மாற்று அரசியல்

பிரிவினை வளர்க்கும் திராவிட குட்டிச்சுவர்

திமுகவின் சித்தாந்த எதிரியாக பாரதிய ஜனதா கட்சியை (பிஜேபி) சித்தரிக்கும் வகையில் “திராவிடப்பெருஞ்சுவர்” என்றொரு வீடியோவை திமுக இளைஞர் அணி சார்பாக அதன் செயலாளர் உதயநிதி வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ வெறும் திமுக vs பிஜேபி அரசியல் மட்டுமே என்றால், அதனை நாம் வேடிக்கை பார்க்கலாம். ஆனால், அந்த வீடியோவின் அடிநாதமான “பிரிவினை நஞ்சு” நம் கவனத்திற்கு உரியது மட்டுமல்ல, அடுத்த தேர்தலில் நாம் எடுக்க வேண்டிய முடிவு சார்ந்ததும் கூட.

வீடியோ சொல்வது என்ன?

அந்த வீடியோ சொல்லும் செய்தியின் சுருக்கம் இதுதான் –
தமிழ்நாடு திராவிடர்களின் பூமி. இந்த திராவிட பூமியை கையகப்படுத்த பார்ப்பனீய ஆரியர்கள் காலங்காலமாக முயற்சிக்கிறார்கள். நவீன காலத்தில் திராவிட பூமியின் சுவருக்கு பாதுகாப்பாக, ஆரியர்கள் ஊடுருவிவிடாத வகையில் அவர்களுக்கு எதிராக பெரியார், அண்ணா, கலைஞர் வரிசையில் இன்று ஸ்டாலின் நிற்கிறார்.

அந்த வீடியோவில், “பார்ப்பனீய ஆரியர்கள்” என்று பூணூல் அணிந்த பல பிராமணர்களின் சித்திரப் படங்கள் மற்றும் மோடி & அமித்ஷாவின் படங்கள் காட்டப்படுகின்றன.

“திராவிடப்பெருஞ்சுவர்” வீடியோவில் வரும் பிராமணர்கள் சித்திரம்

மோடி, அமித்ஷா குறித்த மேற்கோள்கள் அரசியல் சார்ந்தவை. அதற்கான எதிர்வினையை பிஜேபி செய்வதும் செய்யாததும் நமக்கு முக்கியமல்ல. ஆனால், பொதுவாக அனைத்து பிராமணர்களையும் தமிழ்நாட்டு மண்ணின் எதிரிகள் போல சித்தரிப்பது சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கம் கொண்டது. இன்றைய இளம் தலைமுறையினர் நெஞ்சில் “பிராமணர் – பிராமணரல்லாதவர்கள்” என்ற பிரிவினை நஞ்சை ஆழமாக ஊற்றும் செயல்.

அந்த வீடியோவில், பல வரலாற்று நிகழ்வுகளை மறைத்து தங்களுக்கு மட்டுமே சாதகமான வகையில் திமுக “கதை” கட்டியிருக்கிறது. ஒவ்வொன்றாக எடுத்து பேசினால் இந்த பதிவு வெகுவாக நீளும். அதனால், அந்த வீடியோவின் மையப்பொருளை மட்டும் அலசுவோம். மையப்பொருள் “பார்ப்பனீய ஆரியத்திற்கு எதிராக திமுகவின் தலைவர்கள் நின்றார்கள்” என்பதே. இது எத்தகைய பொய் என்பதை சில வரலாற்று நிகழ்வுகள் மூலம் பார்ப்போம்.

வரலாறு சொல்வது என்ன?

  • 1952-1954ல் ராஜாஜி முதல்வராக இருந்தபொழுது கல்வி சீர்திருத்த திட்டத்தை கொண்டுவந்தார். அந்த திட்டத்தை எதிர்த்த பெரியாரும், அண்ணாவும் “ராஜாஜி வர்ணாசிரம எண்ணத்தோடு குலக்கல்வி திட்டத்தை கொண்டுவருகிறார்” என்று விமர்சித்து போராட்டம் நடத்தினார்கள். காங்கிரஸிலும் எதிர்ப்பு இருந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், எந்த ராஜாஜியை “வர்ணாசிரம எண்ணம் கொண்டவர்” என்று விமர்சித்தாரோ, அதே ராஜாஜியுடன் கூட்டணி வைத்து 1967 தேர்தலில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடித்தார் அண்ணா. “பார்ப்பனீய ஆரிய”த்தின் ஆகச்சிறந்த எதிரி என்றால் “பிராமண ராஜாஜியுடன் கூட்டணி வைத்து திமுகவிற்கு ஒரு வெற்றி தேவையில்லை” என்று அண்ணா பிடிப்புடன் இருந்திருக்கலாமே?
  • நேருவை “காஷ்மீர் பிராமணர்” என்று விமர்சித்தவர்கள் திராவிட கட்சி தலைவர்கள். அந்த நேருவின் மகளான இந்திராவின் தலைமைலயிலான காங்கிரஸுடன் ஓடிப்போய் கூட்டணி வைத்தது கலைஞரின் திமுக. அதனை பெரியாரும் ஆதரித்தார். (குறிப்பு: திமுக தொடங்கியதிலிருந்து அது பரம விரோதியாக எதிர்த்த கட்சி காங்கிரஸ் என்பதை நினைவில் கொள்க).
  • பின்னர், எமெர்ஜென்சி காலத்தில் திமுக ஆட்சியை கலைத்தார் இந்திரா. “மீண்டும் இந்திராவுடன் கூட்டணி உண்டா” என 1979 ஜூலை மாதம் கேட்கப்பட்ட கேள்விக்கு “மிசா காலத்திலேயே சரணடையாத நாங்கள் கேவலம் தேர்தல் வெற்றிகளுக்காகவா சரணடைந்து விடுவோம்?” என்று சவடால் பதில் தந்தார் கலைஞர். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே “நேருவின் மகளே வருக, நிலையான அரசை தருக” என “பார்ப்பனீய ஆரிய” இந்திராவிடம் கலைஞர் சரணடைந்தார்.
  • 1989 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் வெற்றி ஆட்சி அமைக்கும் அளவில் இல்லை. திமுக ஒரு சீட் கூட வெற்றிபெறவில்லையென்றாலும், திமுக அங்கம் வகித்த தேசிய முன்னணி 140+ இடங்களை வென்றது. பின்னர் பிஜேபியின் ஆதரவுடன் தேசிய முன்னணி (வி.பி.சிங் தலைமையில்) ஆட்சி அமைத்தது. ஒரு சீட் கூட வெல்லாத திமுகவிற்கு மத்திய மந்திரிசபையில் இடம் கிடைத்தது – முரசொலி மாறன் மந்திரியானார். அப்பொழுது “பார்ப்பனீய ஆரிய பிஜேபியின் ஆதரவில் அமையும் மந்திரிசபையில் எங்களுக்கு மந்திரி பதவி வேண்டாம்” என்று “பதவி துண்டு, கொள்கை வேட்டி” என அடிக்கடி “முழங்கிய” கலைஞர் சொல்லவில்லை.
  • 13 மாதங்களில் ஆட்சியை பறிகொடுத்துவிட்டு நின்ற பிஜேபிக்கு (1999ல்) ஆதரவுக்கரம் நீட்டி ஆரத்தழுவி ரத்தினக்கம்பளம் விரித்தது கலைஞர்தானே? போதாதென்று “பிஜேபியை பற்றி தவறான புரிதல் இருக்கிறது. அதனை களைய வேண்டும்” என பிரச்சாரம் செய்து “பார்ப்பனீய ஆரிய” சக்திகளுக்கு வெண்சாமரம் வீசியது கலைஞர்தானே?

மேற்சொன்ன நிகழ்வுகளை பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக புரியும் – திமுகவும் அதன் தலைவர்களும் பதவிக்காக “பார்ப்பனீய ஆரிய” சக்திகளின் கையை காலை பிடித்தவர்கள்தான். தங்கள் பதவிக்கு ஒரு வேஷம், இங்கே மக்களை “பிராமணர் – பிராமணரல்லாதார்” என பிரிவினையில் வைக்க “திராவிடபெருஞ்சுவர்” என்றொரு கோஷம் என அரசியல் நடத்துகிறது திமுக. இவற்றுக்கெல்லாம் மகுடம் வைப்பது போல், திமுக தன் தேர்தல் (2021) வியூகத்திற்கு ஒரு “பார்ப்பனீய ஆரியர்” தலைமையிலான நிறுவனத்திடம் தஞ்சம் புகுந்திருக்கிறது.

குட்டிச்சுவரை எட்டித்தள்ளும் கடமை

இப்படி “பார்ப்பனீய ஆரியர்”களுடன் கை கோர்த்து, அவர்கள் காலில் விழுந்து தன் பதவி தேவைகளை பூர்த்தி செய்துகொண்ட திமுக, இன்றைய தமிழக இளம் தலைமுறையினரிடம் “பிராமணர்கள் தமிழர்களுக்கு எதிரிகள்” என்ற நஞ்சை திணிப்பது சமூக அக்கறையற்ற இழிசெயல். கெட்டு குட்டிச்சுவரான “திராவிட குட்டிச்சுவர்” திமுக இளைஞரணி, “திராவிடப்பெருஞ்சுவர்” என்ற வீடியோ மூலம் இன்றைய இளைய தலைமுறையை நச்சுமழையில் நனைக்கப் பார்க்கிறது.

தன் அரசியல் லாபத்திற்காக சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் திமுகவை 2021 தேர்தலில் முற்றிலும் புறந்தள்ள வேண்டியது தமிழக வாக்காளர்களின் கடமை. அந்த கடமையை செய்யாமல் போனால், திமுக பரப்பும் பிரிவினை நஞ்சு அடுத்த சில தலைமுறைகளையும் கொரோனவை விட கொடிய நோய் போல் தாக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. திமுகவை புறந்தள்ள நம் கையில் கிடைக்கவிருக்கும் ஒரே பேராயுதம் ரஜினியின் ஆன்மிக அரசியல் மட்டுமே. பயன்படுத்த தயாராவோம்.


பின் குறிப்பு:
பிராமண ஆதிக்கம், “பிராமணர் – பிராமணரல்லாதவர்கள்” இணக்க சூழல்களில் ஏற்பட்ட மாற்றம் குறித்து என் வாழ்வியல் அனுபவம் சார்ந்து நான் ஏற்கனவே எழுதிய ஒரு பதிவு இங்கே – https://www.tn2point0.com/anti-brahmin-politics/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!