மாற்று அரசியல்

பிராமண எதிர்ப்பு: அணையவிடா நெருப்பு

முகநூல் நண்பர் சுந்தர் ராஜ சோழன், “தமிழகம் இயல்பிலேயே இந்துமதத்தை தழுவிய மாநிலம்” என்று சொல்லப்படுவதை விமர்சித்து ஒரு பதிவிட்டிருந்தார். அதில் சொல்லப்பட்டிருந்த “பிராமண வெறுப்பு” பற்றிய குறிப்புகள், என் வாழ்வில் கடந்த சில பக்கங்களை திரும்பி பார்க்க வைத்தது. அந்த பக்கங்களையும் அவை சார்ந்த தற்கால எண்ணங்களையும் இங்கே பதிவிடுகிறேன் – முடிந்தளவு சுருக்கமாக.

பள்ளிப்படிப்பு காலம்

1990ல் எங்கள் குடும்பம் திருச்சிக்கு குடிபெயர நேரிட்டது. அப்பொழுது என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு (8-ம் வகுப்பு), என் மாமா நிறைய முயற்சிகள் எடுத்தார். சிபாரிசுக்கென அங்கங்கு அலைந்தோம். இரண்டு மூன்று பள்ளிகளுக்கு அலைந்து திரிந்து, இறுதியாக நான் சேர்ந்த பள்ளி பிராமண நிர்வாகத்தின் கீழ் வந்த இ.ரெ . மேல்நிலைப்பள்ளி. அச்சமயம் சிலர், “பிராமண பள்ளியில் பிராமணல்லாதோரை துச்சமாக நடத்துவார்கள்; பிராமண பிள்ளைகளுக்கு சாதகமாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வார்கள். பிராமணர்கள் ஆதிக்கம் செய்வார்கள்; வளரவிட மாட்டார்கள்” என்றெல்லாம் அச்சமூட்டினார்கள். முதன்முதலில் “பார்ப்பனன், சூத்திரன்” போன்ற வார்த்தைகளை இந்த “அச்சமூட்டும்” எச்சரிக்கை வாயிலாகத்தான் நான் கேள்விப்பட்டேன். அந்த பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் பிராமண வகுப்பை சார்ந்தவர்கள், உடன் படித்த மாணவர்களில் பலர் பிராமண வகுப்பை சார்ந்தவர்கள். என்றாலும், நான் அங்கு படித்த ஐந்து வருடங்களில் மேற்சொன்ன துச்சமென மதித்தல், ஒருதலைப்பட்ச நிலைப்பாடு என்று எதையும் எதிர்கொள்ளவில்லை. என்னுடன் படித்த சக வகுப்பு தோழர்களில் கிறிஸ்தவர், முஸ்லிம் என மற்ற மதம் சார்ந்தவர்களும் உண்டு. பாரம்பரியமாக திமுகவில் உள்ள குடும்பத்தை சேர்ந்த, இன்று திமுகவில் வளர்ந்து வரும் இளந்தலைவர் ஒருவரும் என் வகுப்பு தோழரே.

அந்த காலகட்டத்தில் கிடைத்த நட்பு வட்டம் சற்றே பெரிது. எங்கள் குழுவில் இருவர் (சகோதரர்கள்) பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள். நாங்கள் பெரும்பாலோர் அசைவம் சாப்பிடும் பழக்கம் உள்ள பிராமணல்லாதோர் என்றாலும், அந்த நண்பர்களின் வீட்டில் எங்களுக்கு வரவேற்பறை தாண்டி செல்லும் சுதந்திரம் உண்டு. தேர்வு சமயங்களில் அவர்கள் வீட்டில் இரவில் தங்கி படித்திருக்கிறோம். அந்த நண்பர்களின் அப்பாவும் அம்மாவும் எங்கள் நலனில் அக்கறை கொண்டர்வர்கள்தாம். அவர்களை “நவீனம் என்ற பெயரில் கலாச்சாரம் தொலைத்தவர்கள்” என்று எண்ணிவிட வேண்டாம். இன்றளவும், அந்நண்பர்களின் அப்பா காலை 11 மணி வரை பூஜைகள் செய்துவிட்டுதான் உணவு உட்கொள்வார். அவர்களுக்கென உள்ள ஆச்சார அனுஷ்டானங்களை (அவற்றில் சில, மற்றவர்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்) விட்டுக்கொடுத்ததில்லை. அதே சமயம், வேறு வகுப்பை சார்ந்தவர்கள் என்று எங்களை தள்ளி வைத்ததோ, ஆதிக்க மனோபாவம் காட்டியதோ இல்லை.

பணியிடம்

கல்லூரி படிப்பு முடிந்து, தனியார் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்தேன். அங்கும் முக்கிய பொறுப்புகளிலுள்ள நிறைய பேர் பிராமண வகுப்பை சார்ந்தவர்கள். என் மேலாளரும் அப்படியே. அவர் தன் அணியிலுள்ளவர்களின் திறமையை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் செய்த செயல்கள், நல்ல பணியிடப் பாடங்களாக அமைந்தன. அவர் “பிராமணர் – பிராமணல்லாதார்” என்று எந்த பாகுபாடும் பார்த்ததில்லை. செயல்திறனுக்கே முன்னுரிமை. 10+ ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அந்த நிறுவனத்தில், பிராமண ஆதிக்கத்தால் ஒரு நல்வாய்ப்பை இழந்ததாகவோ, வர்ணாசிரம கோட்பாடு தன் கோர முகத்தை வெளிக்காட்டியதாகவோ சொல்வதற்கு எந்த சம்பவமும் இல்லை.

பிராமண ஆதிக்கத்தின் இன்றைய நிலை

மேற்சொன்ன என் அனுபவங்களை படித்துவிட்டு “அப்படியென்றால் பிராமண ஆதிக்கம் இல்லை என்கிறாயா?” என்று கேட்டால், என் பதில் இதுதான் – ஆதிக்கம் இல்லையென்றெல்லாம் சொல்லமாட்டேன். சமூகத்தில் ஆங்காகே ஆதிக்க செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், என் தாத்தாவின் தலைமுறை கண்ட “பிராமண ஆதிக்கம்” இன்று பெருமளவு குறைந்திருக்கிறது என்பது நிச்சயம். இது, பெரும்பாலான பிராமண வகுப்பினரிடையே மனமாற்றம் ஏற்படாமல் சாத்தியமாகி இருக்காது என்றே தோன்றுகிறது. இத்தகைய மாற்றத்திற்கு சமுதாய சீர்திருத்த கருத்துகளும், சமூகநீதி போராட்டங்களும், நகரமயமாக்கலும், உலகமயமாக்கலும் ஏற்படுத்திய தாக்கங்கள் காரணமாக இருக்கக்கூடும்.

இந்த மாற்றம் கண்ணெதிரில் தெரிந்தாலும், நூறு ஆண்டுகளுக்கு முன் தாம் மூட்டிய “பிராமண எதிர்ப்பு” என்ற நெருப்பு இன்றளவிலும் அதே தீவிரத்துடன் எரிய வேண்டும் என்பதில் திராவிட அரசியலார் குறியாக இருக்கிறார்கள். புரிந்தோ, புரியாமலோ நாமும் அந்த அரசியலுக்கு உடந்தையாக இருக்கிறோம்.

தீர்வும் நம்பிக்கையும்

பிராமண ஆதிக்க மனோபாவத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறை மாற்றங்கள் பரந்து விரிய வேண்டும். அதற்கு “பிராமணர் – பிராமணரல்லாதார்” என்று திராவிட அரசியல் இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் பிரிவினை வலுவிழக்க வேண்டும். இந்த பிரிவினையின் பயனாக பிராமணரல்லாத சாதிகளிடையே உள்புகுந்த ஆதிக்க மனோபாவமும் சிதைய வேண்டும். அதற்கான தீர்வு “சாதி ஒழிப்பு ஒன்றே” என்று எளிதாக சொல்லிவிடுவார்கள். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், இங்கே சாதிகளை யாரும் (முக்கியமாக அரசியல்வாதிகள்) ஒழியவிட மாட்டார்கள். மேலும், சாதிகள் ஒழிய வேண்டுமா என்பதும் கூட விவாதத்துக்கு உரியதே. “சாதிகள் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் சாதிகளை அடிப்படையாகக் கொண்ட பேதங்கள் மறையட்டும்” என்பதே நடைமுறை தீர்வாக இருக்க முடியும். இதுவும் எளிதான தீர்வல்ல. ஆனால், உறுதியான செயல்பாடு இருந்தால் சாத்தியம் என்றே தோன்றுகிறது.

சாதி பேதங்களை ஒழிப்பதற்கான தீர்வை நோக்கிய முன்னெடுப்பை திராவிட அரசியல் செய்யும் என எள்ளளவும் நம்பிக்கை இல்லை. அப்படியொரு முயற்சியை செய்திருக்கக்கூடிய திராவிட அரசியல் தலைவராக அண்ணா மட்டுமே தெரிகிறார். இன்றைய நிலையில், அண்ணா மறுபிறவியே எடுத்து வந்தாலும் அவரை திமுகவிலோ அதிமுகவிலோ அடிப்படை உறுப்பினராகக் கூட சேர்க்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

இந்துத்வா அரசியலுக்கும் மேற்சொன்ன தீர்வை நோக்கிய பயணத்தில் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.  அவர்கள், “மனமாற்றத்தை ஒப்புக்கொள்ளவும் தயக்கம், அரசியல் ரீதியிலான தாக்குதல்களை எதிர்கொள்வதிலும் குழப்பம்” என்று காலத்தை கடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கண்களுக்கு தெரியும் ஒரே நம்பிக்கை ஒளிக்கீற்று – ரஜினியின் ஆன்மிக அரசியல் மட்டுமே. இதனை நான் கண்மூடித்தனமாக சொல்லவில்லை. ரஜினி, “ஜாதி மத சார்பற்ற அறவழியில் நடப்பதே ஆன்மிக அரசியல். ஆன்மிகம் என்று சொன்னால் எல்லா ஜீவன்களும் ஒன்றுதான். எல்லாமே பரமாத்மா என்றிருப்பது ஆன்மிக அரசியல். இறை நம்பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல்.” என்று சொன்ன அந்த வார்த்தைகளின் மீது தீர்க்கமான நம்பிக்கை கொண்டே சொல்கிறேன்.

ரஜினியின் ஆன்மிக அரசியல், பிரிவினை அரசியலிலிருந்து ஒருங்கிணைப்பு அரசியலுக்கு பயணிப்பதற்கான பாலமாக இருக்கும். அந்த பாலத்தில் தமிழகம் பயணிப்பது காலத்தின் நிர்ணயமாக இருக்க வேண்டும் என்பது பிரார்த்தனை.


இ-மெயிலில் புதிய பதிவுகள்/கட்டுரைகள் பற்றிய குறிப்புகளைப் பெற –

One comment
  1. அமுதன்

    அருமையான பதிவு.. சாதியை ஒழிப்பதற்கு தீர்வாக நீங்கள் முன்னெடுப்பது எது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!