ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நதிநீர் இணைப்பு குறித்து வலியுறுத்தி வந்திருக்கிறார். அவர் ஜனவரி 1, 2018க்கு பிறகு “நதிநீர் இணைப்பு” குறித்து தெரிவித்த கருத்துகள் இங்கே –
உள்ளடக்கம்
காலா இசை வெளியீட்டு விழா பேச்சு (மே 9, 2018 – சென்னை)
“தண்ணீர் பஞ்சம், நதி என்று சொன்னாலே என்னை அறியாமல் ஒரு ஈடுபாடு வந்துவிடுகிறது.
இமயமலைக்கு நான் போவதே கங்கையை பார்ப்பதற்குத்தான். கங்கை சில இடங்களில் ரௌத்திரமாக, சில இடங்களில் நடனமாடுவது போல், சில இடங்களில் மெளனமாக ஓடும். அது பார்ப்பதற்கே அற்புதமாக இருக்கும்.
என் வாழ்க்கையின் ஒரே கனவு – தென்னிந்திய நதிகள் இணைப்பு. தென்னிந்திய நதிகளை நாம் இணைத்துவிட்டால் அடுத்தநாளே நான் கண் மூடினாலும் பரவாயில்லை.“
காணொளி: https://youtu.be/j5maoYx2_F4 (மணித்துளி 7:06 முதல் 8:06 வரை)
இந்தியா டுடே “ரஜினிகாந்த் சிறப்பிதழ்” பேட்டி (டிசம்பர் 2018)
கேள்வி: காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் சர்ச்சைக்கான தீர்வு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ரஜினி: நதிகள் இணைப்புதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு. இது பெரிய பணி. பலரும் ஒன்றிணைந்து இதில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு (ஏப்ரல் 9, 2019 – சென்னை)
“பாஜக நேற்றுதான் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். நான் நெடுநாட்களாக நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்லி வருகிறேன். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவும் அதுவாகத்தான் இருந்தது. அவர் பிரதமராக இருக்கும் போது ஒருமுறை அவரை சந்தித்து இது பற்றி பேசியிருக்கிறேன். அப்பொழுது “இது பெரிய திட்டம். இதற்கு பகீரத யோஜனா என்று பெயர் வையுங்கள்” என்று சொல்லியிருந்தேன். அவருக்கும் அந்த பெயர் ரொம்ப பிடித்திருந்தது. சிரித்துக்கொண்டார். “பகீரத” என்று சொன்னால் சாத்தியமில்லாததை சாத்தியமாக்குவது.
இப்பொழுது பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையில் “நாட்டின் நதிகளை இணைப்போம். அதற்கு ஆணையம் அமைப்போம்” என்று சொல்லியிருக்கிறார்கள். அது ரொம்ப வரவேற்கத்தக்கது. ஆண்டவன் ஆசீர்வாதத்தால், மக்கள் தயவால் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும். அதை மட்டும் செய்தால் நாட்டில் பாதி வறுமை போய்விடும். பல கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும். விவசாயிகளின் வாழ்வு உயரும்.”
காணொளி: https://youtu.be/0WKShf0XOwY (மணித்துளி 1:18 முதல் 2:27 வரை)
