உள்ளடக்கம்
திமுக vs பாஜக
இயல்பாகவா அல்லது திணிக்கப்பட்டதா என்று தெரியவில்லை – கருத்தியல் தளத்தில் இன்றைய தமிழக அரசியல், “திமுக vs அதிமுக” என்பதிலிருந்து விலகி “திமுக vs பாஜக” என்று நிற்கிறது. அதாவது, திராவிடம், இடதுசாரி, அரைகுறை மதச்சார்பின்மை போன்றவற்றை ஆதரித்து பேசினால் “திராவிடன்”. அப்படியில்லாமல், இந்து மதம், கார்பொரேட், காஷ்மீருக்கு 370 நீக்கம் – இவற்றை ஆதரித்து பேசினால் “சங்கி”. இவை இரண்டிற்கும் இடைப்பட்டு பேசினால், ஏதோ ஒருபக்கம் இழுக்கப் பார்க்கிறார்களே தவிர, கருத்தின் நியாயத்தை பார்ப்பதில்லை.
[நிற்க, “திராவிடன்”, “சங்கி” என்ற சொற்களை நான் மலிவாகக் கருதி பயன்படுத்தவில்லை. இன்றைய நடைமுறையில் இருக்கும் “கொள்கை அடையாள” சொற்களாகவே எடுத்துக் கொள்கிறேன்].
மேற்சொன்ன நிலை தமிழக பாஜகவுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில், வெறும் 2% வாக்கு வங்கியை வைத்துக்கொண்டு சரியான மாநில தலைமையும் இல்லாமல் தத்தளிக்கும் அக்கட்சி, தினந்தோறும் “காவி அரசியலை வேரறுப்போம்” என்று கூவிக்கூவி திராவிட அரசியலார் மூட்டும் அனலில் நன்றாகவே குளிர்காய்கிறது. திமுகவை பொறுத்தவரை, “அதிமுக பாஜகவின் அடிமை” என்று நிலைநாட்டிவிட்டதாலும், மொத்த இந்தியாவிலும் பாஜகவை எதிர்த்து (நேரடியாக இல்லாவிட்டாலும்) வெற்றிகண்ட மாநில கட்சி என்ற பெருமை இருப்பதாலும் “திராவிடம் vs ஆரியம்/இந்துத்துவம்” விளையாட்டு தொடரவே விரும்புகிறார்கள்.
இடையில் சிக்கிய “இரண்டும் கெடாதார்கள்”
இந்த “திராவிடன்”, “சங்கி” வலைகளில் விழுந்துவிடாமல் இரண்டு பக்கமும் இருக்கிற நல்லவைகளை/நியாயங்களை மட்டுமே ஏற்க விரும்புவோர் மற்றும் இரண்டு பக்கமும் இருக்கும் தவறுகளை ஏற்காதோர் என்ன செய்வது? இந்த இரண்டு பெரும் சத்தங்களிடையே அந்த நடுத்தரக் குரல்களின் சத்தம் பெரிதாக எடுபடுவதில்லை. சில சமீப நிகழ்வுகள் –
- சபரிமலையில் குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிப்பது கூடாது என்பது பாஜக-தரப்பு வாதம். அனுமதிக்க வேண்டும் என்பது திமுக-தரப்பு வாதம். (குறிப்பு: இங்கே நான் நீதிமன்ற தீர்ப்பை வைத்து பேசவில்லை. பொதுவான கொள்கைநிலை நிலைப்பாடை வைத்தே பேசுகிறேன்).
- சமீபத்தில் SRM கல்லூரியில் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். அது பற்றி திமுக-தரப்பு கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. பாஜக-தரப்பு சத்தம் எழுப்பியது. IITயில் ஒரு முஸ்லிம் மாணவி தற்கொலை செய்துகொண்டார். திமுக பொங்கி எழுந்தது; பாஜக-தரப்பில் அமைதி.
- முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார அடிப்படையில் 10%பேருக்கு இட ஒதுக்கீடு என்பதை (என்று பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தை) திமுக முழுதாக எதிர்த்தது.
- “விடுதலை சிறுத்தைகள்” தலைவர் திருமாவளவன் “அசிங்கமான பொம்மைகள் இருக்கும் இடம் (இந்துமத) கோவில்கள்” என்று பேசியதை பாஜக வன்மையாக கண்டிக்க, திமுகவோ அவ்விஷயத்தில் புத்தரே வியக்கக்கூடிய “தியான நிலை”யில் இருந்தது.
மேற்சொன்ன நிகழ்வுகளில் “திராவிடர்கள்” எதிர்வினை/நிலைப்பாடு எப்படி, “சங்கிகள்” எதிர்வினை/நிலைப்பாடு எப்படி, “இரண்டும் கெடாதார்கள்” (வேறு நல்ல வார்த்தை கிடைக்கவில்லை; அந்த இரு தரப்பினர் பார்வையில் இவர்கள் “இரண்டும் கெட்டான்கள்” எனப்படுவர்) எப்படி என்று பார்ப்போம்.
என் அனுமானத்தில், இந்த “இரண்டும் கெடாதார்கள்”தான் பெரும்பான்மை என்று தோன்றுகிறது. நியாயமாக பார்த்தால், இந்த “இரண்டும் கெடாதார்”களின் குரல்களுக்கே முக்கியத்துவம் இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் சமயத்தில் (அந்தந்த கால சூழ்நிலைக்கேற்ப) அவர்கள் ஏதோ ஒருபக்கம் சாய்வார்கள் அல்லது இழுத்துவிடப்படுவார்கள். அவர்களில் சிலர் மட்டுமே இருபக்கமும் போகாமல் நடுத்தரமான அரசியல் செய்யும் கட்சிகளை ஆதரிப்பார்கள்.
மொத்தத்தில், இந்த “இரண்டும் கெடாதார்”களின் குரல்கள் தேர்தல் இல்லாத காலங்களில் மட்டும் சன்னமாக ஒலித்து மறைந்துவிடுகின்றன.
ரஜினி எனும் ஒலிபெருக்கி
இதற்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்? திராவிட முரசொலிகளையும் சங்கி முழக்கங்களையும் தாண்டி, இந்த “இரண்டும் கெடாதார்”களின் குரல்கள் கேட்பதற்கு ஒரு சிறந்த ஒலிபெருக்கி (Loud Speaker) தேவை. இன்றைய அரசியல் சூழலில், அந்த நடுத்தரக் குரல்களின் ஒலிபெருக்கியாய் ரஜினிதான் இருப்பார் என்பதற்கு சில சான்றுகள் தருகிறேன். கடந்த இரண்டு வருடங்களில் நடந்த சில அரசியல் நிகழ்வுகளும், அதற்கு திமுக, பாஜக மற்றும் ரஜினியின் எதிர்வினை/நிலைப்பாடு கீழே உள்ள அட்டவணையில் உங்கள் பார்வைக்கு –
மேலுள்ள அட்டவணை நமக்கு தெளிவாக உணர்த்துவது என்னவென்றால், ரஜினி “இரண்டு துருவ” அரசியலை தவிர்த்து ஒரு “சமநிலை” அரசியலை முன்னெடுக்கிறார் என்பதே. அவரது தேர்தல் கூட்டணிக்குள் வரும் கட்சிகளும் இந்த சமநிலைச் சமன்பாட்டை ஏற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.
முடிவாக…
எனவே,
- நீங்கள் “இரண்டும் கெடாதார்”களில் ஒருவரென்றால்,
- உங்கள் குரல் சோர்ந்து/தேய்ந்து போகாமல் உயர்ந்து ஒலிக்க வேண்டுமென்றால்,
- “துருவ” அரசியலில் இருந்து “சமநிலை” அரசியல் நோக்கி தமிழ்நாடு பயணிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,
இந்த (ரஜினி) ஒலிபெருக்கியை நிச்சயம் பரிசீலனை செய்யுங்கள். உங்களால் மட்டுமே மாற்றம் நிகழும்.
இன்னும் 18 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன – வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி.
இ-மெயிலில் புதிய பதிவுகள்/கட்டுரைகள் பற்றிய குறிப்புகளைப் பெற –
லுக்மான் ஹக்கீம்
மிக தெளிவு
Yogi
Awesome super