மாற்று அரசியல்

அன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே (1)

அன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே,

வணக்கம். உங்களுடன் நிகழ்த்தப்போகும் தொடர் உரையாடலின் முதல் பதிவு இது.

முன்குறிப்பு: “நடுநிலை வாக்காளர்கள்” எனப்படுபவர்கள் கீழ்கண்ட இரண்டு பிரிவுகளில் ஒன்றில் இருப்பவர்கள் –

 1. “திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு ஆற்றல் மிக்க அரசியல் கட்சி வேண்டும்” என்று விரும்புபவர்கள்
 2. “வேறு வழியில்லாமல் இன்றைக்கு திமுகவுக்கோ அதிமுகவுக்கோ ஓட்டு போடுகிறேன். நல்ல மாற்று அரசியலை யார் முன்வைத்தாலும் அதனை பரிசீலனை செய்து, திருப்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டால் அவருக்கு தேர்தலில் வாக்களிப்பேன்” என்று சொல்பவர்கள்

“மாற்று அரசியல்” தலைவரிடம் எதிர்பார்ப்பவை

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஒரு பலமான அரசியல் கட்சி வரவேண்டுமென்ற ஆசை கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு தோன்றியது. அன்று முதல், ஒரு மாற்று அரசியலை (மற்றும் அரசை) தரக்கூடிய தலைவர் என்பவர் இப்படி இருக்கவேண்டும் என்கிற பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகத் தொடங்கியது. அப்படி என் மனதில் உள்ள பிம்பத்தின் அம்சங்களை இங்கே தொகுத்திருக்கிறேன். மாற்று அரசியல் விரும்பும் பலரிடமும் ஏறக்குறைய (சில கூட்டல் கழித்தல் இருக்கலாம்) இதே பிம்பம் இருக்கும் என்பது என் நம்பிக்கை.

 • கொள்கைகளிலும் திட்டங்களிலும் குறுகியகால கசப்பு என்றாலும் கூட, நீண்டகால அடிப்படையில் ஆரோக்கியம் தரும் மருந்தைத் தரக்கூடிய துணிவு கொண்டவர்
 • நீண்ட கால வளர்ச்சிக்கான அடிப்படை மாற்றங்களை (முக்கியமாக கல்வி, மருத்துவம், விவசாயம், நீர்வளம் ஆகிய துறைகளில்) செய்யக்கூடியவர்
 • தமிழன் என்ற தனி அடையாளமும், இந்தியன் என்ற பெரு அடையாளமும் இரு கண்கள் என்று தன் இயக்கத்தை நடத்தக்கூடியவர்
 • “உழைக்காமல், சலுகைகளை நம்பியே வாழ்க்கையை ஓட்டி விடலாம்” என்ற எண்ணத்தை உடைத்து, “உழைப்பதற்கு அரசு வழிவகை செய்தால் என் முழு திறமையைக் கொட்டி சம்பாதிப்பேன்; என் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வேன்” என்று சிந்தனை மாற்றத்தை விதைக்கக் கூடியவர்
 • “அத்தியாவசியமான இலவசங்கள், அவையும் அவசியமானவர்களுக்கு மட்டும்” என்று பிடிப்பான கொள்கையை கடைப்பிடிக்கக்கூடியவர்
 • மாணவர் நலன் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டில் தனிக்கவனம் செலுத்துபவர்
 • இன்னின்ன வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்று அரசு நிர்வாகத்தில் புரையோடிப்போயிருக்கும் கலாச்சாரத்தை வேரறுக்கவல்லவர்
 • மெத்தனத்திற்கு பழகிப்போயுள்ள அரசு நிர்வாகம் தனியார் நிறுவனங்களுக்கு இணையான பொறுப்புடைமையுடன் பணிசெய்ய வைக்கக்கூடியவர்
 • அரசின் சேவைகளில் இடைத்தரகர்களை வெட்டிவிடக்கூடிய நிலையை உருவாக்கக்கூடியவர்
 • ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசின் சலுகைகள் – இடையிடையில் அரசியல்வாதிகளிடம் (முக்கியமாக சொந்த கட்சிக்காரர்களிடம்) சிக்கி சின்னாபின்னமாகிவிடாமல் – முழுமையாக அந்த மக்களை சென்றடையும் வழிவகை செய்யக்கூடியவர்
 • நலத்திட்டங்களும் வளர்ச்சித்திட்டங்களும் ஊழல் காரணமாக தரமற்றுப் போவதையோ தாமதமாவதையோ தடுக்கக் கூடியவர்
 • ரவுடித்தனம், கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் அளவிற்கு காவல்துறையை சீர்திருத்தக்கூடியவர்
 • “ஆரியம் – திராவிடம்” , “சாதி இந்து – தலித்” , “இந்துத்வா – சிறுபான்மை”, “தமிழ்த் தேசியம் – இந்திய தேசியம்” என்று ஏதோ ஒருவகையில் பிரித்தாளும் அரசியல் வலையில் சிக்காமல் ஒருங்கிணைப்பு அரசியல் நடத்தக் கூடியவர்
 • சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அந்தந்த சாதியினரும் மதத்தினரும் நல்லிணக்கத்தோடு எந்த பிரச்சினையையும் அணுகும் வகையில் தன் அரசியலையும் அரசையும் தகவமைத்துக்கொள்பவர்
 • பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட,  தாழ்த்தப்பட்ட மற்றும் முன்னேறிய சமூகங்களில் இன்னமும் ஏற்றத்தின் வெளிச்சம் சற்றும் படாமல் இருக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களையும் வளர்ச்சித் தேரில் ஏற்றக்கூடிய திட்டங்களை செயல்படுத்தக்கூடியவர்
 • வெறும் பேச்சளவில் நில்லாமல், பிரதிநிதித்துவத்திலும் நிர்வாகத்திலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் தரக்கூடியவர்
 • பள்ளி மாணவர்களுக்கும் எளிதில் கிடைக்கும் வகையிலான மது விற்பனை கலாச்சாரத்திற்கு (அரசு வருமானம் பாதித்தாலும் கூட) பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடியவர்
 • மாறியிருக்கும் “உலகமயமாக்க பொருளாதார” உலகில், “கார்ப்பொரேட் என்றால் கெட்ட வார்த்தை” என்று நடைமுறைக்கு ஒவ்வாத பேச்சு பேசாமல் தனியார் நிறுவனங்களை (தேவையான கட்டுப்பாடுகளுடன்) மாநில வளர்ச்சியில் இணைத்துக் கொண்டு பயணிக்கக் கூடியவர்

“மாற்று அரசியல்” தலைவர்களும், பொருத்தமும்

இன்றைய நிலையில் யாரெல்லாம் “மாற்று அரசியல்” தலைவர்கள்? – விஜயகாந்த், சீமான், அன்புமணி, கமல்ஹாசன், ரஜினிகாந்த். இந்த பட்டியலில் தினகரனை சேர்க்காததற்கு காரணம் – அவரது அரசியல் அதிமுக அரசியலாகவோ அல்லது அதன் நீட்சியாகவோ இருக்கும். அதனால் அவரை “மாற்று அரசியல்” தலைவராக கருத இடமில்லை. “ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லையே?” என்பவர்களுக்கு, அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தல் களத்தில் அவர் நிச்சயம் இருப்பார் என்பதே என் பதில்.

என் மதிப்பீடு

சரி, மேலே சொன்ன “மாற்று அரசியல்” தலைவர் பிம்பத்தின் அம்சங்கள் யாருக்கு பெரும்பான்மையாக பொருந்துகிறது என்று பாருங்கள். என் பார்வையில் 100% ரஜினிக்கே பொருந்தும்.  அப்படியானால் மற்றவர்கள்? என் மதிப்பீட்டில் மற்றவர்கள் யாரும் 60% தாண்டவில்லை. அது போக, அவர்களது அரசியலில் கவனிக்கவேண்டியவை –

 1. 2005ல் “மக்களுடன் மட்டுமே கூட்டணி” என்று இன்ப அதிர்ச்சி புயலாய் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களில் தடம் புரண்டு போனது வருத்தமே.
 2. 2016ல் “மாற்றம், முன்னேற்றம்” என்று தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திய அன்புமணி, அதற்கடுத்த பெரிய தேர்தலிலேயே (2019) அதிமுகவிடம் தஞ்சம் புகுந்துவிட்டார். மூன்று வருடங்களுக்கு மேல் முதல்வர் வேட்பாளராகக் கூட தாக்குப்பிடிக்க முடியாதவரை “மாற்று அரசியல்” தலைவராக நாம் கொண்டாட முடியுமா என்ற கேள்வி எழுவது நியாயம்தானே?
 3. சீமான் “தமிழர் இன உணர்வு”, “இயற்கை விவசாயம்” என்று சில விஷயங்களை தொடர்ந்து பேசினாலும், “தனித்தே நிற்பேன்” என்று விடாப்பிடியாக தேர்தல்களில் நின்றாலும்  அவர் விதைப்பது பிரிவினை நஞ்சு. அந்த நஞ்சு தமிழருக்கும் நல்லதல்ல, இந்தியாவிற்கும் நல்லதல்ல.
 4. கமல்ஹாசன் கட்சி தொடங்கி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவரது கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்து 4% வாக்குகளும் வாங்கிவிட்டது. இன்றளவிலும் அக்கட்சியின் கொள்கைகள் என்ன என்பதில் தெளிவில்லை. பல சமயங்களில் அவரது கருத்துக்கள் புரிந்துகொள்ள முடியாத அளவில் உள்ளன. வெகுஜன ஊடகத்தின் பெருங்கலைஞனான கமல், வெகு ஜனங்களுக்கு புரியாத அரசியல் மொழி பேசுவது என்ன பயன் தரும்? அது போக, கமல் 2021ல் முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவாரா என்பதும் சந்தேகமே.

உங்கள் மதிப்பீடு

மேலே சொன்னதை படித்தவுடன் நீங்கள் “நீ ரஜினி அபிமானி, வேறென்ன சொல்லுவாய்?” என்று முணுமுணுப்பது கேட்கிறது.  சரி, நான் சொல்வதை விட்டுவிடுங்கள். நீங்களே கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு அட்டவணையை தயார் செய்து, ஒவ்வொருத்தரையும் மதிப்பீடு செய்யுங்கள்.

மாற்று அரசியல் தலைவர்கள் மதிப்பீடு – “மாதிரி” அட்டவணை

இவ்வாறு மதிப்பீடு செய்யும்போது உங்களுக்கு இயல்பாக எழக்கூடிய கேள்வி – “ரஜினியை தவிர இந்த பட்டியலில் உள்ள மற்றவர்களின் அரசியல் செயல்பாடுகளை பார்த்தாயிற்று. அதனால் அவர்களை எளிதாக மதிப்பீடு செய்யலாம். ரஜினியை எவ்வாறு மதிப்பீடு செய்வது?”. நியாயமான கேள்விதான். உங்கள் மதிப்பீட்டுக்கு உதவும் வகையில் சில விஷயங்களை முன்வைக்கிறேன்.

 1. ரஜினி தன்னுடைய அரசியலுக்கு “ஆன்மிக அரசியல்” என்று அழுத்தம் திருத்தமாக பெயர் கொடுத்திருக்கிறார். அது பாகுபாடுகள் கடந்த, இறை நம்பிக்கையை உள்கொண்ட, நேர்மையான, வெளிப்படையான அரசியல் என்பது மேலோட்டமான விளக்கம். அவர் கட்சி தொடங்கியதும் இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளலாம்.
 2. தான் ஒரு வித்தியாசமான அரசியல் தரவேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். அவர் வார்த்தைகள் இங்கே – “நான் அரசியலில் நுழைந்தால் நான் நானாக இருப்பேன். … புதிய, வித்தியாசமான அரசியலை அறிமுகப்படுத்துவேன். இல்லையெனில் 67 வயதில் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? இது பூக்களின் பாதை அல்ல. இருப்பினும் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்”.
 3. “ரஜினி மக்கள் மன்றம்” என்ற கட்டமைப்பை உருவாக்கி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அந்த அமைப்பின் மூலம் பல சமூகப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார். தண்ணீர் பஞ்ச பகுதிகளில் தொடர் குடிநீர் விநியோகம், பள்ளிகள் சீரமைப்பு பணிகளில் பங்கெடுப்பு, நீர்நிலைகள் தூர்வாருதல், மருத்துவ முகாம்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
 4. “ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம், லஞ்சம், ஏழைகளின் கண்ணீர், விவசாயிகளின் கண்ணீர், மீனவர்களின் கண்ணீர், இலங்கை அகதிகள் (நாடற்ற) அவல நிலை” – இவைகள்தான் தனது எதிரிகள் என தான் முக்கியத்துவம் தரப்போகும் பிரச்சினைகள் பற்றி ரஜினி கோடிட்டு காட்டியிருக்கிறார். மேலும், தென்னக நதிநீர் இணைப்பில் ரஜினியின் முனைப்பு எல்லோரும் அறிந்ததே.
 5. கைத்தட்டல்களுக்காக ஒரு கருத்தை சொல்லுவது, விமர்சனத்திற்காக ஒரு கருத்தை ஒதுக்குவது என்ற நிலைப்பாடு ரஜினியிடம் இல்லை. மக்களுக்கும், நாட்டுக்கும் எது நல்லது என்ற சிந்தனையை ஒட்டியே அவரது கருத்துகள் இருக்கின்றன. சில உதாரணங்கள் –
  1. பல கட்சிகள் “மாணவர் அணி” வைத்திருக்கும் நிலையில், “மாணவர்களே, நீங்கள் அரசியல் தெரிந்து கொள்ளுங்கள். ஈடுபடாதீர்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள்.” என்று அக்கறையுடன் அறிவுறுத்தும் தலைவராக ரஜினி இருக்கிறார்.
  2. எந்த பிரச்சினை என்றாலும் காவல்துறையை கண்டிக்கும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், ரஜினி காவல்துறைக்கு உரிய மரியாதை தருகிறார். இதோ அவர் பார்வை – “காவலர்கள் மீது கைவைப்பவர்களை விடக்கூடாது. அப்படி செய்ய தொடங்கிவிட்டால், மக்களை யார் காப்பாற்ற முடியும்? ஏழு கோடி மக்களை காப்பாற்ற அந்த காவலர்கள்தானே இருக்கிறார்கள்?”
  3. ரஜினி “மண், நீர், காற்று”க்கு மாசு ஏற்படுத்தாத வகையிலான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தொழில் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிறார். அதே சமயம், மாசுபடுத்தும் தொழில்களால் அரசுக்கு பல லட்சம் கோடி வருமானம் வருவதாக இருந்தாலும் கூட இடம் தரக்கூடாது என்கிறார்.
  4. காஷ்மீருக்கு 370 நீக்கத்தை வாழ்த்தினால் “பாஜக ஆதரவு”, “முஸ்லீம் எதிர்ப்பு” என போலி பிம்பங்கள் ஏற்படுத்தப்படும் என்பதால், அதிமுக மற்றும் சில சிறு கட்சிகள் மிக சன்னமாகவே ஆதரவு தெரிவித்தனர். அச்சூழலில் தமிழகத்தின் தேசிய பெருங்குரலாக ஒலித்த ரஜினி, 370 நீக்கத்தை தெளிவாகவும் தீர்க்கமாகவும் ஆதரித்தார்.

மேற்சொன்னவற்றை அலசி ஆராய்ந்து உங்கள் மதிப்பீட்டை முடித்து, “மாற்று அரசியல்” தலைவருக்கான பிம்பத்துடன் பொருத்திப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். உங்கள் மதிப்பீட்டில், ரஜினி மற்றவர்களை முந்தியிருப்பார்; பெருமளவில் பொருந்தி இருப்பார் என நிச்சயமாக நம்புகிறேன். அப்படி இல்லையெனில், உங்கள் கருத்துக்களை கீழே உள்ள “கமெண்ட்ஸ்” பிரிவில் பதிவிடவும். ஆரோக்கியமாக விவாதிப்போம்.

காணொளி

ஏற்கனவே சொன்னது போல் இது முதல் பதிவுதான். அடுத்தடுத்த பதிவுகளில் ரஜினியின் மாற்று அரசியல் பற்றி இன்னும் பேசலாம்.

விடைபெறுவதற்கு முன், உங்கள் பார்வைக்கு ஒரு சின்ன காணொளி –

[குறிப்பு: இந்த காணொளியில் வரும் “ரஜினி மக்கள் மன்றம்” சார்ந்த சில படங்கள் ரஜினி ரசிகர் “shenbag” அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அவருக்கு என் நன்றி.].

நன்றி. மீண்டும் சந்திப்போம்.


இ-மெயிலில் புதிய பதிவுகள்/கட்டுரைகள் பற்றிய குறிப்புகளைப் பெற –

16 comments
 1. Eswari Murali

  மாற்று அரசியல் ரஜினி வந்தா நல்லா இருக்கும்..ஆனா வரணுமே

 2. Siva Amudhan

  சிறப்பான கட்டுரை.. மாற்று அரசியல் வேண்டும் என்பவர், அனால் குழப்பத்தில் இருப்போர் கண்டிப்பாக படிக்க வேண்டும்..

 3. Annadurai

  We know who is making you to give statement like this,till now no body have asked for an alternative to dravida party’s.so keep on trying to lol people

  1. tn20admin

   “who is making you to give statement like this” – Maybe, you can be a little more open in your statement, so that I can respond.

   “till now no body have asked for an alternative to dravida party’s” – please analyse the results of 2016 assembly (general) elections. Approximately 19% of the voters did not prefer dravidian parties/alliances.

 4. Ameer

  Hi, I strongly believing our thalaivar political will be better than others. But only thing அவரின் பிஜேபி sambanthapattavai..Kashmir seyalil modi எடுத்த நடவடிக்கை தப்பு என்பது 99% முஸ்லும்களின் கருத்து ..ஏன் என்றால் ஒன்றும் அறியாத public அங்கு சிறை வைக்க படுகிறார்கள் ..வேறு சில கொடுமைகளும்…ஆனால் தலைவர் Bjp என்றவுடனேயே மற்றவராகள் சொல்வது போல் தலைவர் support பன்றார் என்ற சின்ன doubt வருவதை மறைக்க முடியாது .. ஆனால் தேர்தலில் நடுநிலையான எல்லா மதத்திற்கும் சமமான குறிப்பிட்ட மதம் சார்ந்து இல்லாமல் மத சார்பற்ற சிறப்பான ஆட்சியை முன்னெடுப்பார் , அதை தனது கொள்கைகளிலும் சேர்ப்பார் என்று திடமாக நம்புகிறேன் ..அவர் தனித்தே நிற்க வேண்டும் . Naan daily என் office collegue udan argue பண்ணிட்டு இருக்கேன் ..Avar அரசிலுக்கு வரமாட்டார் என்றும் சொல்கிறார்கள் … நல்லதை எதிர்பார்த்து ….உண்மையுடன் Ameer. 9840444044

  1. tn20admin

   அமீர் – தலைவரின் சமீபத்திய பேட்டி பார்த்திருப்பீர்கள். அவர் தனக்கென்று ஒரு அரசியல் பாதை போட்டு வருவாரேயன்றி, பிஜேபி அரசியலை அவர் முன்னெடுக்க மாட்டார். தலைவருக்கு தேசிய பார்வையும் உணர்வும் உள்ளதால் சில விஷயங்களில் தேசிய கட்சிகளான பிஜேபி மற்றும் காங்கிரஸ் நிலையுடன் அவர் ஒத்து போகக்கூடும். காங்கிரஸே 10% பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீட்டில் (நேரு ஏற்காத பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீட்டில்) பிஜேபியுடன் ஒத்து போனதே. காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரை, இந்து – முஸ்லிம் என்று பார்க்காமல் பகைநாட்டு பயங்கரவாதத்தை மனதில் வைத்து நிலைப்பாடு எடுத்தல் நலம்.

   மொத்தத்தில், தலைவரின் ஆன்மிக அரசியல் எல்லோருக்கும் பொதுவாகவே இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. பொதுவான நடுநிலை வாக்காளர்களும் அவரது அரசியலை தொடர்ந்து கவனித்து வந்தால், இதே அபிப்ராயத்திற்கு வருவார்கள் என்றே நம்புகிறேன்

 5. Kannan KP

  I totally agree with you. My worries are
  1. Other politicians joining and corrupting his party
  2. Will his family interfere?
  3. Whether fans of him will understand his stand and refrain from any activities which could spoil his name,

  1. tn20admin

   Hi Kannan – Here’re my thoughts on your points

   1. Politicians from other parties will definitely join. It’s how he’ll handle them will make the difference. In May 2017 fans meet, he clearly stated that he’d not allow people with “money making through politics” mindset to come near him.
   2. I trust that his family won’t interfere, as he has been sort of an independent decision maker in his life (be it his spacing between films, or making regular visits to Himalayas, etc)
   3. He has wide base of fans with inclination from “far left” ideology to “far right” ideology. However, once he launches the party and spells out the vision & principles, his supporters will get into an alignment. There may be a few dissidents – who’ll leave the party (either by themselves or sent out).

 6. Aravind Ganapathy

  Super Siva!!! Very well analysed and presented. Thalaivar is the only option for a good change. If it is missed then the good change would not happen for several years. Thamizhargale vizhithezhungal!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!