அலசல்

தேர்தல் முடிவுகளை மட்டுமல்ல, அரசியலையும் மாற்றுவார் ரஜினி

“பிபிசி தமிழ்” இணையதளத்தில் பெரியாரிய, திராவிட இயக்க ஆதரவாளரான ராஜன் குறை என்கிற எழுத்தாளர் “ரஜினி அரசியலுக்கு வரவில்லை, தேர்தலுக்கு வருகிறார்” என்றொரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வந்தபின் சீர்குலைத்து வைத்திருக்கும் அரசு நிர்வாக அமைப்பு சார்ந்த விஷயங்களை திருத்துவதற்கு, அதே அதிகாரத்தை கையிலெடுக்க வழிவகை செய்யும் தேர்தலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. பழகிப்போன “கட்சி அரசியல் -> அரசு நிர்வாகம்” முறையை சற்றே மாற்றி, “கட்சி -> அரசு நிர்வாகம் & கட்சி அரசியல்” என்றொரு அணுகுமுறையை எடுத்தால் என்ன தவறு? இப்படி ஓரிரு வாக்கியங்களில் அந்த கட்டுரைக்கு பதில் சொல்லி கடந்துவிடலாம் என்றாலும், அந்த கட்டுரையில் கற்பனையுடனும் வெறுப்புணர்வுடனும் எழுதப்பட்டுள்ள சில கருத்துகளுக்கு எதிர்வினை ஆற்றுவது அவசியமாகிறது.;

ராஜன் குறையின் கருத்துகளும் நம் பதில்களும்

ராஜன் குறை: ரஜினிகாந்திற்கு கட்சி அமைப்பை உருவாக்குவதில் ஆர்வம் இல்லை. ஜனவரியில் அல்ல, தேர்தல் அறிவித்த பிறகுகூட அவர் கட்சி தொடங்கலாம். ஏனெனில் கட்சிக்கு கொள்கை, கோட்பாடு என்று எதுவும் கிடையாது. அதையெல்லாம் கேட்டால் அவருக்கு தலை சுற்றும்.
பதில்: ரஜினிகாந்த் தன் கட்சி இதுதான், இதன் கொள்கைகள் இவை என்று சொன்னபின் கொள்கை, கோட்பாடு பற்றி விமர்சிப்பதில் நியாயம் உள்ளது. ஆனால், இன்னும் அறிவிக்காத கட்சிக்கு “கொள்கை, கோட்பாடு” என்று எதுவும் கிடையாது என்று பேசுவதில் என்ன அறிவார்ந்த தன்மை உள்ளது என்பது நமக்கு விளங்கவில்லை. இதுதான் பெரியாரிய, திராவிட இயக்கவியல் கற்றுக்கொடுத்த பகுத்தறிவு என்று ராஜன் குறை ஒப்புகொள்வாரேயானால், நாம் அந்த ஒப்புதல் வாக்குமூலத்திற்காக அவருக்கு பூச்செண்டு தந்துவிட்டு நகர்ந்து போகலாம்.

ராஜன் குறை: ரஜினிகாந்த் தன் கட்சி யாரை எதிர்த்து செயல்படுகிறது என்று சொல்ல மாட்டார்.
பதில்: ரஜினி மார்ச் 12, 2020 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பேச்சில் “திமுக, அதிமுக என்ற இரண்டு ஜாம்பவான்களை எதிர்த்து களம் இறங்கப்போகிறோம்” என்று தெளிவாக சொல்லிவிட்டார்.

ராஜன் குறை: எல்லாருக்கும் பொதுவான ஜாதி,மத, அரசியல் பேதங்களை கடந்த ஆன்மீக நல்லாட்சி அரசியல் என்பார். அதன்பொருள் “அரசியலே எதுவும் கிடையாது. நான் நிறைய சினிமாவில் நடித்து உங்களை மகிழ்வித்தேன். எனக்கு ஓட்டுப்போடுங்கள்” என்பதுதான்.
பதில்: எல்லோருக்கும் பொதுவான என்று மேம்போக்காக பேசிவிடலாம். ஆனால், இந்த “பொதுவான” விஷயங்களை இன்றைய கட்சிகள் சரியாக செயல்படுத்தாததுதானே இங்கே பல சிக்கல்களுக்கு காரணம்? அது போக, மார்ச் 2018ல் ஒரு கல்லூரி விழாவில் ஆன்மிக அரசியல் பற்றி சொன்ன ரஜினி, மேலே சொன்ன “பொதுவான” அம்சங்கள் தாண்டி இரண்டு விஷயங்களுக்கு அழுத்தம் கொடுத்தார் – வெளிப்படையான அரசியல், இறை நம்பிக்கை உள்ள அரசியல். இவற்றை இன்றுள்ள பிரதான கட்சிகள் பேச தயங்குவதும், பட்டும்படாமலும் பேசுவதும் நிதர்சனம். இந்த நடைமுறையை கண்டும் காணாமல் செல்லும் ராஜன் குறை போன்றவர்கள், வரும் நாட்களில் ரஜினி கட்சியின் கொள்கைகள் புரிந்தும் புரியாததுபோல் பாசாங்கு செய்வார்கள். இனி “பிபிசி தமிழு”க்கு அப்படிப்பட்ட பாசாங்கு கட்டுரைகள் அடிக்கடி கிடைக்கும்.

ராஜன் குறை: மக்களிடையே பணியாற்ற வேண்டும் என்றால் மக்கள் கோரிக்கைகளுக்காக போராடுவது என்பதே அவருக்கு பிடிக்காது. அரசுக்கு எதிராக போராடுவது மகா பாவம் என்று நினைப்பவர்.
பதில்: மக்கள் கோரிக்கைகளுக்கான தீர்வுதான் முக்கியம். அந்த தீர்வை அடைவதற்கு “போராட்டம்” உட்பட பல வழிமுறைகள் உண்டு. எந்த வழிமுறையை எப்பொழுது தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை கோரிக்கைகளின் அடர்த்தியே தீர்மானிக்கும். வெறும் இருப்பை காட்டிக்கொள்வதற்காக நடத்தும் போராட்டங்களில் ரஜினிக்கு நம்பிக்கை இல்லை என்பது பெரும்பாலான மக்களும் ஏற்கக்கூடிய நிலைப்பாடுதான். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவர் போராட்டத்தை தொடர்ந்து ஆதரித்தார், ஆலையை மூடும் முடிவை எடுக்காத அரசின் நிலைப்பாடை அவர் எதிர்த்தார். கடைசி நாள் போராட்டத்தில் சமூக விரோதிகளின் நுழைவையும் எதிர்த்தார். இங்கு பலருக்கு அவர் சமூக விரோதிகளை எதிர்த்தது பிடிக்கவில்லை என்பது கண்கூடு.

ராஜன் குறை: பாரதிய ஜனதா கட்சி, அர்ஜுனமூர்த்தி என்ற ஆர்.எஸ்.எஸ்காரரை கட்சி அமைப்பை உருவாக்க டெபுடேஷனில் அனுப்பியுள்ளது.
பதில்: பிஜேபியில் இருந்து வந்ததாலேயே டெபுடேஷன் என்று லாஜிக் பேசினால், நாம் ராஜன் குறையிடம் இந்த கேள்விகளை வைப்போம் – வி.பி. துரைசாமியை திமுக பிஜேபிக்கு டெபுடேஷனில் அனுப்பி உள்ளதா? செந்தில் பாலாஜியை அமமுக திமுகவிற்கு டெபுடேஷனில் அனுப்பி உள்ளதா? மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரஸ் பிஜேபிக்கு டெபுடேஷனில் அனுப்பி உள்ளதா?

ராஜன் குறை: எது அரசியலின் உயிர்மூச்சோ அந்த விவாதம், விளக்கம், தர்க்கம் எதுவும் அவருக்கு பிடிக்காது.
பதில்: CAA விவகாரத்தில் ரஜினி தன் நிலைப்பாட்டை சொன்ன பின்னும், அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த முஸ்லீம் உலமாக்கள் அவரை சந்திக்க விரும்பியபோது நேரம் ஒதுக்கி சந்தித்தார். அவர்கள் தரப்பை கேட்டறிந்து, NPR தொடர்பான முஸ்லீம்களின் கவலை பற்றி, பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து அவர்களை பேச வலியுறுத்தியதோடு, தேவைப்பட்டால் “சந்திப்புக்கு உதவுகிறேன்” என்றார். இப்படி இரு தரப்புக்கும் பொதுவான, பேச்சுவார்த்தை மூலம் புரிதலுக்கு/தீர்வுக்கு வாய்ப்பு உள்ள நிலைப்பாட்டை இன்றைய முதல்வரோ, எதிர்க்கட்சி தலைவரோ எடுத்தார்களா? ஒரு சார்பாகத்தானே நின்றார்கள். ரஜினியின் இந்த செயல்பாடு “விவாதம், விளக்கம், தர்க்கம்” பிரிவில் வராதோ?

ராஜன் குறை: பத்திரிகையாளர் சந்திப்பே நிகழ்த்தாத அரசியல்வாதிகளை அவர் ரசிக்கிறார்.
பதில்: ராஜன் குறைக்கு ரஜினி மீது குறை சொல்ல வலுவான வாதம் ஏதுமில்லை என்பதன் பிரதிபலிப்பே இந்த கற்பனை குற்றசாட்டு. ரஜினி டிசம்பர் 31. 2017 “அரசியலுக்கு வருவது உறுதி” என்று சொன்னதிலிருந்து பல முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் கூட “செட்டப்” கேள்விகள், காயப்படுத்தாத கேள்விகள் மட்டுமே கேட்க முடியும். ஆனால் ரஜினியிடம் “நீங்கள் வட்டிக்கு விட்டதாக..” என சுதந்திரமாக கேட்க முடியும். அதற்கும் அவர் எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் நிதானமாக பதில் சொல்லி சென்றார்.

ராஜன் குறை: அவர் ஆட்சி செய்ய வேறு ஒருவரைத்தான் நியமிப்பார். அமர்த்திவிட்டு பாபா படம் போல இமயமலைக்கு செல்வார். ஆட்சிக்கு ஏதாவது பிரச்னை வந்தால் மீண்டும் வந்து குரல் கொடுப்பார்.
பதில்: ரஜினியின் செயல்திட்டங்களில் முக்கியமான ஒன்று “நான் முதல்வராகமாட்டேன், திறமை வாய்ந்த இளைஞரிடம் ஆட்சியை ஒப்படைப்பேன்” என்பது. கட்சி தொடங்குவதற்கு முன் வெளிப்படையாக ரஜினியே சொன்ன ஒன்றை, ஏதோ தான் யூகித்து எழுதுவது போல் ராஜன் குறை நிறுவ முயற்சிக்கிறார். “இமயமலைக்கு செல்வார்” என்று தன் கட்டுரையில் சுவாரசியம் சேர்க்க மசாலா தூவுகிறார். உண்மையில் ரஜினி தன் தலைமையில் பல்துறை வல்லுநர்கள் குழு அமைத்து ஆட்சியின் நிறை குறைகளை கவனிப்போம் என்றே சொன்னார். இங்கே அரசு நிர்வாக சீர்கேட்டிற்கு முக்கிய காரணமாக உள்ள “அரசு நிர்வாகத்தில் கட்சி அரசியலின் தலையீட்”டை குறைக்கவே இப்படி ஒரு திட்டம். திராவிட அரசியலின் அரசு நிர்வாகத்தில் ஊறிப்போனவர்களுக்கு இந்த திட்டம் கசப்பது வியப்பில்லை.

ராஜன் குறை: அது போல ஆர்.எஸ்.எஸ் – தமிழகத்திற்கென்றே ஒரு பிரத்யேக பிராண்டாக ரஜினிகாந்த்தை அறிமுகம் செய்துள்ளது. … இந்த ஆர்.எஸ்.எஸின் ரஜினி பிராண்ட் தமிழ் சமூகத்தை சீரழித்துவிடும்.
பதில்: எந்த அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டு இது. ரஜினி ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்திருக்கிறாரா? ஒருவருக்கு ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தாலே அவர் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்துடன்தான் இருக்க வேண்டுமா? இந்த மண்ணின் இறை நம்பிக்கை கலாச்சாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, அதே நேரம் எந்த மதத்தையும் பாரபட்சமாக பார்க்காமல் அரவணைக்கும் ஆன்மிகத்தை தழுவிய ஒருவர், சுயசிந்தனையுடன் மக்கள் நலனுக்காக அரசியலுக்கு வந்தாலும் ஒரு அமைப்பின் ஏஜென்ட் போல சித்தரிப்பது எவ்வளவு கீழான மனநிலை? “கருத்தியல்வாதி” என்றொரு பிம்பம் இருக்கிற ஒரே காரணத்திற்காக, நடுத்தெருவில் எப்படிப்பட்ட குப்பையையும் கருத்து என்ற பெயரில் வீசிவிடும் செருக்கை ராஜன் குறைக்கு யார் சொருகிவிட்டார்களோ??

நிறைவாக…

ரஜினி தேர்தலுக்கு வந்தாலும், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தெளிவான நோக்கம் கொண்டிருக்கிறார். ஆனால், ராஜன் குறையின் கட்டுரை, தான் ஆதரிக்கும் பெரியாரிய, திராவிட இயக்க அரசியலுக்கு மாற்றாக ஒரு அரசியல் துளிர்த்துவிடக்கூடாது என்கிற ஒரே நோக்கத்தோடு எழுதப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதனால்தானோ என்னவோ, பலவீனமான வாதங்களை உள்ளடக்கிய கருத்து செறிவற்ற அந்த கட்டுரைக்கு முடிந்த அளவிற்கு intellectual வண்ணத்தை திணிக்க முற்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட “சாயம் போன சட்டை” கட்டுரைகளால் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய நல்ல அரசியல் மாற்றத்தை தடுத்துவிடமுடியாது என்பதே 2021ல் ரஜினியின் வெற்றி சொல்லப்போகும் செய்தி.

6 comments
  1. Dharani Kumar

    Karuppar kootam backed by DmK against HINDU GODS and Devotees,
    Veruppar kootam backed by same against Rajni and his politics….

    Karuppar kootathai Kadavulukku yethiraga…
    Veruppar kootam Rajnikku yethiraga…
    D.K, DMK will fail…

  2. vijayan

    லூசு ரஜினி இது சினிமா அல்ல, வசனம் பேசுவதர்க்கு, தமிழ்நாட்டு மக்கள் உண்னை புறம் தள்ளுவர்கள், மற்றும் உன் பின்புலம் பஜக யுள்ளது என்று எல்லோருக்கும் தெரியும் ,So அமைதியாக இருப்பது நல்லது?

  3. P JAYARAMAN

    Excellent reply .These people are all getting money from.These corrupt political parties .That’s why they are afraid of rajini

  4. கோமதி தனபாண்டியன்.

    ரஜினியை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்பது உண்மையான வாதம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!