மாற்று அரசியல்

இனவாத அரசியல் (பகுதி 1)

முன்னுரை

எனக்கு தெரிந்தவரை, இந்தியாவில் தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்தவரிடமும் “மதம், சாதியை விடுத்து உங்கள் அடையாளம் என்ன?” என்று கேட்டால், ஒன்று தேசம் சார்ந்த அடையாளமாய் “இந்தியர்” என்று சொல்வார்கள். இல்லையேல், மொழி சார்ந்த அடையாளமாய் “கன்னடர்”, “தெலுங்கர்”, “மலையாளி”, “மராத்தியர்” என்று சொல்லக்கூடும். தமிழ்நாட்டில் மட்டும் “நான் திராவிடனா?ஆரியனா?தமிழனா?இந்தியனா?” என்று தடுமாறிப் போகும் அளவிற்கு விதவிதமாய் கருத்துகளை தெளித்து வைத்துள்ளார்கள். சரி, ஒரு தெளிவு பெறுவோம் என்று நான் மேற்கொண்ட தேடலின் விளைவே இந்தப் பதிவு.

மேற்சொன்ன கேள்விக்கு விடை/விளக்கம் வேண்டுமெனில் மூன்று வெவ்வேறு புள்ளிகளிலிருந்து பார்க்க வேண்டியிருக்கிறது – திராவிட அரசியலார் (திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் போன்றவை) பார்வை, தமிழ்த் தேசிய அரசியலார் (தமிழ்த் தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி போன்றவை) பார்வை, இந்து மத (மடாதிபதிகள் மற்றும் இந்து மதப் பற்றாளர்கள்) பார்வை. விளக்கங்களை படிக்கும் பொழுது ஏன் மதமும் அரசியலும் கலந்திருக்கிறது என்பது புரியும்.

இது சற்றே நீண்ட பதிவு என்பதால் இரண்டு பகுதிகளாக பிரித்திருக்கிறேன். ஆதலால், பொறுமையுடன் படிக்க வேண்டுகிறேன். இரண்டாம் பகுதிக்கான முகவரியை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.

ஆரியரும் வர்ணாசிரம கோட்பாடும்

திராவிட அரசியலார் & தமிழ்த் தேசிய அரசியலார் பார்வை

“ஆரியர் மற்றும் வர்ணாசிரம கோட்பாடு” குறித்து திராவிட அரசியலாருக்கும், தமிழ்த் தேசிய அரசியலாருக்கும் கிட்டத்தட்ட ஒரே பார்வை இருக்கிறது. அதன் சாராம்சம் –

கி.மு.1500 வாக்கில் உலகின் வேறுபகுதிகளில் (ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா) இருந்து இந்திய துணைக்கண்ட பகுதிகளில் வந்து குடியேறியவர்கள் ஆரிய இனத்தினர். அவர்களது மதம்  “ஆரிய மதம்” (பிற்காலத்தில் “இந்து மதம்” என அழைக்கப்பட்டது). அந்த மதம் பிறப்பு ரீதியிலான வர்ணாசிரம கோட்பாட்டை வலியுறுத்துகிறது. அதன்படி, மக்கள் அவர்கள் பிறப்பின் அடிப்படையில் “பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்” என நான்கு வர்ணங்களில் பிரிக்கப்படுகிறார்கள். இந்த வர்ணங்களில் செங்குத்து படிநிலை சாதி முறை (vertical hierarchical caste system) உள்ளது. அதாவது, பிராமணர் உயர்ந்தவர், அவருக்கு அடுத்தபடியாக சத்திரியர், அடுத்து வைசியர், அடுத்து சூத்திரர் என்று உயர்ந்தவர்-தாழ்ந்தவர் முறை உள்ளது. இப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்கள், அதிலும் முக்கியமாக பிராமணர்கள், இங்கிருந்த அரசர்களின் ஆதரவுடன் சமூகத்தில் மேலாதிக்கம் பெற்றனர். இங்கிருந்த சமூக, சமய கலாச்சாரங்களை தங்கள் “ஆரிய மத” வழிப்படுத்தினர் (Aryanization).

இந்து மத பார்வை

இந்து மதத்தைச் சார்ந்த பெரியோர் “ஆரிய” இனம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். “ஆரியர்கள் என்றொரு இனம் இருந்தது” என்பது (பிரித்தாளும் சூழ்ச்சியோடு) ஆங்கிலேயரும், சில நவீன ஆராய்ச்சியாளர்களும் புனைந்த கட்டுக்கதை என்பது அவர்கள் வாதம்.

காஞ்சி மகா பெரியவர் (சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி மஹாசுவாமிகள்) சொல்கிறார் – “வேத சாஸ்திரங்களைப் பார்த்தால் ஆரிய, திராவிட என்று இரண்டு வேறு இனம் ‘ரேஸ்’ (இனம்) என்பதற்குக் கொஞ்சம் கூட ஆதாரம் இல்லை. ஆனால், வெள்ளைக்காரர்களின் divide and rule (பிரித்து ஆள்கிற) கொள்கைப்படி, அவன் இந்த ரேஸ்-தியரியைக் கட்டி விட்டு விட்டான். சாஸ்திரப் பிரகாரம் என்ன சொல்லியிருக்கிறது? ஆரிய இனம் என்று ஒன்றைச் சொல்லவேயில்லை”. (நூல்: இந்து தர்மம், ஆசிரியர்: சோ, வெளியீடு: அல்லயன்ஸ், பக்: 108)

“இப்போது ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற நமது மதம் ஒன்றே ஆதியில் லோகம் முழுவதும் பரவியிருந்தது. அந்த ஒரே மதம் இருந்ததால்தான் அதற்கு தனியாக பெயர் வைக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. …அங்கங்கே ஜனங்களின் ஆசை, அபிலாஷைகள் மாறிமாறி, அதிலிருந்தே அந்தந்த சூழலுக்கு ஏற்ற அனுஷ்டானங்களை உடைய வேறு மதங்கள் வந்திருக்கின்றன. …பாரத தேசத்தில் மட்டும் அந்த ஆதி மதமே தங்கிவிட்டது”. (நூல்: இந்து தர்மம், ஆசிரியர்: சோ, வெளியீடு: அல்லயன்ஸ், பக்: 58, 68)

இந்து மதம் சொல்லும் வர்ணாசிரம கோட்பாட்டு பிரிவுகள் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) பிறப்பு அடிப்படையானதல்ல. வாழும் வகை (தொழில் சார்ந்தது) மற்றும் குணத்தை அடிப்படையாக கொண்டவை.

“குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள், காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து, பிறப்பின் அடிப்படையில் ஏற்படுகிற பிரிவுகளாக உருவெடுத்துவிட்டன”. (நூல்: வெறுக்கத்தக்கதா பிராமணீயம்?, ஆசிரியர்: சோ, வெளியீடு: அல்லயன்ஸ், பக்கம்: 11)

“நான்கு வகையானவர்களும் ஒரே தந்தையின் (கடவுளின்) குழந்தைகள்; அப்படி ஒரு தந்தையின் குழந்தைகளாகிய இவர்களிடையே ஜாதி பேதம் என்பது கிடையாது”. (நூல்: வெறுக்கத்தக்கதா பிராமணீயம்?, ஆசிரியர்: சோ, வெளியீடு: அல்லயன்ஸ், பக்கம்: 26)

யார் திராவிடர்?

திராவிட அரசியலார் பார்வை

தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றில் ஒன்றை தாய் மொழியாகவோ/வீட்டு மொழியாகவோ கொண்ட பிராமணரல்லாத அனைவரும் “திராவிடர்கள்” என்பது திராவிட அரசியலாரின் பொதுவான கருத்து. தந்தை பெரியார் (இந்திய சுதந்திரத்திற்கு முன் இருந்த) சென்னை மாகாணத்தில் இருந்த பிராமணரல்லாத அனைவரையும் “திராவிடர்கள்” என அழைத்து, அவர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, இன்றைய தமிழ்நாட்டில் உள்ள பிராமணரல்லாத அனைவரும் (பெரியார் வரையறையின்படி) “திராவிடர்கள்” ஆனார்கள். மற்றபடி, அன்றைய மைசூர், திருவாங்கூர் மாகாணங்களில் (இன்றைய கர்நாடகம், கேரளம்) இருந்த திராவிடர்களுக்காக பெரியாரோ, அவர் வழிவந்தவர்களோபோராடியதில்லை; அந்த மாகாணங்களின் மக்களும் இந்த “திராவிட” பார்வையில் பெரும் ஈர்ப்பு கொள்ளவில்லை.

அது “ஏன் பிராமணல்லாதார் மட்டும்?” கேள்விக்கு, “ஏனெனில் பிராமணர்கள் ஆரியர்கள்” என்பதே பெரியார் மற்றும் அவர் வழிவந்தவர்களின் பதிலாக இருக்கிறது.

தமிழ்த் தேசிய அரசியலார் பார்வை

“திராவிடம் என்பது ஒரு மாயை; அது ஒரு மொழியின் பெயரோ அல்லது இனத்தின் பெயரோ இல்லை. ஆரியர்கள் உருவாக்கிய சொல்தான் திராவிடம். … பிராமணரல்லாத தென்னாட்டு மக்களை மட்டும் குறிக்கும் சொல் “திராவிடம்” என்று பெரியார் கூறியது வரலாற்றுண்மைக்கும், நடைமுறை உண்மைக்கும், தேசிய இன – மொழி ஆராய்ச்சிக்கும் பொருந்தாக் கற்பனை”. (நூல்: தேர்தலும் தமிழ்த்தேசியமும், ஆசிரியர்: பெ. மணியரசன், வெளியீடு: பன்மை வெளி, பக்கம்: 31)

“திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல, அது ஒரு தேசிய இனமும் அல்ல. அது ஒரு மொழியும் அல்ல. ஆரியர்கள் இந்திய மண்டலத்திற்கு வந்தபோது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாக ‘திராவிட’ என்று அழைத்தனர். ‘தமிழ்’ என்பதை ஒலிக்கத் தெரியாமல் ‘த்ரமிள்’ என்று உச்சரித்து அதுவே பின்னர் ‘த்ரமிள’, ‘த்ராவிட’ என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள் (பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்”. (நூல்: தமிழ்த்தேசக் குடியரசு, ஆசிரியர்: பெ. மணியரசன், வெளியீடு: பன்மை வெளி, பக்: 13)

“சமயப் பணிக்காக தமிழகம் வந்த கால்டுவெல் (என்ற ஆய்வாளர்) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தை சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார். … மனுநீதி, குமாரில பட்டரின் சமஸ்கிருத நூலான தந்திரவார்த்திகா முதலிய நூல்களில் சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான “த்ராவிட” என்பதை எடுத்துக்கொண்டு தமிழ் மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு “திராவிடம்” என பெயர் சூட்டிக் கொண்டார். ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்”. (நூல்: தமிழ்த்தேசக் குடியரசு, ஆசிரியர்: பெ. மணியரசன், வெளியீடு: பன்மை வெளி, பக்: 14)

இந்து மத பார்வை

“ஆரிய – திராவிட” பாகுபாடு பற்றி காஞ்சி மகா பெரியவர் சொன்னது இங்கே –

‘ஆரிய’ என்பது ஒரு இனத்தைக் குறிப்பிடுவதாக சாஸ்திரங்களில் எங்குமே வரவில்லை. ‘திராவிட’ என்பதும் இனப் பெயராக வரவில்லை. ஒரே இனத்தை சேர்ந்த பாரத ஜனங்களைத்தான் விந்தியத்திற்கு வடக்கே உள்ளவர்களை கௌடர்கள் என்றும், தெற்கே உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. ஆரிய, திராவிட இன வேற்றுமை இல்லை. கௌடர்-திராவிடம் என்பதாக, இனத்தை வைத்துப் பிரிக்காமல், ஒரே இனக்காரர்களை பிரதேச ரீதியில் பிரித்திருக்கிறார்கள்.

ஆதியில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள தேசம் முழுவதும் கௌட தேசம்; அதற்கு தெற்கில் உள்ளது முழுவதும் திராவிட தேசம் என்று இருந்தது. கௌட தேசத்தில் வசித்த கௌடர்களை மேலும் பிரதேச ரீதியில் ஐந்தாகப் பிரித்தார்கள். அப்படியே திராவிடத்தில் வசித்தவர்களையும் ஐந்தாகப் பிரிந்திருந்தது. இவர்களை பஞ்ச கௌடர், பஞ்ச திராவிடர் என்பார்கள்.

… ஆக, ஸாரஸ்வத், கான்யகுப்ஜர், மைதிலர், உத்கலர், கௌடர் ஆகிய ஐவரும் பஞ்ச கௌடர்கள். இப்படியே விந்தியத்திற்குத் தெற்கே ஐந்தாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகள், கூர்ஜரர் (குஜராத்தி), மகாராஷ்டிரர், ஆந்திரர், கர்நாடகர், கடைசியில் தெற்கு கோடியில் வேறு பேர் இல்லாமல் திராவிடர் என்றே வைக்கப்பட்ட தமிழ் தேசத்தவர். இதிலே கேரளீயர்களான மலையாளிகளை சொல்லாததற்கு காரணம், மலையாள பாஷை ஆயிரம் வருஷங்களுக்கு உள்ளாகத்தான் தனி ரூபம் கொண்டிருக்கிறது. அதற்கு முந்தி அதுவும் தமிழ் தேசமாகத்தான் இருந்தது.

…இரண்டு வெவ்வேறு இனமில்லை. பிரதேச ரீதியில் ஒரே இனத்தில் பத்து பிரிவுகள். இரண்டு பாதிகளுக்கு பெயராக இருந்த கௌடம், திராவிடம் என்பன குறிப்பாக கிழக்கு கோடி, தெற்கு கோடிப் பிரதேசங்களுக்கு மட்டும் பெயர் ஆகிவிட்டது. இன்று கௌடர்கள் என்றாலே வங்காளிகள் என்றாகிவிட்டது.
… அப்படியே திராவிடர்கள் என்றால் முக்கியமாக தமிழர்கள் என்று ஆகிவிட்டது .” (நூல்: இந்து தர்மம், ஆசிரியர்: சோ, வெளியீடு: அல்லயன்ஸ், பக்: 109, 110)

தொடரும்… அடுத்த பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.


இ-மெயிலில் புதிய பதிவுகள்/கட்டுரைகள் பற்றிய குறிப்புகளைப் பெற –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!