மாற்று அரசியல்

நீங்கள் எந்த வழி?

ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிவது குறித்து, முகநூலில் ஒரு தமிழ்த்தேசிய ஆதரவாளர் இவ்வாறு குறிப்பிட்டார் – “இங்கு பிழைக்க வந்த மராட்டியரான ரஜினியை நம்மை ஆள வைக்க நினைப்பது அடிமைத்தனம்”.

மேலோட்டமாகப் பார்த்தால், இந்தக் கருத்து பலரை உணர்ச்சிபூர்வமாக கட்டிப்போடக்கூடும்.  அறிவை மயங்கச் செய்யக்கூடும். ஆனால், சற்று திறந்த மனதுடன் அலசினால் நிச்சயம் தெளிவு பிறக்கும்.

கேள்வி 1: எல்லோரையும் ஏற்போமா?

ஆழ்ந்த அலசலில் உதித்த ஒரு கேள்வி – பிறப்பால் தமிழர் அல்லாத யார் வந்து நம்மை ஆள நினைத்தாலும் நாம் ஏற்றுக் கொண்டுவிடுவோமா?

உதாரணமாக – இந்திய கிரிக்கெட்டில் தோனி ஒரு உச்ச நட்சத்திர கேப்டன். நம்மில் பலருக்கு ரொம்ப பிடித்தவர். “சென்னை சூப்பர் கிங்ஸ்” அணியில் வருடக்கணக்கில் இருப்பதால் “நம்ம தல தோனி” என்று பெரும்பாலான தமிழர்களால் விரும்பப்படுபவர். பிறப்பால் பீகாரியான தோனி, சென்னையை தன் இரண்டாம் வீடு என்று கருதுவதாகவும் சொல்லியிருக்கிறார். அவர் நாளைக்கே தமிழக முதல்வர் வேட்பாளராக களமிறங்கினால் அவரை ஏற்றுக்கொள்வோமா?  மாட்டோம். தோனியை அப்படி ஏற்காத கோடிக்கணக்கான பலர், ரஜினியை முதல்வராக ஏற்கத் தயாராக இருக்கிறார்களே. ஏன்?

இந்த “ஏன்?” கேள்விக்கு பதில் வேண்டுமெனில், அடுத்து வரும் நான்கு “ஏன்?” கேள்விகளுக்கும் பதில் தெரிய வேண்டும்.

கேள்வி 2: தேசம் கடந்த நேசம்?

பலரால் கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய ஹீரோ – சே குவேரா. இவர் பிறப்பால் அர்ஜென்டைனர். தென் அமெரிக்க கண்டத்தின் தெற்குப்பகுதியில் உள்ள நாடு அர்ஜென்டினா. ஆனால், சே குவேரா வட அமெரிக்க கண்டத்தின் அருகிலிருந்த கியூபாவின் விடுதலைப் புரட்சியில் ஈடுபட்டார். விடுதலை பெற்ற கியூபாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியமைக்கும் பணியில் பெரும் பங்காற்றினார். அங்குள்ள நாணய நோட்டுகளில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட பதவியில் (இங்கு ரிசர்வ் வங்கி கவர்னர் போல) இருந்தார். சில ஆண்டுகள் தொழில் அமைச்சராக இருந்தார். பிறப்பால் அர்ஜென்டைனன் ஆன சே குவேரா கியூபாவின் தலையெழுத்தை மாற்றும் பதவிகளில் இருந்தது தகுமா என்று இன்றைய இனவாதிகள் யாரும் கொதிப்பதில்லையே. ஏன்?

கேள்வி 3: நாட்டுப்பற்றைக் கடந்த நலன்?

ஐரிஷ் வம்சாவளியில் லண்டனில் பிறந்த ஆங்கிலேயப் பெண்மணி அன்னி பெசன்ட். இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக சுயாட்சி (Home Rule) இயக்கத்தை நடத்தினார். 1917ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தார். “இந்திய மக்களின் விடுதலைக்கான ஒரு அமைப்புக்கு போயும் போயும் ஒரு ஐரிஷ்-பிரிட்டிஷ் பெண்மணி தலைவரா? இங்குள்ள கோடிக்கணக்கான மக்களில் ஒருத்தரும் கிடைக்கவில்லையா?” என்று பெரும்பான்மையோர் பொருமவில்லையே. ஏன்?

கேள்வி 4: இனம் கடந்த மொழி?

ஜோசப் பெஸ்கி ஒரு இத்தாலியர். இந்தியாவிற்கு கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்த பெஸ்கி, தமிழ் மீது பற்று கொண்டு தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் பெரும் பங்களிப்பு செய்தார். முக்கியமாக, தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் கொண்டுவந்தார்.”அதென்ன ஒரு இத்தாலியன் வந்து என் தாய்த் தமிழிலுள்ள எழுத்துக்களை சீர்திருத்துவதா? அதை நாம் ஏற்றுக்கொள்வதா?” என்று ஆவேசப்படாமல், அவரை “வீரமாமுனிவர்” என நம்மில் ஒருவர் போல கொண்டாடுகிறோமே. ஏன்?

கேள்வி 5: பிறப்பை புறந்தள்ளிய நீதி?

பெரியார் ஈ.வே.ரா. பிறப்பால் கன்னடர். தமிழ் மக்களுக்காக நிறைய சீர்திருத்த கருத்துக்களை முன்வைத்தவர். சமூகநீதிக்காக போராடியவர். அவரது கருத்துக்களிலும் அரசியலிலும் ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும், பெரும்பான்மை தமிழ்ச்சமூகம் பெரியாரை கன்னடர் என்று புறந்தள்ளியதில்லையே. ஏன்?

ஒரே பதில்

இந்த நான்கு “ஏன்?” கேள்விகளுக்கும் (கேள்வி 2 முதல் கேள்வி 5 வரை) ஒரே பதில்தான். ஒருவரை “இவர் நம்ம ஆளு” என்று ஏற்றுக்கொள்ள அவர் மரபணுவோ, ரத்தவழிப் பிறப்போ, மதமோ, தேசிய இனமோ, தேசமோ, பிரதேசமோ முக்கியமல்ல. அவர் அந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பதும், அங்குள்ள கலாச்சாரத்தை தழுவுவதும், அந்த மக்களின் உணர்வுகளை உளமார புரிந்து அவர்கள் வாழ்வியலோடு இரண்டறக் கலப்பதுமே முக்கியம். சுருக்கமாக – ஒருவரை அந்நியராக ஒதுக்கி வைத்துப் பார்க்கவோ, நம்மவர் என்று இழுத்து அணைத்து ஏற்கவோ மரபுவழிப் பிறப்பு தேவையில்லை; மனிதவழிப் பிடிப்பே தேவை.

  • அர்ஜென்டைனர் சே குவேரா கியூபா மக்களின் விடுதலை உணர்வை உளமார ஏற்று உயிரைப் பணயம் வைத்து போரிட்டார். கியூபா அவரை ஏற்றது.
  • ஆங்கிலேய அன்னி பெசன்ட் இந்தியர்களின் சுயாட்சிக்காக முழுமனதுடன் போராடினார். இந்தியா அவரை தன் இதயத்தில் வைத்தது.
  • ஜோசப் பெஸ்கி தமிழ் மீது தீராக் காதல் கொண்டு தமிழரின் மொழியியலில் முன்னேற்றம் தந்தார். தமிழர்கள் அவரை ஆரத்தழுவினர்.
  • பெரியார் “சமூகநீதி அவசியம்” என்று தன் மூச்சு நிற்கும் வரை ஊர் ஊராய் பிரச்சாரம் செய்தார். தமிழ்நாடு தன் வரலாற்றில் “தந்தை பெரியார்” என அவருக்குத் தனி இடம் தந்தது.

இவையாவும் மரபுவழிப் பிறப்பைக் கடந்து மனிதவழிப் பிடிப்பை ஏற்ற சில வரலாற்று உதாரணங்கள்.

ரஜினி தமிழரா?

இப்பொழுது ரஜினி சார்ந்த (முதல்) கேள்வியின் பதிலுக்கு வருவோம் –

  • ஓட்டு போடுவதற்காக “சொந்த ஊருக்கு போகிறேன்” என்று ரஜினி சென்னையை விட்டுப் போனதில்லை.
  • 40+ வருடங்களாக ஒரு கலைஞன் இந்த மண்ணின் மக்களை மகிழ்விக்க வேண்டுமெனில், அக்கலைஞனுக்கு இந்த மக்கள் மீதான நேசமும் அவர்களின் ரசனை உணர்வுகள் மீதான பிடிப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியம். ரஜினி சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
  • இந்த மாநில மக்களின் நலனை மனதில் வைத்ததால்தான், 1996 தேர்தலில் அன்றைய ஆளுங்கட்சிக்கு எதிராக பலமான கூட்டணி உருவாவதற்கும் வெற்றிபெறுவதற்கும் தீவிர ஆதரவு தந்தார்.
  • காவிரிக்காகவும், தென்னக நதிநீர் இணைப்புக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.
  • பாரதியை உணர்வதும், கல்கியிடம் (“பொன்னியின் செல்வன்”) உறைவதும், (சாலமன்) பாப்பையாவிடம் புதைவதும் உணர்வால் தமிழருக்கே நிகழும்; அது ரஜினிக்கு நிகழ்ந்திருக்கிறது.

இப்படியாக ரஜினி தமிழ்நாட்டு வாழ்வியலோடு இரண்டறக் கலந்தே வாழ்கிறார்.

ரஜினியை மரபுவழிப் பிறப்பால் “சிவாஜிராவ் கெய்க்வாட்” என்ற மராட்டியராகப் பார்ப்பதோ, மனிதவழிப் பிடிப்பால் “ரஜினிகாந்த்” என்ற தமிழராகப் பார்ப்பதோ நம் மனக்கண் பார்வையில் உள்ளது. பெரும்பான்மை தமிழ்ச்சமூகம் மனிதவழிப் பிடிப்பை ஏற்றிருக்கிறது என்பதே நிதர்சனம்.

மனிதம் வெல்லட்டும், நிலைக்கட்டும் .

6 comments
  1. சுரேஷ்

    சே குவேரா தவிர மற்றவர்கள் அரசியலில் இல்லை. சே குவேரா என்றுமே முதல் மந்திரியாக வர ஆசை பட்டதும் இல்லை. ஒரு இடத்தில் அவரே குறிப்பிடுகிறார் தன்னை விட இந்த மண்ணின் மைந்தன் ஃபிடல் காஸ்ட்ரோ தான் ஆள வேண்டும் என்று. அவர் ஏன் கியூபாவை விட்டு சென்றார் என்ற கேள்விக்கு பதில் தேடுங்கள்.

  2. சௌந்தர்

    ஹா ஹா சுரேசு.. அப்படி ஒரு பிடல் காஸ்ட்ராே இருந்தா நாங்க எதுக்குடா 70 வயசுல ரிஸ்க் எடுக்குறாேம். இருக்கும் அம்புட்டும் பிணந்தின்னிகள்..

  3. Prabakar M

    Please refer to Chief ministers of Madras Presidency in wikepedia, they were too honest Ministers and most of them were not tamilians.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!