மாற்று அரசியல்

திராவிட அரசியல் கொள்கைகளும் மாற்று அரசியலும்

ட்விட்டரில் ஒரு நண்பர் “திராவிட அரசியல் கொள்கைகள் என்ன?” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் திராவிட கொள்கைகளை சொல்லிவிட்டு, கூடவே அந்த கொள்கைகளைத் தாண்டி மாற்று அரசியலுக்கான ஏக்கம் ஏன் இருக்கிறது என்பதையும் பகிரவே இந்தப் பதிவு.

பதிவுக்குள் போவதற்கு முன் – இதே “திராவிட அரசியல் கொள்கைகள் என்ன?” கேள்வியை இன்றைய திராவிட அரசியல்வாதிகளிடம் கேட்டால், பெரும்பாலானோர் திருதிருவென விழிக்கக்கூடும். “நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்” என்ற வகையில் அவர்களுக்கும் இப்பதிவு உதவட்டும்.

சிறு முன்னுரை

1912-13 சமயத்தில் திராவிடர் சங்கம் என தொடங்கி, பின்னர் நீதிக்கட்சியாக மாறி, 1930களின் பிற்பகுதியில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால் சுவீகரிக்கப்பட்டு, அதன்பின் திராவிடர் கழகம் (தி.க) என உருவெடுத்து… நிற்க, ஒரு சின்ன இடைவெளி…

தி.கவிலிருந்து தி.மு.க. உருவாகி, தி.மு.கவிலிருந்து அ.தி.மு.க அதன்பின் ம.தி.மு.க என குறிப்பிடத்தக்க கட்சிப்பிளவுகள் கண்ட 100+ ஆண்டுகள் நீண்ட, நெடிய வரலாறு கொண்ட அரசியல் “திராவிட அரசியல்”. இவற்றில் அ.தி.மு.க பெயரில் “திராவிடம்” வைத்திருந்தாலும், அடிப்படை திராவிட கொள்கைகளிலிருந்து வெகுதூரம் விலகி நின்ற கட்சியாகவே திராவிட அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது.

மேற்சொன்ன இயக்கங்கள் வகுத்த அல்லது பின்பற்றிய (“பின்பற்றுகிற” என்பது விவாதத்துக்குரியது) கொள்கைகளே “திராவிட அரசியல் கொள்கைகள்” எனலாம். இக்கொள்கைகளை நான் இரண்டாகப் பிரிக்கிறேன் –

  1. தனித்தன்மை கொள்கைகள்: திராவிட இயக்கங்களுக்கு மட்டுமே உரிய சிறப்பம்ச கொள்கைகள்
  2. பொதுக் கொள்கைகள்: திராவிட இயக்கங்கள் தவிர மற்ற சீர்திருத்தவாதிகளும் இயக்கங்களும் வலியுறுத்திய கொள்கைகள்

தனித்தன்மை கொள்கைகள்

  • பிராமணரல்லாத மக்களின் நலன்
  • இந்து (ஆரிய) மத எதிர்ப்பு – வர்ணாசிரம கோட்பாடு எதிர்ப்பு – பிராமணர் ஆதிக்க எதிர்ப்பு
  • (வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில்) வகுப்புவாரி இட ஒதுக்கீடு
  • தனி திராவிட நாடு (பிற்காலத்தில் “மாநில சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி”)
  • இந்தி மொழி ஆதிக்க எதிர்ப்பு
  • சமஸ்க்ருத மொழி எதிர்ப்பு
  • நாத்திகம்/கடவுள் மறுப்பு + சற்று திருத்தத்துடன் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
  • சுயமரியாதை திருமணம்

இவை போக, ம.தி.மு.கவிற்கு “இலங்கையில் தனித் தமிழீழம்” ஒரு கொள்கையாக உள்ளது.

பொதுக் கொள்கைகள்

  • பெண்ணுரிமை – மகளிர் முன்னேற்றம்
  • அனைவருக்கும் கல்வி
  • தீண்டாமை ஒழிப்பு
  • மூட பழக்கவழக்கங்கள் ஒழிப்பு
  • சாதி ஒழிப்பு
  • பொருளாதார சமத்துவம் – தொழிலாளர் நலன் – விவசாயி உரிமை
  • நிலச் சீர்திருத்தம்
  • தமிழ் மொழி வளர்ச்சி – தமிழ் எழுத்து சீர்திருத்தம்
  • சிறுபான்மையினர் நலன்

ஏன் மாற்று அரசியல் வேண்டும்?

மேற்சொன்ன கொள்கைகளுக்காக திராவிட கட்சிகள் வெவ்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். நீதிக்கட்சி, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சியில் இருந்த காலங்களில் இக்கொள்கைகள் சார்ந்து சட்டங்கள் இயற்றி இருக்கிறார்கள். அவற்றால் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பயன்களும் இருந்திருக்கின்றன என்பதை மறுக்க இயலாது. ஆயினும், இங்கே திராவிட அரசியலுக்கு மாற்றான ஒரு அரசியலுக்கு ஏக்கம் இருப்பது ஏன்?

இன்றைய நிலையில், திராவிட கட்சிகளின் கொள்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. சில உதாரணங்கள் –

  • “சாதி ஒழிப்பை” ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு, தொகுதியிலுள்ள பெரும்பான்மை சாதியை குறிவைத்தே வேட்பாளரை நிறுத்துவது எப்படி “சாதி ஒழிப்பு” நோக்கத்தை நிறைவேற்றும்?
  • பெண் விடுதலை, பெண் சமத்துவம் என்று சொன்னாலும் நிர்வாக பதவிகளிலோ, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளர்களாகவோ பெண்களுக்கு குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் தராதது ஏன்?
  • விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரியது என்றாலும், பெரியார் இந்து மதத்தை அடியோடு வெறுத்தார். தீவிரமாக எதிர் பரப்புரை செய்தார். அதனால் அவ்விஷயத்தில் அவரை ஏற்பது அல்லது நிராகரிப்பது என்பது எளிது. ஆனால், தம் அரசியல் தேவைகளுக்கேற்ப “பெரியார் மண்” என பெரியாரை துணைக்கு இழுக்கும் இன்றைய திராவிட அரசியலார் (இவ்விஷயத்தில் அதிமுக நீங்கலாக), “இந்து மத எதிர்ப்பில்” வழவழ கொழகொழ என்று இரட்டை வேடம் போடுகிறார்கள். மற்ற நேரத்தில் இந்து மத சம்பிரதாயங்களை திட்டிவிட்டு, தேர்தல் நேரத்தில் “நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல, இந்து மதத்தைதான் கேள்வி கேட்கிறோம்” என பஞ்ச் பேசி ஓட்டு வாங்குவது; ஒருபுறம் “யாகத்தால் மழை வருமா?” என்று கேள்வி கேட்பது, மறுபுறம் அத்திவரதரை தரிசிக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்பது என இவர்களது இரட்டை நிலைகள் ஏராளம். ஒன்று அவர்கள் இரட்டை வேடத்தை கலைக்க வேண்டும், அல்லது இரட்டைவேடமிட்ட அவர்களை நாம் நிராகரிக்க வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

அது போக, சில கொள்கைகள் அப்படியே தொடர்வதால் பயனைவிட இடர்களே அதிகம். சில உதாரணங்கள் –

  • தமிழை மறுத்து அல்லது ஒதுக்கி வேறு எந்த மொழியை திணிக்க நினைத்தாலும் எதிர்க்க வேண்டியதுதான். இதில் இன்னொரு கருத்துக்கு இடமில்லை. ஆனால், தமிழுக்கு பாதிப்பு வராமல் இந்தி உள்ளே வந்தால் என்ன பிரச்சினை? இந்தி பேசும் மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் வணிக தொடர்புகள் அதிகரித்துள்ள இந்த உலகமயமாக்க காலத்தில், கண்மூடித்தனமாக இந்தியை ஏன் எதிர்க்க வேண்டும்?
  • “சிறுபான்மையினர் நலன்” என்கிற கொள்கை “கண்மூடித்தனமான சிறுபான்மையினர் ஆதரவு” என பின்பற்றப்படுவதால், மதரீதியில் சிறுபான்மையாக உள்ளவர்களை பெரும்பான்மையினரிடமிருந்து விலக்கி வைக்கவே உபயோகமாகிறது. மாறாக, சிறுபான்மையோ பெரும்பான்மையோ, பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு என்பது நல்லிணக்கத்திற்கு வழிகோலும்தானே?
  • நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமூகத்தில் இருந்த “பிராமண ஆதிக்கம்” இன்று பெருமளவு குறைந்திருக்கிறது என்பது கண்கூடு. அப்படி மாற்றம் இருந்தாலும், “பிராமண எதிர்ப்பு” என்ற நெருப்பு இன்றளவிலும் அதே தீவிரத்துடன் ஏன் எரிய வேண்டும்? [இது பற்றி ஒரு தனிப்பதிவு இங்கே – https://www.tn2point0.com/anti-brahmin-politics]

வெளிச்சம்

காலத்திற்கேற்ப, நோக்கத்திற்கேற்ப கொள்கைகளிலும் செயல்பாடுகளிலும் மாற்றம் அவசியம். அதற்கான துணிச்சலை கைக்கொள்ளாமல் “அரைத்த மாவையே அரைக்கும்” வேலையையே இந்த திராவிட அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. நமக்கும் இவர்களை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை. அதையும் மீறி, “மாற்று” என வரும் புதிய கட்சிகள் ஏதோ ஒருவகையில் பிரிவினையை முன்னிறுத்தும் கட்சிகளாகவே இருக்கின்றன.

இந்த குறைகளை களைந்து, இக்காலத்திற்கு தகுந்த கொள்கைகளோடு, பலதரப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்பை முன்னிறுத்தும் அரசியலாக ரஜினியின் “ஆன்மிக அரசியல்” இருக்கும் என்பதே கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியும் (தற்காலத்தின் கடைசி) நம்பிக்கை வெளிச்சம்.


அறிவுக்கு உதவிய நூல்கள்

  1. திராவிடர் இயக்கம், ஆசிரியர்: கோவி.லெனின், வெளியீடு: நக்கீரன்
  2. தமிழக அரசியல் வரலாறு (பாகம் 1), ஆசிரியர்: ஆர்.முத்துக்குமார், வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
  3. பெரியார், ஆசிரியர்: ஆர்.முத்துக்குமார், வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
  4. அண்ணாந்து பார், ஆசிரியர்: என்.சொக்கன், வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

இ-மெயிலில் புதிய பதிவுகள்/கட்டுரைகள் பற்றிய குறிப்புகளைப் பெற –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!