் (இந்தியாவின் மற்ற பல மாநிலங்களை காட்டிலும்) நல்ல வளர்ச்சி கண்டிருக்கிறது
  • லஞ்சம், ஊழல் – இதெல்லாம் உலகளாவிய விஷயங்கள். என்னமோ தமிழ்நாட்டுல மட்டும் இருக்கற மாதிரி பேசிக்கிட்டு?

இது போன்று இன்னும் பல வாதங்கள். இந்த வாதங்களை கேட்டபின் “மாற்று அரசியல்” என்று நாம் பேசினால் நன்றி மறந்தவர்களாய் பார்க்கப்படுவோம். கடந்த 50 ஆண்டுகளில் நாம் முன்னேறியிருக்கிறோம் என்பதை மறுக்க இயலாது. ஆனால் அதையும் மீறி இந்த “மாற்று அரசியல்” ஆசை ஏன்?

ஒவ்வொரு வாக்காளனுக்கும் அவனது அனுபவம்தான் அடிப்படை. அந்த வகையில் உதயசூரியனுக்கும், இரட்டை இலைக்கும் மாற்றி மாற்றி ஓட்டு போட்ட என்னை மாற்றிய சில அனுபவங்களை பகிர்கிறேன்.

எதிர்மறை உணர்வுகளின் குவியப்புள்ளியில் திராவிட அரசியல்…

எனக்கு டிரைவிங் லைசென்ஸ் எடுக்க, என் அப்பாவின் இறப்பு சான்றிதழ் வாங்க, என் அப்பாவின் வாரிசு சான்றிதழ் வாங்க என லஞ்சம் கொடுத்ததும், அரசு அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டதும் பெரும் வெறுப்பை தந்தன. திமுக, அதிமுக அரசுகள் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போகிறன்றன. ஆனால் லஞ்சமும் குறையவில்லை, (பெரும்பாலான) அரசு ஊழியர்களின் மெத்தனமான (accountability என்றால் என்ன என்று கேட்கும்) பணிப்போக்கும் குறையவில்லை. வெறுப்பு வருமா வராதா?

நலத்திட்டங்கள் என்ற வரம்பை தாண்டி “ஓட்டு வாங்கும் திட்டங்கள்” என்ற பாதையில் “இலவச கலாச்சாரம்” பயணிக்க ஆரம்பித்த பொழுது எரிச்சல் வந்தது. அரசு கொடுத்த டிவி பல வீடுகளில் இரண்டாவது டிவி (அதாவது, ஏற்கனவே அவர்கள் வீட்டில் ஒரு டிவி வைத்திருக்கும் அளவிற்கு வசதி படைத்தவர்கள்). சமீபத்தில் அரசு “பொங்கல் பணம் 1000 ரூபாய்” என ரேஷன் கார்டு வைத்திருக்கும் எல்லா குடும்பங்களுக்கும் கொடுத்துள்ளது. இதில் மாத வருமானம் 50,000/- க்கு மேல் சம்பாதிக்கும் குடும்பங்களும் அடங்கும். இதெல்லாம் யார் பணம்? மக்களோட வரிப்பணம் தானே… அப்புறம் வருடா வருடம் பட்ஜெட்டில் துண்டு துணிக்கடையே விழும்தானே?

புதிதாக போடப்படும் சாலைகள் இரண்டு நாள் மழையில் உருமாறி, “சாலை செப்பனிடல்” என்று ஒரே வேலைக்கு மறுபடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை பார்க்கும்போதெல்லாம் “தனியார் கம்பெனில ஒருத்தன் சரியா வேலை செய்யலேன்னா சம்பளத்தையே பிடிப்பாங்க. இங்க என்னடான்னா திரும்ப திரும்ப தப்பு செய்ய திரும்ப திரும்ப பணம். இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க ஆளே இல்லையா?” என்று ஆற்றாமை வரும்.

15 வயது பள்ளி மாணவன் சர்வசாதாரணமாக மதுக்கடையில் பாட்டில் வாங்கி ட்ரௌசர் பாக்கெட்டில் போட்டுகொண்டு போனதை பார்த்திருக்கிறேன். “மதுவை எளிதில் வாங்கலாம்” என்ற நிலையை இந்த இரண்டு அரசுகளும் கொண்டுவந்ததால் தானே இது சாத்தியமானது?. “எதிர்கால சந்ததி பற்றி துளியும் கவலை இல்லாத ஆட்சியாளர்கள்தானே இப்படி செயல்படமுடியும்?” என்று கோபம் கொப்பளித்தது.

ஒருபுறம் சாதி ஒழிப்பு, சமூகநீதி என்று பேசவேண்டியது; மறுபுறம் சாதி அடிப்படையில் வேட்பாளர் தேர்வு, சாதியை மையமாக வைத்து அமைக்கப்படும் மந்திரிசபை என இந்த இரண்டு கட்சிகளும் நடத்தும் இரட்டைநிலை அரசியல் சலிப்பை தருகிறது. இது போலவே இடஒதுக்கீடு பற்றியும் சில சலிப்பு சிந்தனைகள் உண்டு (அவை மற்றுமொரு பதிவில்).

இப்படியாக வெறுப்பு, எரிச்சல், ஆற்றாமை, கோபம், சலிப்பு என எதிர்மறை உணர்வுகளின் குவியப்புள்ளியில் இன்றைய திராவிட அரசியல் நிற்கிறது. இந்த திராவிட கட்சிகளின் “திருப்திப்படுத்தும் அரசியல்” (appeasing politics) நமது வளர்ச்சியை வீக்கமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. யாரேனும் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த வேண்டும் என்பதே இன்றைய நிலை.

இந்த ஆட்சிகளின் நன்மைகளை பார்க்காமல் பேசுகிறேன் என்று சொல்பவர்களுக்கு என் பதில் இதுதான் – சந்தன மாலை (திராவிட கட்சிகளின் ஆட்சி) நன்றாக மணக்கும், நம்மை வசீகரிக்கும் என்றுதான் அணிந்தோம். ஆரம்பத்தில் நறுமணம் தந்த மாலை, காலப்போக்கில் கழுத்துக்கு கயிறாக மாறி இறுகி கிடக்கிறது. இன்னமும் அன்றைய நறுமணம் பற்றி பேசுவோமா? இல்லையேல் கழற்றிவிட எத்தனிப்போமா?


இ-மெயிலில் புதிய பதிவுகள்/கட்டுரைகள் பற்றிய குறிப்புகளைப் பெற –

2 comments
  1. saravanakumar

    perfect. you spoke my mind!! the dravidian parties did help achieve some good parameters like lowest school drop outs in India, highest institutionalized births, highest number of health centers, highest number of post graduates, et all. but now it has reached a state of exceeding their shelf life. it has started decaying and the process is so very fast. time to throw away and get an alternate government. no dimkaa as well as admk.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!