மாற்று அரசியல்

கழகங்களின் ஆட்சியும் கஜானாவும்

1967-ல் தொடங்கி 50 ஆண்டுகள் தமிழ்நாடு திராவிட கட்சிகளின் ஆட்சியில் இருந்து வருகிறது. பொதுவாக நீங்கள் ஒரு நிறுவனத்தில் மானேஜராக 10 ஆண்டுகள் இருந்தாலே, நிதியை நன்றாக நிர்வாகம் செய்யும் அனுபவமும் ஆற்றலும் பெற்றுவிடுவீர்கள். அப்படி இருக்கையில், 21 ஆண்டுகள் ஆட்சி நிர்வாகத்தை கையில் வைத்திருந்த திமுகவும், 29 ஆண்டுகள் கோலோச்சிய அதிமுகவும் அரசாங்க கஜானாவை (நிதியை) எவ்வாறு கையாண்டன என பார்ப்போம். இந்த பார்வை “பொருளாதார நிபுணர்” பார்வை அல்ல. நமக்கெல்லாம் அடிப்படையாக தெரிந்த பொருளாதார அறிவுடனான பார்வைதான் இது.

சாமானியர்களாக நாம் அறிந்த பொருளாதார சிந்தனை – “வரவுக்குள் செலவு இருக்க வேண்டும். அதையும் மீறி கடன் வாங்கினால், அந்த கடன் கட்டுக்குள் இருக்கும் அளவிலேயே வரவு-செலவு நிர்வகிக்க வேண்டும் ” . இதனை அரசுகள் எப்படி கையாளுகின்றன என தெரிந்து கொள்ள பின்வரும் இரண்டு காரணிகள் மூலம் அலசுவோம்.

  • வருவாய் உபரி (Revenue Surplus) மற்றும் வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit)
  • நிதி உபரி (Fiscal Surplus) மற்றும் நிதி பற்றாக்குறை (Fiscal Deficit)

வருவாய் உபரி (Revenue Surplus) மற்றும் வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit)

அரசாங்கத்திற்கு வரும் வருமானங்களான வரிகள், வட்டி வரவுகள் போன்றவை “வருவாய் வரவு” (Revenue Receipts) எனப்படும். பொதுவான, மாதாந்திர மற்றும் அன்றாட செலவுகள் (அரசு ஊழியர் சம்பளம், நிர்வாக பணிகளுக்கான செலவுகள் போன்றவை) “வருவாய் செலவு” (Revenue Expenditure) எனப்படும். “வருவாய் வரவு” தொகை “வருவாய் செலவு” தொகையை விட அதிகமாக இருந்தால், மிச்சப்படும் தொகை “வருவாய் உபரி” (Revenue Surplus) எனப்படும். “வருவாய் வரவு” தொகை “வருவாய் செலவு” தொகையை விட குறைவாக இருந்தால், அதிகமாக தேவைப்படும் தொகை “வருவாய் பற்றாக்குறை” (Revenue Deficit) எனப்படும். “உபரி” (Surplus) நல்ல விஷயம்; “பற்றாக்குறை” (Deficit) என்றால் அரசு கடன் வாங்கவோ, வருவாயை பெருக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1967லிருந்து 2019 வரையிலான நிதி ஆண்டுகளில் (1977-1988 நீங்கலாக) வருவாய் உபரி நிதியாண்டுகள் எத்தனை, வருவாய் பற்றாக்குறை நிதியாண்டுகள் எத்தனை என்று பார்ப்போம்.

குறிப்பு: 1977 முதல் 1988 வரையிலான அதிமுக ஆட்சியின் 11 ஆண்டுகளுக்கான நிதிநிலை புள்ளிவிவரம் மேலே சேர்க்கப்படவில்லை . அந்த புள்ளிவிவரங்கள் கிடைத்தவுடன் சேர்த்துவிடுகிறேன்.

இந்த புள்ளிவிவரங்களை சற்றே ஆழமாக பிரித்து பார்க்கலாம்.

இந்த அட்டவணைகள் தரும் சில செய்திகள் –

  • மேற்சொன்ன 39 நிதியாண்டுகளில், 70% (27) நிதியாண்டுகள் “வருவாய் பற்றாக்குறை”யுடனே நிர்வகிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, பெரும்பாலும் அரசின் பொதுவான, அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கித்தான் ஓட்டியிருக்கிறார்கள்.
  • ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலத்தில் (1967-76) வருவாய் உபரியில் (9 ஆண்டுகளில் 6 முறை வருவாய் உபரி) காட்டிய அக்கறையை பிற்காலத்தில் திமுக காட்டவில்லை.
  • 1989க்கு பிறகான 30 ஆண்டுகளில் திமுகவும் அதிமுகவும் தலா 3 நிதியாண்டுகள் மட்டுமே வருவாய் உபரியுடன் நிர்வகித்திருக்கிறார்கள்.

நிதி பற்றாக்குறை (Fiscal Deficit)

அரசாங்கத்திற்கு பொதுவான, மாதாந்திர மற்றும் அன்றாட செலவுகள் தவிர “மூலதன செலவு” (Capital Expenditure) உண்டு. சாலைகள் அமைத்தல், மருத்துவமனை மற்றும் பள்ளிகள் கட்டுதல், நீர் அணைகள் அமைத்தல், இலவச திட்டங்கள் போன்றவைக்கான செலவே “மூலதன செலவு” (Capital Expenditure) எனப்படும். பெரும்பாலான ஊழல்களும் இந்த நிதியில்தான் நடக்கும்.

மேலே சொன்ன “வருவாய் செலவு” (Revenue Expenditure) மற்றும் “மூலதன செலவு” (Capital Expenditure) இரண்டும் சேர்ந்துதான் மொத்த செலவாக கணக்கிடப்படும். இந்த மொத்த செலவுக்கும் “வருவாய் வரவு”க்கும் (Revenue Receipts) உள்ள வித்தியாசம்தான் “நிதி உபரி” (Fiscal Surplus) அல்லது “நிதி பற்றாக்குறை” (Fiscal Deficit) எனப்படும். தமிழகத்தை பொறுத்தவரை வருவாய் செலவுக்கே பற்றாக்குறை உள்ளதால், நிதி உபரிக்கு வாய்ப்பில்லை. எனவே “நிதி பற்றாக்குறை” (Fiscal Deficit) சார்ந்த புள்ளிவிவரங்களை பார்க்கலாம்.

மாநில மொத்த உற்பத்தி மதிப்பு அடிப்படையில் நிதி பற்றாக்குறை விகிதம்

நிதி பற்றாக்குறையை கணக்கிடும்போது மாநில மொத்த உற்பத்தி மதிப்பு (Gross State Domestic Product – GSDP) அடிப்படையில்தான் கணக்கிட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். அதாவது, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதி பற்றாக்குறை எத்தனை சதவீதம் என்று கணக்கிடுவது. அதன்படி, மாநில மொத்த உற்பத்தி மதிப்பை (GSDP) அடிப்படையாக கொண்டு நிதி பற்றாக்குறை விகித (Fiscal Deficit to GSDP Ratio) அட்டவணையை தயாரித்தேன்.

2004-05 முதல் 2013-2014 வரையிலான பத்து ஆண்டுகளுக்கான GSDPஐ அடிப்படையாக கொண்ட நிதி பற்றாக்குறை விகித (Fiscal Deficit to GSDP Ratio) புள்ளிவிவரங்கள் உங்கள் பார்வைக்கு.

இந்த அட்டவணைப்படி, நிதி பற்றாக்குறை 2005 முதல் 2008 வரை மட்டுமே வெகு ஆரோக்கியமாக (ஒன்றரை சதவிகிதத்திற்கும் கீழே) இருந்திருக்கிறது. மற்றபடி, நிதி பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே சென்றிருக்கிறது. கடைசியாக திமுக ஆட்சி செய்த 2010-11 நிதியாண்டில் GSDP அடிப்படையில் நிதி பற்றாக்குறை விகிதம் (Fiscal Deficit to GSDP Ratio) 4.13%. பின்னர் அதிமுக ஆட்சியில் 2013-14ல் இந்த நிதி பற்றாக்குறை விகிதம் 4.28% என்று இன்னமும் உயர்ந்தே இருந்திருக்கிறது.

தமிழ்நாடு பொறுப்பான நிதி மேலாண்மை சட்டம் (TN Fiscal Responsibility Act) 2003-ன் படி, GSDP அடிப்படையில் நிதி பற்றாக்குறை (Fiscal Deficit to GSDP Ratio) 3% உச்சவரம்பில் இருக்க வேண்டும். 2.5% அளவில் இருந்தால் (அல்லது அதற்கு கீழே இருந்தால்) அது தேர்ந்த நிதி நிர்வாகம் என்றும் சொல்கிறார்கள். அவ்வகையில் பார்த்தால், 2009க்கு பிறகு தமிழகத்தின் நிதி நிர்வாகம் சற்றும் வரவேற்கத்தக்கதாக இல்லை.

முடிவாக…

இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் ஒன்றுதான் தமிழ்நாடு. ஆனால், “பெருங்கடன்கார பணக்காரன்”. ஆக, 21 ஆண்டுகள் ஆட்சி நடத்திய திமுகவும், 29 ஆண்டுகள் ஆட்சி நடத்திய அதிமுகவும் நிதி நிர்வாகத்தில் தேர்ந்தவர்கள் ஆகிவிடவில்லை. தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துவரும் இந்த காலகட்டத்தில் நமக்கு தேவை – தொலைநோக்கு பார்வை கொண்ட, தேவைகளுக்கு மட்டும் இலவசம் தருகிற, நிதி நிர்வாகத்தில் உறுதியான பிடிப்பு (உதாரணமாக – “வருவாய் உபரி” மற்றும் “2.5% GSDP அளவிலான நிதி பற்றாக்குறை” என்பது போன்ற இலக்குகள் நோக்கிய தீவிர நிர்வாகம்) கொண்ட “நிதி கொள்கை” (Fiscal Policy) உடைய அரசு. அத்தகைய அரசை திமுகவோ அதிமுகவோ தரும் என்ற நம்பிக்கையை அவர்களது “நிதி நிர்வாக” வரலாறு தரவில்லை.


மேலே கொடுத்துள்ள புள்ளிவிவரங்களுக்கான ஆதார தரவுகள் பற்றி –

  • 1976வரையிலான நிதிநிலை விவரங்கள் சென்னை கன்னிமரா நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள அரசு நிதிநிலை குறிப்பாணைகளிலிருந்து (Budget Memorandum) எடுக்கப்பட்டவை
  • 1987 முதல் 2014வரையிலான நிதிநிலை விவரங்கள் தமிழக அரசின் நிதி அமைச்சக வலைத்தளத்திலிருந்த (http://www.tnbudget.tn.gov.in/) “Finance Accounts” (http://www.tnbudget.tn.gov.in/tnweb_files/accounts.pdf) என்கிற ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டவை
  • மாநில மொத்த உற்பத்தி மதிப்பு (Gross State Domestic Product – GSDP) விவரங்கள் மத்திய ரிசர்வ் வங்கியின் வலைத்தளத்திலிருந்து (https://m.rbi.org.in/Scripts/PublicationsView.aspx?id=18814) எடுக்கப்பட்டன

இ-மெயிலில் புதிய பதிவுகள்/கட்டுரைகள் பற்றிய குறிப்புகளைப் பெற –

One comment
  1. Saravanakumar

    Super. Fiscal deficit is solely due to the unwanted expenditure accrued in giving tv, mixie, grinder stuff. Our voters does not have any awareness to understand that there are no free lunches.

    Appreciate the hard work to collect all stats. Great job machi clap clap

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!