மாற்று அரசியல்

இனவாத அரசியல் (பகுதி 2)

இனவாத அரசியல் பற்றிய பதிவின் இரண்டாம்/இறுதிப் பகுதி. முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.

யார் தமிழர்?

திராவிட அரசியலார் பார்வை

தமிழை தாய் மொழியாக/வீட்டு மொழியாக கொண்ட பிராமணால்லாதார் அனைவரும் தமிழரே. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற மதத்தினரும் (முஸ்லிம், கிறிஸ்தவர்) தமிழரே.

தமிழ்த் தேசிய அரசியலார் பார்வை

தமிழை தாய் மொழியாக/வீட்டு மொழியாக கொண்ட அனைவரும் (பிராமணர்களில், பிராமணியத்தை மறுத்து தமிழ் உணர்வோடு செயல்பட முன்வரும் பிராமணர்கள் மட்டும்) தமிழரே. நெடுங்காலமாய் தமிழகத்தை தாயகமாக ஏற்றுக்கொண்டுள்ள மக்களும் (அவர்கள் தாய் மொழி/வீட்டு மொழி தெலுங்கு, கன்னடம் என வேறாக இருந்தாலும்) தமிழர்களாக ஏற்கப்படவேண்டியவர்களே.

குறிப்பு: மேலே சொன்ன தமிழ்த்தேசிய பார்வை சற்று விசாலமான பார்வை என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கு “தமிழ்நாட்டை தமிழரே ஆளவேண்டும்” என்று முழங்கும், தமிழ்த்தேசிய கொள்கை கொண்ட “நாம் தமிழர்” கட்சியின் “யார் தமிழர்?” நிலைப்பாடு மிகவும் குறுகியது. அக்கட்சி தமிழை தாய்மொழியாக கொள்ளாத எவரையும் தமிழராக கருதுவதில்லை. தமிழை தாய்மொழியாக கொண்ட பிராமணர்களையும் தமிழராக கருதுவதில்லை.

இந்து மத பார்வை

தமிழை தாய் மொழியாக/வீட்டு மொழியாக கொண்ட அனைவரும் தமிழரே. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற மதத்தினரும் (முஸ்லிம், கிறிஸ்தவர்) தமிழரே.

மத ரீதியில் ஒருவரை (உதாரணமாக முஸ்லிம், கிறிஸ்தவர்) “இந்தியர்” இல்லை என்றோ, “தமிழர்” இல்லை என்றோ இந்து மதம் ஒதுக்கி வைக்கவில்லை. அதற்கு சான்றாக , காஞ்சி மகா பெரியவர் சொல்வதை எடுத்துக்கொள்ளலாம் – “எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டனவேயாகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவர் என்றே சொல்கின்றன. ஒருவரேயான அந்த கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே தாங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தை தழுவ வேண்டியதில்லை”. (நூல்: இந்து தர்மம், ஆசிரியர்: சோ, வெளியீடு: அல்லயன்ஸ், பக்: 51)

இந்தியாவும் இந்தியரும்

திராவிட அரசியலார் பார்வை

ஆரம்ப காலத்தில் (இந்திய சுதந்திரத்திற்கு முன்), தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் அன்றைய சென்னை மாகாணம் “திராவிட நாடு” என இந்தியாவிலிருந்து பிரிந்துவிடுவதையே விரும்பினார்கள். இந்தியா என்பது ஒரே நாடல்ல என்பதே அவர்கள் கருத்தாக இருந்தது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடையும் சமயம், “திராவிட நாடு” என தனியாக நாடு கிடைக்காததால் இந்திய சுதந்திர நாளை “துக்க நாள்” என பெரியார் அறிவித்தார். அண்ணா அதனை ஏற்காமல் ஆங்கிலேயர் ஆட்சி ஒழியும் நாள் “இன்ப” நாளாகவே கொண்டாடப்பட வேண்டும் என்றார்.

அதன்பின், பெரியாரின் திராவிடர் கழகமும், அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகமும் “திராவிட நாடு” கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். பின்னர் 1963ல் இந்திய நாடாளுமன்றத்தில் பிரிவினைத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பொழுது, தி.மு.க. தனது “திராவிட நாடு” கோரிக்கையை கைவிட வேண்டி வந்தது. “திராவிட நாடு அமைய பாடுபடுவது” என்ற தி.மு.கவின் குறிக்கோள் “இந்திய அரசுரிமை, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவிற்கு கூடுதலான அதிகாரங்களை பெறுவது” என மாறியது.

பெரியார் தன் இறுதி மூச்சு வரை “தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும்” என்பதையே வலியுறுத்தி வந்தார். அவரது நிலைப்பாட்டை இன்றைய திராவிடர் கழகம் அப்படியே பின்பற்றுகிறதா என்று தெரியவில்லை. அதே சமயம், மத்திய மாநில ஆட்சிகளில் தி.மு.க இருந்ததனால் அதன் “இந்திய எதிர்ப்பு” என்ற நிலை காலப்போக்கில் கரைந்துவிட்டது என்றே கருதலாம்.

“இந்தியா என்பது ஒரு நாடல்ல” என்று வலுவாக பிரச்சாரம் செய்த பெரியாரின் இரண்டு (வெவ்வேறு காலகட்ட) கட்டுரைகளிலிருந்து சில குறிப்புகள் இங்கே –

“இந்தியா என்பது ஒரு கண்டம். எனவே அது பல நாடுகளாகத்தான் பிரிக்கப்பட வேண்டும். … பிரிட்டிஷார் தமது ஆட்சி சரியாக நடக்க சவுகரியம் தேடிக் கொள்ளவே இந்தியாவை ஒரே நாடு என்று கருதினர்; மற்றவரையும் கருதும்படி செய்தனர். … முஸ்லிம் இந்தியா, ஆரிய இந்தியா, திராவிட இந்தியா என மூன்று தனித்தனி வட்டாரங்கள் தேவை எனக் கேட்பது தவறல்ல”. (18.4.1940ல் ‘குடி அரசு’ பத்திரிக்கையில் தந்தை பெரியார் எழுதியது; ஆதார நூல்: தமிழினமும் தமிழ்நாடும், தொகுப்பு ஆசிரியர்: அ.சி. சின்னப்பத் தமிழர், வெளியீடு: தமிழம்மா பதிப்பகம், பக்: 8, 9)

“நாம் உடனடியாக விடுதலை, அதாவது இந்திய கூட்டாட்சியிலிருந்து விலகி, சுதந்திரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம் முயற்சிக்கு இன்றைய தி.மு.க. ஆட்சி இணங்கும் என்று கருத முடியாது. ஏனெனில், தி.மு.க. ஆட்சி விரும்புவதெல்லாம் இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சிதான்”. (17.9.1973ல் ‘விடுதலை’ பத்திரிக்கை பிறந்தநாள் விழா மலர் 95ல் தந்தை பெரியார் எழுதியது; ஆதார நூல்: தமிழினமும் தமிழ்நாடும், தொகுப்பு ஆசிரியர்: அ.சி. சின்னப்பத் தமிழர், வெளியீடு: தமிழம்மா பதிப்பகம், பக்: 36)

தமிழ்த் தேசிய அரசியலார் பார்வை

“இந்தியா ஒரு தேசமல்ல. இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன. அதனால் இந்தியா அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஓர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது. (Article 1(1) India, that is Bharat shall be a Union of States)”. (நூல்: தமிழ்த்தேசக் குடியரசு, ஆசிரியர்: பெ. மணியரசன், வெளியீடு: பன்மை வெளி, பக்: 12, 13)

” ‘இந்தியர்’ என்பது மரபினமும் அல்ல, தேசிய இனமும் அல்ல. அது ஒரு புவி அரசியல் பெயர் (Geo Political Name). …இந்திய அரசமைப்பு சட்டம், ‘இந்தியர்’ என்று ஒரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறவில்லை. ஓர் அரசின் – நாட்டின் குடியுரிமை (Citizenship) பற்றி மட்டுமே பகுதி 2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன. … இந்தியப் பெருமுதலாளிய – இந்தி ஆதிக்க – பிராமணிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் ‘இந்தியன்’ என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்ட விரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்”. (நூல்: தமிழ்த்தேசக் குடியரசு, ஆசிரியர்: பெ. மணியரசன், வெளியீடு: பன்மை வெளி, பக்: 14, 15)

இந்து மத பார்வை

“இந்தியா எக்காலத்திலும் பாரதம் என்கிற ஒரே நாடாகவே இருந்திருக்கிறது; ஆரியர் – திராவிடர் என்று பேதங்கள் புனைந்து இந்நாட்டின் மக்களை பிரித்து வைத்தது அந்நிய சக்திகளே (குறிப்பாக, ஆங்கிலேயர்)” என்பதே இந்து மதத்தினரின் பார்வை. காஞ்சி மகா பெரியவரின் வார்த்தைகளில் சொல்வதானால் –

“மேல்நாட்டுக்காரர்கள் ஹிந்து (சிந்து) நதியைக் கடந்தே நம் பாரத நாட்டிற்கு வர வேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் ஹிந்துவை (நதி) இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து மதம் என்றும் குறிப்பிட்டார்கள்”. (நூல்: இந்து தர்மம், ஆசிரியர்: சோ, வெளியீடு: அல்லயன்ஸ், பக்: 55)

புரிதலும் தேவையும்

மேலே சொன்ன நான்கு விஷயங்களைப் புரிந்து தொகுப்பதற்கு கிட்டத்தட்ட நானூறு பக்கங்கள் படித்திருப்பேன். தெளிவு ஏற்பட்டது என்று சொல்வதை விட, விழிப்புணர்வு ஏற்பட்டது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

மேற்சொன்ன ஒவ்வொரு கருத்தியலின் பின்னும் சில வலிகள் இருக்கின்றன.

 • “திராவிடம்” பேசும் அரசியலாருக்கு “நூறு ஆண்டுகளுக்கு முன் கொடிகட்டிப் பரந்த பிராமண ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கிவிடக் கூடாது” என்ற வேகம் இருக்கிறது.
 • “தமிழ்த் தேசியம்” பேசும் அரசியலாருக்கு “தமிழ்க்குடி என்ற மூத்தகுடியின் தனி அடையாளங்கள் தொலைந்து போய்விடக்கூடாது” என்ற பிடிப்பு இருக்கிறது.
 • “இந்து” கலாச்சாரத்தை போற்றும் அரசியலாருக்கு “தொன்று தொட்டு இங்கு நிலவும் ஆன்மிக வாழ்க்கை முறையும், தர்மமும் அந்நிய சக்திகளாலும், பிரிவினை சக்திகளாலும் பாழ்பட்டுவிடக் கூடாது” என்ற பிரார்த்தனை இருக்கிறது.
 • “இந்தியா” என்று தேசியம் பேசும் அரசியலாருக்கு “பன்முகத்தன்மை கொண்ட இந்தியா என்ற தேசம் என்றென்றும் அப்படியே இருக்க வேண்டும்” என்ற அக்கறை இருக்கிறது.

இந்த கொள்கைப் பிடிப்புகள் சரி. ஆனால் ஒருவர் வலியை மற்றவர் உணராததால் (அல்லது உணர்ந்தும் தேர்தல் ஓட்டுகளுக்காக கண்டுகொள்ளாததால்), இந்த வலிகள் தீர வழிகள் இல்லாத ‘வெறுப்பை உமிழும்’ இனவாத அரசியல் தமிழ்நாட்டில் நடக்கிறது. பாகுபாடும், பிரிவினையும் கோலோச்சும் அத்தகைய இனவாத அரசியல் வலுவிழக்க வேண்டும். அதற்கு, இந்த வலிகளைப் புரிந்து, ஒருமைப்பாட்டையும் ஒருங்கிணைப்பையும் மையப்படுத்தி நல்லிணக்கம் ஏற்படுத்தும் ஒரு மாற்று அரசியல் இங்கே அவசரமான அவசியம்.


அறிவுக்கு உதவிய நூல்கள்

 1. திராவிடர் இயக்கம், ஆசிரியர்: கோவி.லெனின், வெளியீடு: நக்கீரன்
 2. தமிழக அரசியல் வரலாறு (பாகம் 1), ஆசிரியர்: ஆர்.முத்துக்குமார், வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
 3. இந்து தர்மம், ஆசிரியர்: சோ, வெளியீடு: அல்லயன்ஸ்
 4. வெறுக்கத்தக்கதா பிராமணீயம்?, ஆசிரியர்: சோ, வெளியீடு: அல்லயன்ஸ்
 5. தேர்தலும் தமிழ்த்தேசியமும், ஆசிரியர்: பெ. மணியரசன், வெளியீடு: பன்மை வெளி
 6. தமிழ்த்தேசக் குடியரசு, ஆசிரியர்: பெ. மணியரசன், வெளியீடு: பன்மை வெளி
 7. சாதியும் தமிழ்தேசியமும், ஆசிரியர்: பெ. மணியரசன், வெளியீடு: பன்மை வெளி
 8. தமிழர் மதம், ஆசிரியர்: ஞா. தேவநேயப் பாவாணர், வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்
 9. தமிழினமும் தமிழ்நாடும், தொகுப்பு ஆசிரியர்: அ.சி. சின்னப்பத் தமிழர், வெளியீடு: தமிழம்மா பதிப்பகம்
 10. தமிழகத்தில் பிறமொழியினர், ஆசிரியர்: சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்
 11. சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர், ஆசிரியர்: பக்தவத்சல பாரதி, வெளியீடு: பாரதி புத்தகாலயம்
 12. அண்ணாந்து பார், ஆசிரியர்: என்.சொக்கன், வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

இ-மெயிலில் புதிய பதிவுகள்/கட்டுரைகள் பற்றிய குறிப்புகளைப் பெற –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!