மாற்று அரசியல்

வரமாட்டீங்களா ரஜினி?

டிசம்பர் 29, 2020 மற்றும் ஜனவரி 11, 2021ல் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் ரஜினிகாந்த் தான் இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழக தேர்தல் களம் வழக்கம் போல் திமுக அணி vs அதிமுக அணி என்கிற திசையில் பயணிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால்…

நவம்பர் மாதம் (2020) திமுக தன் பிரச்சாரத்தை துவக்கியது. அக்கட்சியின் வருங்கால மன்னர் உதயநிதி ஸ்டாலின் “இன்னும் ஐந்து மாதங்களில் நாங்க ஆட்சிக்கு வந்துடுவோம், அப்புறம் உங்களை வச்சுக்கிறேன்” என்கிற ரீதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல் விட்டார். திமுகவின் எம்.பி. தருமபுரி செந்தில்குமார் “நாங்க ஆட்சிக்கு வந்ததும் சலுகைகள் எல்லாம் முதலில் திமுக தொண்டர்களுக்குத்தான், அதன்பின்தான் மக்களுக்கு” என்கிற முத்தான ஒப்புதல் உறுதிமொழியை (வாக்குமூலத்தை??) அளித்தார். திமுகவின் நிர்வாகிகளில் ஒருவர், “திமுக ஆட்சிக்கு வந்ததும் நாம சொல்ற ஆட்களைத்தான்/நமக்கு வேண்டிய ஆட்களைத்தான் அதிகாரிகளாக நியமிப்பார்கள்” என்கிற வகையில் மேடையில் உணர்ச்சிபொங்க பேசினார். இப்படியாக, திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு நிர்வாகம் எப்படி சின்னாபின்னமாகி இன்னும் மோசமாக சீரழியும் என்பது கண்முன்னே தெரிகிறது.

“அதிமுக+பிஜேபி கூட்டணி தோற்கவேண்டும், திமுக ஆட்சிக்கு வரவேண்டும்” என தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடும் ஒரு பத்திரிக்கையாளரே சில வாரங்களுக்கு முன் ஒரு பேட்டியில் “திமுகதான் ஆட்சிக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அப்படி வரும் திமுகவின் ஆட்சி, 2006-11 ஆட்சியை விட மோசமாக இருக்கும் என அஞ்சுகிறேன்” என்றார். அதாவது, திமுக வெல்லவேண்டும் என்று நினைப்பவருக்கே அப்படி வரக்கூடிய ஆட்சியை பற்றி ஒரு நேர்மறையான நம்பிக்கை இல்லை. இதற்கு மேல் திமுகவின் வரவைப் பற்றி பேச என்ன இருக்கிறது?

அதிமுக ஆட்சிக்கு வந்தால்…

டிசம்பர் 2020 கடைசி வாரம். திருச்சி திருவெறும்பூர் பகுதிக்கு ஒரு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக சாலையின் இருபக்கங்களிலும் பேனர்கள், சாலையை இருபுறமாக பிரிக்கும் தடுப்பு குறுஞ்சுவர்களில் வாழை மரங்கள், வண்டியில் செல்வோருக்கு பாதுகாப்பில்லாத வகையில் கண்ணை மறைக்கும் போர்டுகள் என களைகட்டியது. இது ஒரு சாம்பிள்தான். இரண்டு வருடங்களுக்கு முன் இதே போல் அதிமுகவினர் சாலையின் இடையில் வைத்த ஒரு பேனர் விழுந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண்ணின் உயிரை காவு வாங்கிய சம்பவம் அதற்குள் மறந்து போய்விட்டது போல.

எளிமையான முதல்வர் என சிலாகிக்கப்படும் பழனிசாமிக்கு கொடுக்கப்படும் ஆடம்பரமான வரவேற்புகள் 1991-96 ஜெயலலிதா ஆட்சியின் கட்அவுட் கலாச்சாரத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது. அது போக, சசிகலா நேரடி அல்லது மறைமுக அதிகார மையமாக கோலோச்சுவதற்கான சமிங்கைகளும் நிறையவே தென்படுகின்றன. ஏற்கனவே பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்தவர்களுக்கு, அதிலும் கடந்த நாலு வருடங்களில் “வாழ்வா சாவா” ஆட்சியை விட்டுவிடாமல் கெட்டியாக பிடித்து நகர்த்தியவர்களுக்கு, மீண்டும் ஆட்சி கையில் கிடைத்தால் அதிகார போதையின் உச்சம் ஆர்ப்பரித்து ஆடவே வாய்ப்புகள் அதிகம். அதன் தாக்கம் அரசு நிர்வாகத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மாற்று?

ஜெயிக்கிறார்களோ, இல்லையோ ஆனால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் குறைந்தபட்சம் அச்சத்தையாவது தரக்கூடிய ஒரு வலுவான மாற்று சக்தி இங்கே இன்று இல்லை என்பதே நிதர்சனம். [குறிப்பு: இன்றைய நிலையில், மாற்று அரசியல் என்ற புள்ளியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நின்றாலும், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அளவில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது].

அடர்காட்டில் பாதுகாப்பிற்காக மரக்கிளையை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதன்; அவன் தலைக்கு மேல் எந்நேரத்திலும் அவன் கழுத்தை இறுக்கக்கூடிய மலைப்பாம்பு; அவன் விழுந்தால் அடித்து சாப்பிட தயாராக கீழே தரையில் புலி. இப்படிப்பட்ட மனிதனின் நிலைதான் இன்றைய தமிழக மக்களுக்கும். திமுகவும் அதிமுகவும் மலைப்பாம்பும் புலியும் போல் காத்திருக்கிறார்கள். அந்த மனிதனை உயிர்பிழைக்க செய்ய இறைசக்தி உதவினால்தான் உண்டு. அப்படி இறைசக்தி அனுப்பிய “அரசியல் மாற்று” சக்தியாக தெரிந்த ரஜினிகாந்த், “இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை” என்று கொரோனா + உடல்நிலை காரணமாக ஒதுங்கியது, கிளை பிடித்து ஊசாலடும் மனிதனுக்கு பேரிடி என்றால் மிகையில்லை.

இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. ஊசலாடும் மனிதனுக்கு கைகொடுக்க இன்னமும் கொஞ்சம் நேரம் மிச்சம் இருக்கிறது. “இவ்வளவு தாமதமாக கைகொடுத்தால் அந்த மனிதன் ஏற்றுக்கொள்வானா?” என்று சிலர் கேட்கிறார்கள். மலைப்பாம்பா, புலியா, இல்லை உயிர் வாழ ஒரு வழியா என்பதை அந்த மனிதன் முடிவு செய்யட்டும்.

என்னைப் போல் பலர் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிற, “இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை” என்று உரக்கமாக சொன்ன தலைவர் ரஜினியிடம் நான் கேட்பதெல்லாம் இதுதான் –

 • கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து சென்ற இம்ரான்கான் மீண்டும் வந்து தன் நாட்டுக்கு உலகக்கோப்பை வென்று தந்ததைப்போல்
 • “2012 ஒலிம்பிக்கோடு என் விளையாட்டு வாழ்வு முடிந்தது” என்று விலகிப்போன நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் மீண்டும் வந்து அடுத்த ஒலிம்பிக்கில் ஆகச்சிறந்த சாதனைகள் செய்தது போல்
 • அவ்வளவு ஏன், “உயிர் பிழைத்து வந்திருக்கிறார். இனியெல்லாம் இவர் சினிமாவில் நடித்தாலே பெரிது” என்று சொல்லப்பட்ட எங்கள் ரஜினிகாந்த், “2.0” என்ற சர்வதேச மார்க்கெட்டுக்கான படத்தில் நடித்து புதிய உச்ச சாதனை புரிந்தது போல்
 • அரசியலில் இருந்து ஒய்வு அறிவித்த ராஜாஜி, அன்றைய தமிழகத்தின் நிலையான அரசுக்காக தன் 74 வயதில் மீண்டும் வந்து தலைமையேற்றது போல்

இன்று கையறு நிலையில் இருக்கும் தமிழக வாக்காளனுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான, தொலைநோக்கு கொண்ட வலுவான மாற்று அரசியலை முன்வைக்க

வரமாட்டீங்களா தலைவா?

8 comments
 1. MAREES

  அருமையான கட்டுரை. மிகச்சரியாக இருக்கிறது. ஒவ்வொருவரின் மனதையும் பிரதிபலிக்கிறது.

  ஆனால் இது தலைவரை எப்படி சென்று அடையும் என்றுதான் தெரியவில்லை.

  மாரிஸ்

 2. Ramesh

  இது தான் கல யதார்த்தம் தமிழகத்தின் உண்மையான நிலை அருமையான கட்டுரை

 3. Ravi

  அருமையான பதிவு… ஒவ்வொரு ரசிகனின் மன பிரதிபலிக்கிறது… காலம் பதில் சொல்ல வேண்டும்….

  காத்திருப்போம்… தமிழ் நாட்டின் விடியலுக்காக…

 4. Arunkumar

  Great article and I endorse your views!!! It’s definitely in our minds or whoever think of good change. But many people not having awareness of what good rule is… they want free stuff, and enjoy politicians fight/ dramas like reality show…
  only for that, Thalaivar said that only cinema fame is not enough!! He want to go across TN to bring that awareness starting last June/July.. but unfortunately this corona completely destroyed our TN future.. I don’t know whether he will do half heartedly now… But as you said, if He comes, i will completely support for betterment of our state/country.

 5. L V Nagarajan

  It is great appeal. It isunfortunate that many of us are doubting whether this will reach Rajini Sirs Eyes, Ears and Mind. Who is supposed to bring this view to his notice? Latha Rajinikanth, Soundarya, Ra Arjunamurthy, Tamziharauvi Manian.?
  Who is the person handling his contacts and communications in public matters in Social Media, Visual Media and Print media? Does he have offcial spokes person? how reliable are these people? are they any better than Stalin of Tuthukudi RMM? Why is not Thalaivar be little bit more active in Social media? When our PM and RG can do it, why not Rajini Sir. இப்படி கிணத்தில் போட்ட கல் மாதிரி இருந்தால் அதற்கு என்ன பொருள்?

 6. Dr.Rathinavel

  Superb.Still waiting for Thalaivar’s political entry & victory.Easy for you Thalaiva.ஆண்டவன் நினைத்தால் உங்கள் மூலமாக தமிழக மக்களை காப்பாற்றுவார் என நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!